திருவனந்தபுரம்-திருச்சி இண்டர்சிட்டி ரயிலில் முன்பதிவு துவக்கம்… முதல் பயணத்திற்கு பயணிகள் ஆர்வம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை:ரயில்வேத்துறை பகல் நேரங்களில் பயணிகள் மிககுறைந்த கட்டணத்தில் இரண்டு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் வகையில் இண்டர்சிட்டி ரயில்களை இயக்கி வருகிறது.

இந்த ரயில்களில் குளிர்சாதன சாய்வு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், இரண்டாம் வகுப்பு சாதாரண இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டிகள் பத்து பெட்டிகள் முதல் 15 பெட்டிகள் வரை இணைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு முன்பதிவில்லாத பெட்டிகளில் அதிக அளவில் இருப்பதால் ஏழ்மையாக பயணிகள் மிக குறைந்த கட்டணத்தில் அதிக அளவில் பயணிக்க முடியும்.

Extension Of Trichy Intercity To Trivandrum, reservation starts

இது போன்ற ரயில்கள் காலையில் ஒரு நகரத்திலிருந்து புறப்பட்டு மதியம் அடுத்த நகருக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மறுமார்க்கமாக மதியம் புறப்பட்டு காலையில் புறப்பட்ட இடத்துக்கு இரவில் சென்றுவிடும். இந்த ரயில்கள் பொதுவாக ஒரு மார்க்கம் 300 முதல் 500 கி.மீ தூரம் வரையிலும் இயக்கப்படுகிறது.

போதிய ரயில் இல்லை

குமரி மாவட்ட பயணிகள் தினசரி வேலைவாய்ப்பு, உயர்கல்வி, அலுவல், வணிகம் உள்ளிட்ட பணிகளுக்காக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, கோவை போன்ற பல்வேறு நகரங்களுக்கு லட்சக் கணக்கில் பயணிக்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் பயணிகள் பகலில் பயணிக்க போதிய ரயில் வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஒரே ரயில்

நாகர்கோவிலிருந்து மதுரை மார்க்கம் காலை 7:15க்கு புறப்படும் கோவை பயணிகள் ரயில் சென்ற பிறகு மாலை 5:40 மணிக்கு தான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயிலுக்கு இடையே பத்து மணி நேரத்துக்கு எந்த ஒரு தினசரி ரயில் சேவையும் இல்லை. இதே போல் மறுமார்க்கமும் ரயில்வசதி இல்லை.

கோரிக்கை

திருச்சியிலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு பகல் நேரத்தில் பயணிக்கும் வகையில் இண்டர்சிட்டி ரயில் 2012-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு ஜுலை 14 முதல் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து திருநெல்வேலிக்கு பகல் நேரத்தில் இயக்கப்பட்டுவரும் இன்டர்சிட்டி ரயிலை குமரி மாவட்டத்துக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கம், குமரி மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ரயில்வே துறைக்கும், மத்திய அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தது.

உடனடி பலன்

கோரிக்கைகளின் பலனாக இந்த ரயில் ஜுலை மாதம் 15-ம் தேதி முதல் நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார். இந்த ரயில் வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்பதிவு தொடக்கம்

தற்போது ஜுலை மாதம் 15-ம் தேதி முதல் நீட்டிக்கப்படும் இந்த ரயிலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது. இந்த ரயிலில் குளிர்சாதன வகுப்பு சாய்வு இருக்கை வசதியும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியும், முன்பதிவில்லாத பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகளில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எத்தனை பெட்டிகள்?

குளிர்சாதன வகுப்பு சாய்வு இருக்கை பெட்டியில் 35 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் 335 இருக்கைகளும் முன்பதிவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 15 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், ஒரு குளிர்சாதன சாய்வு இருக்கை வசதி கொண்ட பெட்டியும், இரண்டு எஸ்எல்ஆர் என்று கூறுப்படும் ஊனமுற்றோர், மகளிர் பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சம் என்ன?

இந்த ரயில் நீட்டிப்பு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது, குமரி மாவட்டத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நீட்டிப்பு செய்யப்பட்ட முதல் ரயில் ஆகும். இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகள் நெல்லை மார்க்கம் பகலில் 10 மணி நேரம் ரயில் இல்லாத குறையை போக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது மட்டுமில்லாமல் 18 லட்சம் மக்கள் தொகை உள்ள குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் பயனுள்ள வகையில் இந்த ரயில் இயக்கப்படுவது சிறப்பம்சம் ஆகும்.

எவ்வளவு தூரம் பயணம்?

இந்த இண்டர்சிட்டி ரயில் திருச்சியிலிருந்து நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரத்துக்கு மொத்தம் 462 கி.மீ பயண தூரத்தை 8 மணி 20 நிமிடத்தில் மணிக்கு சராசரியாக 55.5 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய நாகர்கோவிலிருந்து முன்பதிவு கட்டணம், சேவைவரி போன்றவை உட்பட வெவ்வேறு பகுதிகளுக்கு செல்ல வசூலிக்கப்படும் கட்டண விபரம்:

கட்டணம் இவ்வளவுதான்

பயண விபரம் ஏசி 2ம் வகுப்பு

நாகர்கோவில் - திருச்சி 570 160
நாகர்கோவில் - மனப்பாறை 535 150
நாகர்கோவில் - திண்டுக்கல் 485 135
நாகர்கோவில் - மதுரை 415 115
நாகர்கோவில் - விருதுநகர் 375 105
நாகர்கோவில் - சாத்தூர் 345 95
நாகர்கோவில் - கோவில்பட்டி 305 90
நாகர்கோவில் - மணியாச்சி 305 80
நாகர்கோவில் - திருநெல்வேலி 305 75
நாகர்கோவில் - வள்ளியூர் 305 60
நாகர்கோவில் - குழித்துறை 305 60
நாகர்கோவில் - திருவனந்தபுரம் 305 70

பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை வரை இயக்கப்பட்ட இந்த ரயிலை குமரிக்கு நீட்டிப்பு செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட பயணிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த ரயில் இயங்கும் முதல் நாளில் பயணம் செய்ய தங்கள் மகிழ்சியை தெரிவிக்கும் வகையில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirunelveli train passenger welcomed Extension Of Trichy Intercity To Trivandrum. They reserved tickets for their first travel.
Please Wait while comments are loading...