"2010 மெட்ரோ டெண்டரில் ஊழலா? ரூ.250 கோடி சேமிப்புதான்.." பாயிண்ட் பாயிண்டாக சென்னை மெட்ரோ விளக்கம்
சென்னை: 2010 மெட்ரோ பணிகளில் ஒப்பந்தம் வழங்க ஆல்ஸ்டம் நிறுவனத்துக்குச் சாதகமாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மெட்ரோ நிர்வாகம், இது குறித்து விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளது.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி ஒன்றை வெளியிட்டார். அதில் டாப் திமுக தலைவர்கள் குறித்து தகவல்கள் இருந்தது.
இருப்பினும், அண்ணாமலை தான் கூறிய தகவல்களுக்கு உரிய ஆதாரத்தை வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ டெண்டர்: மேலும், அண்ணாமலை 2006-11 காலகட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி அளித்ததிலும் ஊழல் நடந்ததாகக் கூறியிருந்தார். சென்னை மெட்ரோ மொத்த மதிப்பு ரூ.14,600 கோடியாக இருக்கும் நிலையில், கட்டுமான பணிகளை அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு வழங்கியதில், ரூ.200 கோடியை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், மெட்ரோவில் மத்திய அரசின் பங்கு 15% இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அமைப்பிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே இந்த குற்றச்சாட்டு குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. முதல்கட்ட கட்டுமானத்தின் போது, எந்தவொரு நிறுவனத்திற்கு விதிகள் திருத்தப்படவில்லை என்றும் அதில் எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மறுப்பு: இது குறித்து சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "2010ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், முதல் கட்ட திட்டத்திற்கான மெட்ரோ இரயில்கள் வாங்கும் போது அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குத் தேவையற்ற நன்மைகள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை.
ஒப்பந்த முறையில் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லை. உண்மையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொது கருவூலத்திற்கு நூற்றுக்கணக்கான கோடிகளை மிச்சப்படுத்தியுள்ளது. Deemed Exports நன்மைகளை வழங்குவதற்காகச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் செலவைக் குறைத்தது. மெட்ரோ இரயில்களுக்கான ஏலங்கள் அழைக்கப்பட்ட நேரத்தில், ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெட்ரோ பெட்டியின் விலை சுமார் ரூ. 10 கோடி.
250 கோடி சேமிப்பு: அந்த நேரத்தில் பெங்களூர் மெட்ரோவும் ஒரு மெட்ரோ பெட்டிக்கு சுமார் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்திய அரசின் 'டீம்ட் எக்ஸ்போர்ட்ஸ்' பலன்கள் அறிவிப்பின் காரணமாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு மெட்ரோ பெட்டிக்கு சுமார் 8.57 கோடிக்கு மெட்ரோ இரயில்களை வாங்க முடிந்தது. இதன் மூலம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சுமார் ரூ.250 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
கூடுதலாக, Alstom நிறுவிய புதிய வசதி காரணமாக ரோலிங் பங்குக்கான உள்ளூர் உற்பத்தி வசதிகள் மூன்றாக உயர்ந்துள்ளது. இது அதிக போட்டியை ஏற்படுத்தியுள்ளது மற்றும் முந்தைய CMRL கொள்முதலுடன் ஒப்பிடுகையில், மெட்ரோ இரயில்கள் குறைந்த விலையில் இந்தியாவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டது. எனவே, 'டீம்ட் எக்ஸ்போர்ட்ஸ்' சலுகைகளை வழங்குவதன் மூலம் அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்கள்/கார்ப்பரேஷனுக்கான பங்குச் செலவில் பெரும் சேமிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.
லஞ்சம் இல்லை: தேர்வு செய்யப்பட்ட ஏலதாரர் ஆல்ஸ்டாம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் உள்ளிட்ட அரசின் திட்டங்களை ஷெல் நிறுவனங்கள் மூலம் பெற லஞ்சம் கொடுத்ததற்காக பல்வேறு நாடுகளில் அபராத நடவடிக்கையை எதிர்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒப்பந்தம் எடுத்தவர் இத்தகைய தகாத நடத்தைக்காகத் தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டார் என்பது உண்மைதான் என்றாலும், CMRLல் கொள்முதலுடன் அவற்றை இணைப்பது முற்றிலும் தவறானது மற்றும் தீங்கிழைக்கும் செயல். இது சம்பந்தமாக, பின்வரும் உண்மைகள் கவனிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு லஞ்சக் குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கு அல்ஸ்டாம் $772 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்ட அமெரிக்க வழக்கில், லஞ்சக் குற்றச்சாட்டுகள் இந்தோனேசியா, எகிப்து, சவுதி அரேபியா, பஹாமாஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் உள்ள திட்டங்கள் தொடர்பானவை என்று அமெரிக்க நீதித்துறையின் உத்தரவு தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்தியாவில் எந்த திட்டமும் அந்த வரிசையில் சிக்கவில்லை.
திட்டவட்டமாக மறுப்பு: CMRL ஆல் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் நியாயமான மற்றும் வலுவான கொள்முதல் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை மீண்டும். வலியுறுத்துகிறது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். தேவையற்ற சலுகைகள், வெளிநாட்டு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் மற்றும் ஷெல் நிறுவனங்களுடனான தொடர்பு ஆகியவை தவறானவை. எனவே அவை முற்றிலும் மறுக்கப்படுகின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications