For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி மருத்துவ கல்வியில் நுழைவுத் தேர்வா? கி.வீரமணி கடும் எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நுழைவுத் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் அதற்கு எதிராக இந்திய மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வைத் திணிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியத் துணைக் கண்டத்திலேயே சமூகநீதிக்கான உரிமைக் கொடியை ஏற்றியது தமிழ்நாடுதான் -திராவிடர் இயக்கம்தான். சமூகநீதிக்கு ஆபத்து வரும்பொழுதெல்லாம் தோளுயர்த்திப் போராடி, சமூகநீதியைப் பாதுகாத்துக் கொடுத்த திராவிடர் இயக்கத்தின் வரலாறு சாதாரணமானதல்ல. பார்ப்பனீயத்தின் ‘சித்து' வேலைகள் இடை இடையே நேர்முகமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக, கொல்லைப்புறம் வழியாக சமூகநீதியைப் பலகீனப்படுத்த பார்ப்பனீயம் பல்வேறு ‘சித்து' வேலைகளில் ஈடுபட்டு வருவது வாடிக்கைதான்.

DK opposes move to introduce common entrance test for medical admissions

அதில் ஒன்றுதான் இந்திய மருத்துவக் குழு - மருத்துவக் கல்வியில் இளங்கலை, பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்பான துணைக் கல்விகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தவேண்டும் என்ற கருத்தாகும். இந்த நுழைவுத் தேர்வு என்ற நச்சரவம் இடை இடையே தலைநீட்டிக் கொண்டுதானிருக்கும். நாம் தடியைத் தூக்கியவுடன் பொந்துக்குள் பதுங்கிக் கொள்ளும்.

நுழைவுத் தேர்வின் வரலாறு

நுழைவுத் தேர்வு என்ற ஒன்றை எடுத்துக்கொண்டாலும், இதற்கென்று ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் டாக்டர் நாவலர் அவர்கள் (ஆட்சியின் கருத்தல்ல) தன்னிச்சையாக நுழைவுத் தேர்வு என்ற ஒரு பேச்சை எடுத்தார். தந்தை பெரியார் தொடக்கத்திலேயே தடியை ஓங்கினார் (‘விடுதலை' அறிக்கை, 17.7.1972) கருத்தின் கருவிலேயே அது சிதைக்கப்பட்டு விட்டது.

அதன் பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் எச்.வி.ஹண்டே நுழைவுத் தேர்வைப்பற்றி வாய் திறந்தார் (1982). அடுத்தகணமே அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டோம் (23.3.1982) கடுமையான எதிர்ப்பின் காரணமாகப் பதுங்கியது. அந்த நுழைவுத் தேர்வு என்னும் விரியன் குட்டி 1984 இல் அதே எம்.ஜி.ஆர். ஆட்சியில் வெளியில் வந்தது. அப்படி ஓர் அறிவிப்பு வந்ததுதான் தாமதம் - உடனே திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னைப் பெரியார் திடலில் கூட்டினோம் (25.3.1984).

போராட்டம்

நுழைவுத் தேர்வை பின்வாங்காவிட்டால் அனைத்துக் கட்சி சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எச்சரித்துத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தோடு நின்றுவிடவில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் - 23 இடங்களில் நுழைவுத் தேர்வு ஆணையை எரிக்கும் போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது (23.6.1984). எம்.ஜி.ஆரின் நுழைவுத் தேர்வை சி.பி.எம். மட்டும் வரவேற்றது - ஆதரித்தது.

ஜெ. ஆட்சிக் காலத்தில்.....

1984 ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த நுழைவுத் தேர்வினை செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது ரத்து செய்யப்பட்டது (9.6.2005). அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் ரத்து செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது (27.6.2005). இந்த நேரத்தில் ஒரு தகவலை நினைவூட்டுவது பொருத்தமானது; நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்குமுன் முதலமைச்சருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது. வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, பல்வேறு பாடத் திட்ட முறைகள் உள்ளதால், அவைகளிலிருந்து தேர்வு பெறுவோரிடம் உள்ள மதிப்பெண்கள் சம அளவில் இருக்க வாய்ப்பு இல்லாததால், அவற்றைச் சமப்படுத்தும் வகைக்கான பரிந்துரைகளை ஒரு மாதம், இரு மாதங்களுக்குள் பெற்று, அதனை உடனடியாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் வகையில், பரிந்துரைகளைப் பெற்று அதனை உடனடியாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் வகையில் ஓர் அவசர சட்டத்தைப் பிறப்பித்தால், நீதிமன்றம் இதனைத் தடுக்காது என்ற கருத்தினைத் தெரிவித்திருந்தும் (‘விடுதலை', 16.1.2006) அதனைப் பரிசீலிக்காத தன்மையால், சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டது. இரண்டு முறை அ.தி.மு.க. அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்தும், நீதிமன்றம் செல்லாது என்றே கூறிவிட்டது (27.6.2005 மற்றும் 27.2.2006).

ரத்து செய்த தி.மு.க. அரசு..

2006 ஆம் ஆண்டில் வந்த கருணாநிதி தலைமையிலான அரசு முறைப்படி கல்வியாளர் முனைவர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் (7.7.2006) பரிந்துரைகளை ஏற்று தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டு (5.3.2007) குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

வழக்கம்போல சமூகநீதிக்கு எதிரான சக்திகள் சென்னை உயர்நீதிமன்றம் சென்றபோது, முறைப்படி ஆய்வு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருந்ததால், சட்டம் செல்லும் என்று அதே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது (27.4.2007).

மழை ஓய்ந்தும் தூவானம் விடவில்லை என்ற கதையாக இந்த முறை மத்திய அரசிலிருந்து இந்தப் ‘பூகம்பம்' புறப்பட்டது. அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதுதான் அந்தப் பூகம்பம்!

இந்திய மருத்துவக் குழு மட்டுமல்ல - அதற்கு இணக்கப் பாட்டுப் பாடுவதற்குப் பொருத்தமாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில்சிபல் இருந்தார் - 2013 இல் இந்தியா முழுமையும் ஒரே நுழைவுத் தேர்வு என்பது எனது கனவு என்றே அறிவித்தார்.

அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை எதிர்த்து - வழக்கம்போலவே திராவிடர் கழகம் போர்க்கொடி தூக்கியது. மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது (29.12.2010). மருத்துவக் கவுன்சிலின் முடிவை எதிர்த்து தி.மு.க. அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி திரு.ஜோதிமணி இடைக்காலத் தடை விதித்தார் (6.1.2011).

மத்திய அரசின் நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க. அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு வாதாடியது. வேறு வழியின்றி மத்திய அரசும் மாநிலங்களில் கருத்தறிந்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டது.

தமிழ்நாட்டில் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு இருந்தது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அவர்களும், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை நிறுத்தவேண்டும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்குக் கடிதமும் எழுதினார்.

அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் நுழைவுத் தேர்வுத் திணிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து அரும்பெரும் தீர்ப்பினை மூவர் அடங்கிய அமர்வு இறுதியாக அளித்து விட்டது (18.7.2013).

மீண்டும் நுழைவுத் தேர்வா?

மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வை நடத்திட உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியதற்குப் பிறகு, அவ்வமைப்பு இப்பொழுது நுழைவுத் தேர்வைத் திணிப்பது நீதிமன்ற அவமதிப்பே!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டம்ஸ் கபீர் நீதிபதிகள் விக்கிரமஜித் சிங் ஆகிய இருவரும், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, நுழைவுத் தேர்வு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பில் கூறி இருந்தனர்.

மூன்றாவது நீதிபதி ஏ.ஆர்.தவே மாறுபட்ட தீர்ப்பைக் கூறி இருந்தாலும், பெரும்பான்மை என்ற முறையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது.

இதற்குப் பிறகும்கூட அகில இந்திய மருத்துவக் கவுன்சில் பழையபடி அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்திடப் பரிந்துரை செய்துள்ளது என்றால், இதன் தன்மையை எண்ணிப் பார்க்கவேண்டும் - இது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பே!

பிளஸ் டூ படித்துத் தேர்வு எழுதி அதில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுக்குப் பிறகு இன்னொரு தேர்வு என்பது ஏன்? அப்படியானால், முதலில் எழுதப்பட்ட பிளஸ் டூ தேர்வுக்கு மரியாதைதான் என்ன?

இந்தியாவில் பல்வேறு கல்வித் திட்ட முறைகள் நடைமுறையில் உள்ளன. மாநிலப் பாடத் திட்டம் - மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் முறை என்று பல்வேறு திட்டங்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க முடியுமா?

பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. திட்டத்தில் படித்தவர்களே நுழைவுத் தேர்வால் பயன் அடைவார்கள் என்பது வெளிப்படை.

கிராமப்புற மாணவர்களுக்கே பாதிப்பு

பெருநகரங்களில், நகரப்புறங்களில் உள்ள பள்ளிகள், அவற்றில் உள்ள வசதிகள், கிராமப்புறப் பள்ளிகளில் உண்டா? கரும்பலகை இல்லாத நிலைகூட உண்டே! இந்த ஏற்றத் தாழ்வைச் சமன்படுத்த, மத்தி அரசு மேற்கொண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் என்ன? இத்தகைய ஏற்ற தாழ்வுகள் வெளிப்படையாக இருக்கும்போது, ஒட்டுமொத்தமாக அனைவரையும் சம நிலையில் வைத்துப் பார்ப்பது - மதிப்பெண்களைக் கொண்டு கணிப்பது நியாயமற்ற, சமூக அநீதியான அணுகுமுறையல்லவா!

நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் (21.2.2006) தெரிவிக்கப்பட்டுள்ள புள்ளி விவரம் முக்கியமானது. கடந்த ஆண்டு (2004- 2005) பிளஸ் டூ தேர்வை 5 லட்சத்திற்கும் அதிகமான இருபால் மாணவர்கள் எழுதினர். இவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலோர் அதிக மதிப்பெண் எடுத்திருந்தனர்; பிளஸ் டூ தேர்வும் நுழைவுத் தேர்வைப் போன்றதுதான். ஆனால், கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1195 இடங்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 227 தான். அதனால்தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தோம் என்று தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

நுழைவுத் தேர்வு கிராமப்புறத்தைச் சார்ந்தவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது இதன்மூலம் வெளிப்படையாகத் தெரியவில்லையா?

நுழைவுத் தேர்வை எழுதவேண்டுமானால், அதற்கான ஆயத்தப் பயிற்சிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய கிராமப்புறத்து மக்கள் எங்கே செல்லுவார்கள்? பணம் இருந்தாலும் கிராமப் பகுதிகளில் அதற்கான பயிற்சி வசதிகள் உண்டா? தக்க நூலகங்கள் உண்டா? இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்காத அரசு நுழைவுத் தேர்வைத் திணிப்பது அம்மக்களை வஞ்சிப்பது ஆகாதா?

நுழைவுத் தேர்வுதான் தகுதிக்கு அளவுகோலா? நுழைவுத் தேர்வுபற்றிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் கூறிய கருத்துதான் மிகவும் பொருத்தமானது - சரியானதும்கூட!

‘‘நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சம நிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட ‘கோன் பனேகா குரோர்பதி' தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை ‘டிக்' செய்யும் வாய்ப்புள்ளது'' என்று தீர்ப்பிலேயே சுட்டிக்காட்டி உள்ளனரே! (27.4.2007).

மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் 200-க்கு 190-க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள்தானே சேர்க்கப்படுகிறார்கள் - இந்தத் தகுதி போதாதா? டில்லி பல்கலைக் கழகத்திலும், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய இட ஒதுக்கீடு சரிவரக் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோரின் கருத்து முக்கியமானது. அந்நாள்களில் தேர்ச்சி பெற குறைந்த மதிப்பெண்கள் 35 ஆகும். அம்பேத்கர் 37 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்; கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால், உங்களுக்கு ஒரு அம்பேத்கரும், அருமையான அரசமைப்புச் சட்டமும் கிடைத்திருக்குமா? என்று கேட்டனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். இதற்கு என்ன பதில்?

நுழைவுத் தேர்வில் தவறே நடக்க இடம் இல்லை என்பதும் உண்மைக்கு மாறானது. மருத்துவ முதுநிலைப் பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 45 டாக்டர்கள் உள்பட 52 பேர்கள்மீது சி.பி.அய். வழக்குத் தொடர்ந்ததா, இல்லையா?

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் எந்த வகையில் தரமற்றுப் போய்விட்டனர்? அதற்கான புள்ளி விவரங்கள், மதிப்பீடுகள் ஏதேனும் உண்டா?

நுழைவுத் தேர்வு என்று வரும்போது ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதினால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத் தானே அனுகூலம்?

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பதே அறவே இல்லாத போது, அதற்கான சட்டம் இருக்கும்போது, நீதிமன்ற தீர்ப்பும் இருக்கும்பொழுது மத்திய அரசு மாநில உரிமையில் அத்துமீறி நுழையலாமா? இது மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடும் ஆதிக்க எண்ணம், அக்கிரமும், மாநில சுயாட்சிக்கு எதிரானதும் அல்லவா!

நெருக்கடி நிலை காலத்தில் 1976 இல் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்ற அபகரிப்பால், இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றுதானே மாநில அரசுகள் கருத முடியும்? மறுபடியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற போராட்டம் வெடித்தாகவேண்டும் என்ற நிலையைத்தான் மத்திய அரசும், அகில இந்திய மருத்துவக் கவுன்சிலும் உருவாக்கியுள்ளன. மாநில அரசுகள் உடனடியாக சிந்திக்கவேண்டிய இடம் இது!

அய்.ஏ.எஸ். என்பதுபோல, அய்.ஈ.எஸ். (அகில இந்திய கல்வித் துறையை) உருவாக்கவேண்டும் என்ற கருத்தை ஏற்கெனவே உலவவிட்டுள்ளனர்; அதற்கு இது ஒரு முதற்படி என்கிற ஆபத்தை மாநில அரசுகள் உணர்ந்து, ஒரே குரலில் எழுந்து போராட முன்வரவேண்டும்.

மத்திய அரசும் சரி, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலும் சரி, தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

அரசியல் ரீதியாகவும் இதற்கான விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இந்த வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் - வழிநடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கி.வீரமணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DK leader K Veeramani has opposed the Centre's plan to introduce a common entrance test for admissions to medical colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X