For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ப.சிதம்பரமா..?.. "எங்கே செல்லும் இந்த பாதை..."!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் தோல்வியை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி பெரும் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு விழித்து வருகிறது. கட்சியை வளர்க்க எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் மற்றொரு கோஷ்டிக்கு பிடிக்காமல் போவதால் முன்னும் செல்ல முடியாமல், பின்னுக்கும் வர முடியாமல் 'ஜாம்' ஆகி நிற்கிறது காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு வண்டி.

வாக்கு சதவீதம் சர்ர்.. சரிவு

வாக்கு சதவீதம் சர்ர்.. சரிவு

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியின் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், அனைத்திலும் படுதோல்வியை சந்தித்தது. கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் பெற்ற 1 லட்சத்தை தாண்டிய வாக்குகளை தவிர்த்து பார்த்தால் எங்குமே படுமோசமான தோல்விதான் மிஞ்சியது. 40 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4.31 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சியால் பெற முடிந்தது.

வாக்குகளை அடையாளம் காணவில்லை

வாக்குகளை அடையாளம் காணவில்லை

இத்தோல்விக்கு அகில இந்திய காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் காரணம் என்றாலும், தமிழக காங்கிரஸ் தலைமையின் வியூகமும் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியதுதான். காங்கிரசுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி அதிகம் உள்ளது. காமராஜருக்காகவே காங்கிரசுக்கு இன்னும் வாக்களித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால் அந்த வாக்குகளை சேகரிக்கும் முயற்சியை காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ரூட் மாறிப்போன ராகுல்காந்தி

ரூட் மாறிப்போன ராகுல்காந்தி

திருநெல்வேலி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த ராமசுப்பு, நாடாளுமன்றத்துக்கு தவறாமல் செல்பவர், கேள்விகள் கேட்பது போன்ற நாடாளுமன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டவர். ஊழல்களில் பெயர் அடிபடாதவர். ஆனால் சிட்டிங் எம்.பி.யான அவரது தொகுதிக்கு செல்லாமல், சமீபத்தில் கட்சியில் இணைந்த திருநாவுக்கரசுக்காக ராகுல்காந்தி பறந்துவந்து ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்தார். காங்கிரசின் வியூகம் அப்படி இருந்தது. வசந்தகுமாரும்கூட ஞானதேசிகனை 'பைபாஸ்' செய்து சோனியாவை தனது தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய அழைத்து வந்தாரே தவிர காங்கிரஸ் தலைமை அதற்கான துரும்பையும் கிள்ளவில்லையாம்.

புதுசா யாரையாவது போடுங்கப்பா..

புதுசா யாரையாவது போடுங்கப்பா..

காங்கிரசுக்கு ஒரு புதுமுகத்தை தலைவராக போட்டால் மக்கள் சற்று மாற்றாக கருதுவார்கள் என்பது அக்கட்சி தொண்டர்கள் எண்ணாக உள்ளது. இதற்கான காய் நகர்த்தல்கள் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பாக, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கார்த்தி ப. சிதம்பரம், முன்னாள் எம்.பி. டாக்டர் வள்ளல் பெருமான், கே.எஸ். அழகிரி, மாவட்டத் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.சி - எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு ஞானதேசிகனுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆனால் வழக்கம்போல கோஷ்டி தகராறு காரணமாக யாரை தலைவராக்குவது என்பதில் இழுபறி நீடிக்கிறது.

முதல்வர் வேட்பாளர் சிதம்பரமா..?

முதல்வர் வேட்பாளர் சிதம்பரமா..?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக ப.சிதம்பரத்தை நியமிக்கலாம் என்று ஒரு தரப்பினர் முயற்சி செய்து வருகிறார்கள். அந்தப் பதவிக்கு வருவதற்கு ப.சிதம்பரமும் விரும்புவதாகத் தெரிகிறது. அடுத்த சட்டசபை தேர்தலிலும் காங்கிரசை தமிழகத்தில் யாரும் கூட்டுக்கு சேர்ப்பதாக இல்லை என்பதால் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் வாய்ப்பு ஏற்படும். அப்போது காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், சிதம்பரத்தை அக்கட்சி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம். நிர்வாக அனுபவம் உள்ளவரான சிதம்பரத்தை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தினால், சிறு கட்சிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டு அவை காங்கிரசோடு கூட்டணி வைக்கும். அப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் சிதம்பரம் ஆதரவாளர்கள்.

வாசனை விட்டா எல்லாம் போச்சு..

வாசனை விட்டா எல்லாம் போச்சு..

சிதம்பரத்தை மாநில தலைவராக்க, ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை ஜி.கே.வாசன் அணி பலமானது. அவருக்குத்தான் ஆதரவாளர்களும் அதிகம். மாவட்டத் தலைவர்களும் நிறையபேர் ஜி.கே.வாசன் பக்கம்தான் உள்ளனர். சிதம்பரத்தை தலைவராக ஆக்கினால், ஜி.கே.வாசன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தனிக் கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. அப்படி தனது தந்தை மூப்பனாரைப்போல, வாசன் தனிக்கட்சி ஆரம்பித்தால், காங்கிரசுக்கு அடித்தளம் இல்லாமல் போய்விடும்.

வாசனே வரலாமே..

வாசனே வரலாமே..

இதனால் சிதம்பரத்தை புதிய தலைவராக நியமிக்க காங்கிரஸ் தயங்கிவருகிறது. அதேநேரம், வாசனை தலைவராக்க சிதம்பரம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஞானதேசிகன் பதவியில் தொடர இரு கோஷ்டியும் எதிர்க்கிறது. எனவே எங்கு செல்ல போகிறோம் என்ற தெளிவில்லாமல் காங்கிரஸ் ஜாம் ஆகியுள்ளது. தேர்தலில் போட்டியிட மறுத்ததால் ராகுல்காந்தியின் கோபத்துக்கு ஆளாகியுள்ள சிதம்பரம், தனது மகன் கார்த்திக் சிதம்பரம் மீதான ஆம்புலன்ஸ் ஊழல் குற்றச்சாட்டாலும் பின்னடைவை சந்தித்துள்ளார். இதை வைத்து வாசன் ஆதரவாளர்கள் காய்நகர்த்தினால் வாசனை தலைவராக வாய்ப்புள்ளது.

English summary
The Congress party which faced a humiliation defeat in the recently concluded Parliament election is hunting for it's new chief for Tamilnadu unit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X