For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரணிக்கும் தருவாயிலும் என் தேசத்திற்காக எழுவேன்: லீ குவான் யூ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: "நான் நோய்வாய்பட்டிருந்தாலும், மரணத்திற்குப் பின்னர் என்னை சவக்குழியில் இறக்கிக் கொண்டிருந்தாலும் என் தேசத்திற்கு ஏதேனும் நெருக்கடி எனில் நான் மீண்டும் எழுவேன்..." என்று உறுதிபட தெரிவித்தவர் சிங்கப்பூரின் தேசத்தந்தை லீ குவான் யூ.

31 ஆண்டுகாலம் சிங்கப்பூரை ஆட்சி செய்த பின்னரும் தான் பார்த்து பார்த்து செதுக்கிய தேசத்தை காக்க ஆலோசகராக பல்லாண்டுகாலம் பணியாற்றிவர் லீ.

Discovery Channel air Lee Kuan Yew’s documentary

42 வயதில் தொடங்கி அந்திம காலம் வரை சிங்கப்பூர் என்ற தன்னுடைய தேசத்தை காக்க உற்சாகமாக பலவித நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற ஒரு தேசத்தை உருவாக்கி... கசப்புதான் என்றாலும் மக்களின் நலனுக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியவர் அதனால்தான் அவரது மரணத்திற்காக தேசமே கண்ணீர் சிந்துகிறது.

லீ குவான் யூவின் மரணத்திற்கு உலக தேசத்தலைவர்கள் அனைவரும் இரங்கல் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவை ஒட்டி டிஸ்கவரி சேனல் "தி ஃபாதர் ஆஃப் தி நேசன்" என்ற ஆவணப்படத்தை நேற்றிரவு ஒளிபரப்பி அஞ்சலி செலுத்தியது. அந்த ஆவணப்படம் பல்வேறு உண்மைகளை உணர்த்தியது.

Discovery Channel air Lee Kuan Yew’s documentary

கலங்கிய லீ

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர். மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

உறக்கம் தொலைந்த இரவு

1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. 42 வயதில் மிகப்பெரிய சுமை இருந்தது.

மண் மீதான நம்பிக்கை

ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே என்றார்.

Discovery Channel air Lee Kuan Yew’s documentary

ஊழலற்ற ஆட்சி

சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், தானும் தனது அமைச்சரவை சகாக்களும் வெண்மை நிற ஆடைகளை அணிய அறிவுறுத்தினார். தூய்மையின் அடையாளம் வெண்மை. ஊழலற்ற ஆட்சிக்கு இதுதான் அடையாளம் என்றார் லீ.

சுத்தமான நகரம்

சேரிப்பகுதிகளை அகற்றினார் சுகாதாரமான அனைவருக்கும் ஒரு வீடு அவசியம் என்பதை உணர்ந்து முதலில் அதற்காக செயல்பட்டார். தன்னுடைய தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார்.

கசப்பான மருந்துகள்

கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை - இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது.

நல்ல பலன் கிடைக்கும்

இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. "நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்" என்றார். தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.

பத்திரிகைளுக்கு கட்டுப்பாடு

ஆங்கிலத்தை தேசத்தின் மொழியாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே முன்னேற முடியும் என்பதை உறுதியாக உணர்ந்த லீ அதை அமல்படுத்தினார். இதை சில சீன பத்திரிகைகள் எதிர்த்தன. பத்திரிகை என்பது நாட்டின் நான்காவது தூண் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் எல்லாம் ஒன்றிணைந்து அரசியல் கட்சி தொடங்குங்கள் என்று அரைகூவல் விடுத்தார்.

தகுதியான அமைச்சர்கள்

அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. "மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்" என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.

வாரிசு அரசியல்

பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்" என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.

மனைவிக்கு மரியாதை

தன் மனைவி மீது லீ குவான் யூவிற்கு மிகப்பெரிய மதிப்பும் காதலும் உண்டு. பொதுவாழ்விலும், சொந்த வாழ்விலும் எந்த வித கறையும் படாத தலைவராக இருந்தவர் லீ. ஒருமுறை தாய்லாந்து சென்ற போது அவரிடம் சில பெண்களை அனுப்பிவைத்தனர். ஆனால் அதை நாசூக்காக தவிர்த்து தான் தன்னுடைய மனைவிக்கு உண்மையானவர் என்பதை நிரூபித்தவர்.

எளிமை ஆரோக்கியம்

30 ஆண்டுகாலம் பிரதமராக பதவி வகித்தாலும் தனது அரசியல் வாழ்வில் உண்மை, நேர்மையாக இருந்த லீ எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். சாதாரண விமானப் பயணம் மேற்கொள்வார். ஒற்றை அறையிலேயே தங்குவாராம். அதேபோல எளிமையான உணவுகள் உட்கொண்டு தனது ஆரோக்கியத்தை பாதுகாத்தார். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் குறைவாக சாப்பிடுங்கள். நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள் என்று தன் நாட்டு இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அரசியல் ஓய்வு

2011 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் லீ. "தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம் என்றார் லீ.

விளையாட்டு இல்லை

சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன்.

நான் மீண்டும் எழுவேன்

நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் நோய் வாய்பட்டிருந்தாலோ.. மரணத்திற்கு பிறகு என்னை கல்லறையில் இறக்கும் போதோ, என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்! என்று உறுதிபடச் சொன்னவர் லீ. அவரது மரணம் இன்றைக்கு ஒரு தேசத்தையே கலங்க வைத்திருக்கிறது.

படமல்ல பாடம்

லீ யின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் உலக அரசியல் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல... செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான இந்த ஆவணப்படம் மீண்டும் இன்றைக்கு இரவு 10 மணிக்கும், 27ஆம் தேதி இரவு 11 மணிக்கும், 28 இரவு 10 மணிக்கும் மார்ச் 29 இரவு 9 மணிக்கும் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது. ஒரு தேசத்தின் தந்தை எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் லீ யின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தை பார்க்கலாம்.

English summary
Discovery Channel pays tribute to the man who is regarded as the founding father of modern Singapore in ‘FATHER OF A NATION: LEE KUAN YEW’, a one-hour special that celebrates his life and chronicles some of his greatest achievements. The programme encores on March 25, at 10pm; March 27 at 11pm; March 28, 10pm and March 29 at 9pm
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X