For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டென்று மாறுது வானிலை…. தமிழகத்தில் மழை தொடரும் என்கிறார் ரமணன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Chennai receives surprise rains
சென்னை: திங்கட்கிழமை அதிகாலையில் கண்விழிக்கும் போதே சென்னைவாசிகளுக்கு மழை வரவேற்பு கொடுத்தது. மழையை பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்ட சென்னை மக்களுக்கு திடீர் மழை கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்தது என்றே கூறலாம்.

அக்டோபர் மாதத்தில் இருந்தே பருவமழை ஏமாற்றிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பின்னர் பெய்த மழை சென்னையை கொஞ்சம் குளிர்வித்தது என்றே கூறலாம்.

எதிர்பாராமல் பெய்த மழையினால் சில சங்கடங்களும் நேர்ந்தது. திங்கட்கிழமை காலையில் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும் வராது வந்த மழைக்கு வரவேற்பு கொடுத்து சிலர் நனைந்தனர்.

அதிகாலையில் மழை

சென்னையில் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, அடையாறு பகுதிகளில் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 6 மணிவரை பெய்தது. தெருவில் வெள்ளநீர் ஓடும் அளவிற்கு பெரியமழையாகவே பெய்தது.

வளிமண்டல சுழற்றி

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தீபகற்பத்தின் மேல் அடுக்குகளில் திடீர் சுழற்சி உருவாகி உள்ளது. நிலவுகின்ற இந்த சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரளவு மழை பெய்துள்ளது.

தகிக்கும் சூரியன்

சென்னை நகரில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, கடந்த சில நாட்களாகவே சூரியன் சுட்டெரிக்க தொடங்கியது. தினமும் சராசரியாக 30 செல்சியஸ் அளவு வெப்பம் பதிவானது.

மாறிய வானிலை

இந்தநிலையில் திங்கட்கிழமை அதிகாலை சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. திடீரென்று பெய்த இந்த மழையானது சென்னை நகர மக்களை குளிர்வித்தது. புறநகர் பகுதிகளிலும் நேற்று காலை முதலே லேசான மழை பெய்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

பதிவான மழை அளவு

பதிவு செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கேளம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 2 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மழை நீடிக்கும்...

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தீபகற்பத்தின் மேல் அடுக்கில் இந்த திடீர் சுழற்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறினார். சென்னை நகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரியில் முதல் மழை

பின்பனிக்காலத்தின் இறுதியில் இருக்கும் பிப்ரவரி மாதத்தில் அரிதாகவே மழை பெய்யும். கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி சென்னையில் 81.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதேசமயம் கடந்த 1984ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி சென்னை நகரில் மிக அதிக அளவாக 294 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

வசந்தத்திற்கு வரவேற்பு

வசந்தகாலம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் வசந்தத்தை வரவேற்கும் விதமாக பெய்துள்ள மழை தொடர்ந்தால் குடிநீர் பஞ்சம் வராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்றனர் சென்னை வாசிகள். வருணபகவான் மனது வைப்பாரா?

English summary
After experiencing dry weather for weeks, Chennaiites woke up on Monday morning to welcome pleasant showers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X