For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் மறைவு: கருணாநிதி நேரில் அஞ்சலி, ஜெயலலிதா இரங்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கலையுலகம் உள்ளவரை கே.பாலசந்தரின் புகழ் மேலும் மேலும் வளரும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் கே.பாலசந்தர் என்றும் தனது இரங்கல் செய்தியில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் சிகிச்சை பலனின்றி இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலச்சந்தர் மறைவு குறித்து கேள்விப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல் ஆளாக மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி அஞ்சலி

கருணாநிதி அஞ்சலி

பாலச்சந்தரின் மறைவு குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, கலையுலகம் உள்ளவரை கே.பாலசந்தரின் புகழ் மேலும் மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் கே.பாலசந்தர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதியுடன் அவரது மனைவி ராஜத்தி அம்மாள், மகள் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்களும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். பாலச்சந்தரின் குடும்பத்தினருக்கு கருணாநிதி ஆறுதல் கூறினார்.

ஜெயலலிதா இரங்கல்

ஜெயலலிதா இரங்கல்

இயக்குனர் கே.பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி:

இயக்குனர் பாலச்சந்தர் தான் இயக்கிய திரைப்படங்களில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர். தொலைக்காட்சிகளில் வெளியாகும் இக்கால நெடுந்தொடர்களுக்கும் இவர்தான் வித்திட்டார். தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்று திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அவரின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரையுலகில் அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப இயலாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஈஸ்வரன் இரங்கல்

ஈஸ்வரன் இரங்கல்

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைவு, தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரிய பேரிழப்பு என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

"வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் அனுபவித்தவர். சிறந்த படைப்பாளிகளை தட்டி கொடுப்பதும், மனம் விட்டு பாராட்டுவது போன்ற நற்குணங்களை சக படைப்பாளிகள் அவரிடம் கற்று கொள்ள வேண்டும்" என்றும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சரத்குமார் அஞ்சலி

சரத்குமார் அஞ்சலி

மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் உடலுக்கு நடிகர் சரத்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் பாலச்சந்தரின் இறப்பு மரணம் அல்ல நமக்கெல்லாம் இழப்பு என இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

பாலச்சந்தரின் சாதனைகள் மறக்க முடியாதது என இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், இயக்குநர் பாலச்சந்தரின் மறைவு நிச்சயம் அனைவருக்கும் மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி. பாலச்சந்தர் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார். அவரது சாதனைகள் என்றென்றும் அவரது பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும். என் போன்ற இயக்குனர்கள் அவரது பட்டறையில் இருந்து வந்தவர்கள் என்பதில் பெருமை. வித்தியாசமான திரைப்படங்கள், விழிப்புணர்வு படங்கள் படங்களை தந்தவர் பாலச்சந்தர். நாடகம், திரைப்படம் டி.வி.,யில் அவர் செய்த சாதனைகள் மறக்க முடியாதது என்று எஸ்.பி. முத்துராமன் தெரிவித்தார்.

பொதுமக்கள் அஞ்சலி

பொதுமக்கள் அஞ்சலி

இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல் காலை 6 மணி முதல் அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், வெள்ளிக்கிழமையன்று இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Former DMK Chief Minister Karunanidhi Paid Homage to Director K. Balachander. Jayalalitha condolence to Balachander’s death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X