For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் மனைவி காலமானார் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர். என்.சங்கரய்யாவின் மனைவி எஸ்.நவமணியம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர். என்.சங்கரய்யா அவர்களின் மனைவி தோழர் எஸ்.நவமணியம்மாள், திங்களன்று மாலை 3.10 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 92.

 Communist leader Sankaraiyya's wife passed away

கடந்த 69 ஆண்டு காலமாக தோழர் என். சங்கரய்யாவின் உற்ற துணையாக, அவரது கட்சிப் பணியிலும், அரசியல் பணிகளிலும் தோளோடு தோள் நின்றவர் நவமணியம்மாள். 1947 ஆகஸ்ட் 14 அன்று மதுரை சதி வழக்கிலிருந்து சங்கரய்யா விடுதலையான சில நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 18 ஆம் தேதியன்று அவருக்கும் நவமணிக்கும் மதுரையில் திருமணம் நடைபெற்றது. மதுரை கட்சி அலுவலகத்தில் பி.ராமமூர்த்தி தலைமையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. பொன்னுச்சாமி - அன்பம்மாள் தம்பதியரின் புதல்வியான நவமணி ஆசிரியை பயிற்சி முடித்திருந்தார்.

அவருடைய அண்ணன் நல்லதம்பி, மதுரையின் ஆரம்பகால கட்சி உறுப்பினர்களுள் ஒருவராவார். அவர் மூலமாக நவமணிக்கு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. அண்ணன் நல்லதம்பியும், அவரது சகோதரி ஜெயமணியும் ‘வங்கப் பஞ்சம்' நாடகத்தில் நடித்துள்ளனர். நவமணியைப் போலவே அவரது மூத்த சகோதரி ஜெயமணியும், இளைய சகோதரி தனமணியும் கட்சி ஆதரவாளர்கள் ஆவர். தனமணி கட்சி உருவாக்கிய கலைக் குழுவில் பங்கேற்று நடனமாடுவது உண்டு.

நவமணி, மதுரையில் இந்திய - சோவியத் நட்புறவுக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் தொண்டராகச் செயல்பட்டுள்ளார். அக்காலகட்டத்தில் மதுரையில் மாதர் சங்கம் நடத்திய புதுமைக் கொலுவில் நவமணி முக்கியப் பங்கு வகித்துள்ளார். புதுமைக் கொலு என்பது பொம்மைகளுக்குப் பதிலாக அரசியல் தலைவர்கள் படங்கள், நாடுகளின் வரைபடங்கள் போன்றவற்றைச் சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்டு நடத்தப்பட்டதாகும். இதை ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கண்டுகளித்துள்ளனர்.

சங்கரய்யா - நவமணி திருமணமானது சாதி / மத மறுப்பு திருமணமாகும். திருமணத்திற்கு பிறகு, 1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மீது தடைவிதிக்கப்பட்டதால் சங்கரய்யா தலைமறைவு வாழ்க்கைக்கு உள்ளானார். அவரோடு நவமணியும் தலைமறைவு வாழ்க்கையை அனுபவித்தார். சென்னையில் செயல்பட்ட தலைமறைவு கட்சி மையத்தில் சங்கரய்யா, உமாநாத், பாப்பா உமாநாத், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். 1948 முதல் 1950 வரை இந்த நிலை நீடித்தது.

தலைமறைவு வாழ்க்கை உள்பட சங்கரய்யாவின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்விலும் நவமணி ஒரு தூணாக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர். என். சங்கரய்யா - நவமணி தம்பதியினருக்கு சந்திரசேகர், நரசிம்மன் என்ற இரண்டு மகன்களும், சித்ரா என்ற மகளும் உள்ளனர்.

தோழர் நவமணியம்மாள் மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் தோழர் என்.சங்கரய்யா, அவரது மகன்கள் மற்றும் மகள், பேரக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் எஸ். நவமணியம்மாள் அவர்களின் இறுதிச் சடங்கு நாளை (5.7.2016) காலை 11.00 மணிக்கு சென்னை, குரோம்பேட்டை, நியூகாலனி 5வது தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு, குரோம்பேட்டை, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Communist leader Sankaraiyya's wife navamaniyammapal passed away
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X