For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வில்லாய் வளையும் தேர்தல் ஆணையம்… வீணாய் போகும் ஜனநாயகம்… டாக்டர் ராமதாஸ்

அதிமுகவிற்காக தேர்தல் ஆணையம் வில்லாய் வளைவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ஆணையம் அதிமுகவிற்காக வில்லாய் வளைகிறது என்றும் இதனால் ஜனநாயகம் வீணாக போகிறது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மூன்று தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதற்குவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா கையெழுத்திடுவதற்கு பதிலாக கைரேகை பதிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் காட்டிய மின்னல் வேகமும், தேர்தல் விதிகளுக்கு மாறாக நடந்துள்ள அடுக்கடுக்கான குளறுபடிகளும் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன.

Dr. Ramadoss condemns Election commission

இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னம் ஒதுக்கீட்டு ஆணைப்படி, அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்காக, தலைமையால் நியமிக்கப்பட்ட ஒருவரின் கையெழுத்திடப்பட்ட பி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். சின்னம் ஒதுக்கீட்டுக்கான பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு? என்பதை தெரிவிக்கும் 'ஏ' படிவத்தில் கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் கையெழுத்திடுவார். அதிமுகவைப் பொறுத்தவரை இந்த இரு படிவங்களிலும் ஜெயலலிதா தான் கையெழுத்திட வேண்டும். ஜெயலலிதா கையெழுத்தைக் கொண்ட முத்திரை பதிப்பதோ, வேறு வகைகளில் ஜெயலலிதாவின் கையெழுத்தை பதிவு செய்வதோ செல்லாது. அதிமுக பொதுச்செயலாளர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவதால், அவரால் கையெழுத்திட இயலாது என்றும், அதனால் அதற்கு பதிலாக கைரேகையை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அதிமுக விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கிறது. அதன்படி ஜெயலலிதா கைரேகை பதிக்கப்பட்ட படிவங்கள் வேட்பு மனுவுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சின்னம் ஒதுக்கீட்டுக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அதற்கான அதிகாரம் பெற்றவரின் கையெழுத்து மட்டுமே இடம் பெற வேண்டும் என்ற நிலையில், அதற்கு பதிலாக கைரேகையிட்டால் போதுமானது என்ற சலுகையை ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் எந்த அடிப்படையில் வழங்கியது என்பது தெரியவில்லை. 1968ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணையின் 13ஆவது விதி தான் சின்னங்கள் ஒதுக்கீட்டுக்கு வழிகாட்டுகின்றன. இவ்விதியின் (e) உள்விதிப்படி ஏ மற்றும் பி படிவங்களில் மையால் மட்டும் தான் கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டும்; அச்சு மூலமாகவோ, முத்திரை மூலமாகவோ கையெழுத்திடப்பட்டிருந்தாலும், படிவங்கள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டாலும் அவை நிராகரிக்கப்பட வேண்டும். சின்னம் ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்படும்போது அது பற்றி முடிவெடுக்க தேர்தல் சின்னங்கள் சட்டத்தின் 18ஆவது விதியில் சில சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எனினும், அவை சின்னம் ஒதுக்கீடு பற்றி விளக்கம் அளிப்பது குறித்தவை தானே தவிர, சலுகை அளிப்பதற்கானவை அல்ல. ஆனால், தேர்தல் ஆணையமோ, ஏ மற்றும் பி படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்திடாமல் இருக்க சலுகை அளித்திருக்கிறது. இது அதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ள அத்துமீறிய ஆதரவாகும்.

ஒருவேளை தேர்தல் ஆணையத்திற்கு அந்த அதிகாரம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், ஏ மற்றும் பி படிவங்களில் ஜெயலலிதா தான் கைரேகை பதித்தார் என்பதற்கு அரசு மருத்துவர் ஒருவர் தான் சான்றொப்பம் வழங்க வேண்டும் என ஆணையம் கூறியிருப்பது அபத்தமானது. ஜெயலலிதா தமிழக முதலமைச்சர். அந்த வகையில் அவருக்கு அளவிட முடியாத அதிகாரம் உள்ளது. ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அதிகாரத்தை அவரைச் சுற்றியுள்ள சிலர் தவறாக பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அவர்களின் அதிகாரத்திற்கு அமைச்சர்களும், உயரதிகாரிகளும் பணிந்து செல்வதாகக் கூறப்படும் நிலையில், இது தான் ஜெயலலிதாவின் கைரேகை என சான்றொப்பம் அளிக்கும்படி அரசு மருத்துவருக்கு கட்டளையிடப்பட்டால், அவரால் அதை மறுக்க முடியாது என்பது தமிழக அரசியலை அறிந்த அனைவருக்கும் தெரியும். அவ்வாறு இருக்கும் போது, தேர்தல் ஆணையம் விதித்துள்ள இந்த நிபந்தனை, இவ்விஷயத்தில் முறைகேடு நடந்தால், அதை எவ்விதத்திலும் தடுக்காது.

இவை அனைத்தையும் தாண்டி, இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு உதவ தேர்தல் ஆணையம் காட்டிய வேகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. படிவங்களில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை பதிக்க அனுமதி கோரும் அதிமுகவின் கடிதம் கடந்த 26-ஆம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இராஜேஷ் லக்கானியிடம் அளிக்கப்படுகிறது. அப்படி ஒரு கடிதத்தை அதிமுகவின் சார்பில் யார் அளிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளனவா? அவை இந்த விஷயத்தில் கடைபிடிக்கப் பட்டனவா? என்பதெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு கடிதம் கிடைத்த அடுத்த நிமிடமே, அக்கடிதத்தை அவசர, அவசரமாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புகிறார். இந்திய தேர்தல் ஆணையமும், அதற்கு வேறு வேலையே இல்லை என்பதைப் போல அடுத்த நாளே அதிமுகவுக்கு சாதகமாக கடிதம் எழுதுகிறது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதப்பட்ட அக்கடிதம் தேர்தல் அதிகாரிக்கு வந்து சேர்வதற்கு முன்பே, அதன் விவரங்கள் அதிமுக மேலிடத்திற்கு சென்று, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பி. பழனியை அழைத்தோ, அழைக்காமலோ அவரது முன்னிலையில் சான்றொப்பம் பெறப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அடுத்த சில மணிகளில் 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்கின்றனர். இப்படி ஒரு மின்னல் வேகத்தை தேர்தல் ஆணையம் இதுவரை பின்பற்றியது இல்லை. அனைவரும் இதே வேகத்தை கடைபிடித்தால் இந்தியா எப்போதோ வல்லரசாக மாறியிருக்கும்.

2016ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுகவும், அதிமுகவும் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றத்தக்கவை அல்ல என்றும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி தேவசகாயம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார் மனு அளிக்கிறார். அதுகுறித்து மே 15-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆணையம் கூறி இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக பதில் மனு தாக்கல் செய்கிறது; திமுக தேர்தல் முடிந்த பிறகு தாக்கல் செய்வதாக கூறிவிடுகிறது. அதிமுக பதில் மனுவில், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நிதியை திரட்டும் வழிமுறைகள் தேர்தல் அறிக்கையில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் அப்படி எதுவும் இல்லை. தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட்டிருந்தால் அதிமுக விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று அதை தள்ளுபடி செய்து தேர்தலையே நிறுத்தியிருக்கலாம். ஆனால், ஆணையம் அவ்வாறு செய்யாமல், தேர்தல் முடிந்து சரியாக 100 நாட்கள் கழித்து 23.08.16 அன்று அதிமுகவின் விளக்கத்தை சிறிய எச்சரிக்கையுடன் நிராகரிக்கிறது. அப்போது ஒரு வரி பதிலை ஆய்வு செய்ய 100 நாள் எடுத்துக் கொண்ட தேர்தல் ஆணையம், இப்போது இந்த சிக்கலான விஷயத்தில் மின்னல் வேகத்தில் முடிவெடுத்தது எப்படி? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.

அதிமுகவுக்கு அதன் சின்னத்தைப் பெற அனைத்து உரிமைகளும் உள்ளன. அதற்கான விதிகளின்படி அச்சின்னத்தை அக்கட்சி பெற எந்தத் தடையும் இல்லை. மாறாக, விதிகளுக்கு முரணான வகையில் சின்னத்தை பெற முயலுவதும், அதற்கு வசதியாக தேர்தல் ஆணையம் வில்லாய் வளைவதும் இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தாகும். தேர்தல் விதிகளிலும், நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையே இந்நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder leader Dr. Ramadoss condemned Election commission for bending their rules and regulation for Jayalalitha and ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X