For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவோம்: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தென்மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சார்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மாலை மதுரையில் நடைபெற்றது.

பாராட்டு விழாவில் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பாக நினைவு பரிசு, அமைச்சர்கள் சார்பில் ஆளுயர மாலை, வீரவாள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இவ்விழாவில் ஏற்புரை நிகழ்த்திய முதலமைச்சர் ஜெயலலிதா, ".37 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட்டு; தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளதற்காக, விவசாயப் பெருங்குடி மக்களாகிய உங்கள் சார்பில் எனக்கு நன்றி தெரிவிக்கும் விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நீதியை கொண்டாடும் விழா

நீதியை கொண்டாடும் விழா

என்னைப் பொறுத்த வரையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நீதியை கொண்டாடும் விழா, தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதற்கான வெற்றி விழா என்றே இதனைச் சொல்ல வேண்டும். இந்த வெற்றி விழாவிலே பங்கேற்கும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு வெற்றி

விவசாயிகளுக்கு வெற்றி

இந்த வெற்றி வேளாண் பெருங்குடி மக்களாகிய உங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில், எனது தலைமையிலான அரசு அலைகளாயும், கரையாயும் இருந்து செயல்பட்டதால்தான் இன்று நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அணை நீர்மட்டம்

அணை நீர்மட்டம்

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. அணையின் முழு நீர்த்தேக்க மட்டமான 152 அடியிலிருந்து தற்காலிகமாக 136 அடிக்கு குறைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

தமிழக அரசு வழக்கு

தமிழக அரசு வழக்கு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அவமதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி என நிர்ணயம் செய்து ஒரு சட்டத் திருத்தத்தை கேரளா அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத் திருத்தம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டும் என்று கோரி 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கருணாநிதிக்கு அக்கறையில்லை

கருணாநிதிக்கு அக்கறையில்லை

முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்னையில் கருணாநிதிக்கு அக்கறை இருந்திருக்குமானால், மத்திய அரசில் அப்போது தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அப்போதே அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், இதை கருணாநிதி செய்தாரா? இல்லையே! அதற்கான அக்கறை கருணாநிதிக்கு இல்லை.

பலத்தின் மூலம் சாதிக்கலாம்

பலத்தின் மூலம் சாதிக்கலாம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். அதுவும் சிதறாத மனமாக இருக்க வேண்டும். அப்போது தான் அது ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து, அதிலிருந்து பலம் பிறக்கும். அந்தப் பலத்தின் மூலம் தான் நாம் எதையும் சாதிக்க முடியும். ஆனால், கருணாநிதியின் மனமோ சிதறிய மனம். வாழ்வளித்த தமிழர்களை அழிக்க நினைத்தவர். கருணாநிதி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்களின் அடிப்படையிலும், ஆய்வுகளின் அடிப்படையிலும், குழு தனது அறிக்கையினை உச்ச நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமர்ப்பித்தது.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களின் உண்மை நிலையையும், ஆய்வு அறிக்கையினையும் அடிப்படையாகக் கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நமக்கு கடந்த மே மாதம் வழங்கியது.

142 அடியாக உயர்த்த உத்தரவு

142 அடியாக உயர்த்த உத்தரவு

அந்தத் தீர்ப்பில், கேரளா அரசின் திருத்தச் சட்டம், முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரையில், அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், 2006 ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், இதற்கு கேரளா அரசு குறுக்கீடு ஏதும் செய்யக் கூடாது என்றும்; தமிழ்நாடு அரசு அணையின் பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூவர் குழு நியமனம்

மூவர் குழு நியமனம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து, மூவர் குழுவினை அமைக்குமாறு மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த மூவர் குழுவின் மேற்பார்வையில், கடந்த 17.7.2014 அன்று, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் வகையில், அணையின் அடைப்பான்கள், கீழே இறக்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

என்னைப் பொறுத்தவரை, தமிழக மக்கள்தான் என் மக்கள். அதனால் தான், உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முல்லைப் பெரியாறு அணையில் காலம் தாழ்த்தாமல், அதை என்னுடைய சொந்தப் பிரச்சனையாக கருதி நான் செயல்பட்டேன். நீங்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கினீர்கள். இதுதான் வெற்றியின் ரகசியம். இந்த வெற்றி நமது வெற்றி.

152 அடியாக உயர்த்துவோம்

152 அடியாக உயர்த்துவோம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் மீதமுள்ள பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர், அணையின் முழு நீர்த்தேக்க மட்டமான 152 அடி வரையில், உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

English summary
Chief Minister Jayalalithaa said on Friday that her government would make all efforts to raise the water level of the Mullaperiyar Dam to its full reservoir level of 152 feet after the residual strengthening works.Ms. Jayalalithaa was speaking after accepting felicitations at a rally organised here by farmers of five southern districts to thank her for the efforts to raise the level to 142 feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X