
சென்னை: ஜெயலலிதா இருந்தபோது இப்படித்தான் நடந்தது. அத்தனை பேர் அதிமுகவில் இருந்தாலும் கூட ஃபோகஸ் என்னவோ ஜெயலலிதா மீதுதான் இருக்கும். தற்போதைய சட்டசபையிலும் கூட அத்தனை பேர் இருந்தாலும் தினகரன் மீதுதான் அனைவரின் கவனமும் உள்ளது.
இன்று பொதிகை டிவியில் ஆளுநர் உரை நேரலையின்போதும் கூட அடிக்கடி கேமரா தினகரன் பக்கமும் போய் வந்தது முக்கியமாக கவனிக்கதக்கதாக இருந்தது. முதல்வரை விட தினகரனை அதிக முறை காட்டியது போல உணர நேரிட்டது.
தினகரன் முக்கியமான, கவனிப்புக்குரிய ஒரு உறுப்பினராக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார். காரணம், சூழல் அப்படி.

தனி ஒருவன்
தனி ஒருவனாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார் தினகரன். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யபப்பட்டு விட்டனர். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே சட்டசபையில் தினகரன் தனித்துக் குரல் கொடுத்தாக வேண்டிய நிலை.

தினகரன் மீது முழுப் பார்வையும்
இதன் காரணமாக தினகரன் மீதே அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. அவர் எப்படிச் செயல்படுவார், என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. அவரை ஆளுங்கட்சியினர் எப்படி சமாளிப்பார்கள் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது.

"அம்மா" தொகுதி எம்எல்ஏ
தினகரனை ஆளுங்கட்சி புறக்கணித்து விடவும் முடியாது. காரணம், அவர் ஜெயலலிதா வகித்து வந்த பதவியில் வந்து அமர்ந்துள்ளார். அதாவது ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக வந்துள்ளார். எனவே இவரைப் புறக்கணித்தால் அது ஜெயலலிதாவைப் புறக்கணிப்பதாக வெளியில் பேசப்பட்டு விடும் சிக்கல் உள்ளது.

ஜெ. இடத்தில் தினகரன்
ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவினர் கணக்கிலேயே வர மாட்டார்கள். ஜெயலலிதாதான் முழு ஃபோகஸாக இருப்பார். இப்போதும் அதே நிலை திரும்பியுள்ளதாகவே உணர முடிகிறது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்குக் கிடைத்த முக்கியத்துவம் தினகரனுக்கு தாமாகவே வந்துள்ளது. அதிமுகவினரை விட தினகரன் மீதுதான் அனைவரின் பார்வையும் அதிகமாக விழுகிறது.

தெளிவாக செயல்பட்டால்
தினகரன் மட்டும் சட்டசபையில் தெளிவாக, ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டால் நிச்சயம் அவர் தமிழகத்தின் கவனத்தையும் ஈர்க்க முடியும். அந்த நோக்கில்தான் அவரும் செயல்படுவார் என்றே தெரிகிறது.

அந்த 18 பேரும் திரும்பி வந்தால்
ஒரு வேளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் மீண்டும் எம்எல்ஏக்களாக தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சட்டசபைக் கூட்டங்கள் மேலும் கலகலப்பாக மாறி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தத்தில் தற்போதைய சட்டசபைக் கூட்டத் தொடரின் ஹைலைட்டாகவும், முக்கிய பிரபலமாகவும் தினகரன் உருவெடுத்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!