For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவராத்திரி: குமரியில் கோவிந்தா.. கோபாலா’ பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: சிவராத்திரியை முன்னிட்டு திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து கோவிந்தா... கோபாலா பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டம் மிகவும் புகழ்பெற்றது ஆகும். சிவாலய ஓட்டம் என்பது மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 80 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிக்க வேண்டும்.

இந்த ஓட்டத்திற்கு என கர்ணபரம்பரை கதை கூறப்படுகிறது.

சிவாலய ஓட்டம் எப்படி வந்தது

புருடாமிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர, வேறு இறைவனை ஏற்கமாட்டார்.

Devotees go on ‘Sivalaya Ottam' to 12 temples

விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கிருஷ்ணன்.

பீமன் மூலமாக

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார் கிருஷ்ணன். குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அந்த புருடா மிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருடா மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார்.

ருத்ராட்ச வழிபாடு

‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருடா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு.

அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக் காணும் புருடா மிருகம், அந்த லிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன் னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் லிங்கமாக மாறும். புருடா மிருகமும் பூஜை செய்யத் தொடங்கி விடும் என்றார்.

சிவ விஷ்ணுவாக...

இப்படி பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனு டன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்'' என்று கூறி பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான்.

12 சிவ தலங்கள்

அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம்.

நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருடா மிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார்.

கர்ண பரம்பரை கதை

புருடா மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது. இப்படி கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் வணங்குகின்றனர்.

பாரம்பரிய பெருமை

பல்வேறு பாரம்பரிய பெருமைகளை கொண்ட இந்த சிவாலய ஓட்டம் முன்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று தொடங்கியது. இதில், மாலை அணிந்து விரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவ தரிசனம்

இவர்கள் முன்சிறையில் இருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருபன்றிக்கோடு, திருவிதாங்கோடு ஆகிய 11 கோவில்களை தரிசித்து விட்டு இன்று (வியாழக்கிழமை) நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.

கோவிந்தா... கோபாலா...

இந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும், பக்தர்கள் இடுப்பில் காவித்துணி கட்டிக் கொண்டு, கையில் சுருக்கு பையும், விசிறியும் எடுத்து செல்கின்றனர். சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி ‘கோவிந்தா- கோபாலா‘ என்ற பக்தி கோஷத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு கோவிலாக செல்வது சிறப்பம்சம். ஒவ்வொரு கோவிலுக்கு சென்றதும் அங்குள்ள குளத்தில் குளித்துவிட்டு இறைவனை வணங்கி, பிரசாதம் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு 12 சிவாலயங்களையும் தரிசனம் செய்து முடிப்பார்கள்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

குமரி மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று நடைபெற்ற சிவால ஓட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று மாலை முதல் மார்த்தாண்டம் நகரில் சாலை எங்கும், ‘கோவிந்தா-கோபாலா‘ என்ற பக்தி கோஷத்தை உச்சரித்தபடி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

பக்தர்களுக்கு வரவேற்பு

சிலர் மோட்டார் சைக்கிள்களிலும், வேன், கார் போன்ற வாகனங்களிலும் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப வழிநெடுகிலும் மோர், தேனீர், கஞ்சி போன்றவை பொது மக்களால் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

English summary
The three-day Maha Sivarathri festival in 12 shrines of Siva in Kalkulam taluks began at Thirumalai Mahadevar temple at Munchirai on Wednesday after the devotees from various southern districts as well as the neighbouring Kerala undertook ‘Sivalaya Ottam’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X