For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர் பிரச்சனை: பேச்சுவார்த்தையின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

Fishermen issue: Karunanidhi wants centre, state governments to be careful during talks
சென்னை: மீனவர் பிரச்சனை குறித்து நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளின்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்து பேசும் கூட்டம் 20-ந் தேதி டெல்லியில் நடக்கப்போவதாக ஒரு செய்தி வருகிறது; சென்னையில் நடைபெற போவதாக மற்றொரு செய்தி வருகிறது! எது உண்மை என்று யாரும் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. அனைத்துத் தரப்பிலிருந்தும் தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இந்திய-இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அண்மையில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தலைமையிலான அதிகாரிகள் குழு 14-1-2014 அன்று டெல்லி வந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இதே இலங்கை அமைச்சர், இரண்டு நாட்களுக்கு முன்பு, இலங்கையில் கூறிய செய்தி என்ன தெரியுமா? ‘‘இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை ஒரே நேரத்தில் விடுவிக்க தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக, இலங்கை பகுதியில் நுழைந்து மீன்பிடிப்பதால், எங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது'' என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, தமிழக மீனவர்களின் நலன் கருதி உண்மை நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்திய-இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்காக ஆறு அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும்; இந்த குழுவில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த தலா மூன்று அதிகாரிகள் இடம் பெறுவர் என்றும்; இந்திய குழுவுக்கு மத்திய வேளாண்மைத்துறை செயலாளரும், இலங்கை குழுவுக்கு அந்த நாட்டின் மீன்வளத்துறை தலைமை இயக்குனரும் தலைமை வகிக்க உள்ளதாகவும்; இந்த குழுவின் முதல் பேச்சுவார்த்தை இன்று (16-1-2014) நடக்க விருப்பதாகவும் நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடக்கவிருப்பதாக சொல்லப்படும் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் பங்கு என்ன என்பதைப்பற்றி எந்த விளக்கமும் இல்லை. அதையும் அதிமுக அரசு தான் தமிழக மீனவர்களுக்கு விளக்க வேண்டும்.

மீனவர் பிரச்சினை குறித்து நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அரசும், மாநில அரசும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும், கவனமாகவும் செயல்பட வேண்டும். ஏனெனில் இலங்கை சிங்கள அரசு தொடர்ந்து பேசுவது ஒன்றாகவும், செய்வது வேறொன்றாகவும் முரண்பாடுகளின் மொத்த உருவமாக காட்சியளிப்பதை யாரும் மறந்துவிட முடியாது.

2009-ம் ஆண்டு இலங்கை போரின்போது, போரை நிறுத்திவிட்டதாக உலக நாடுகளையும், இந்திய அரசையும் நம்ப வைத்துவிட்டு, அதற்கு மாறாக போரைத் தொடர்ந்து நடத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்ததை நம்மால் என்றைக்கும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சென்ற வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசும்போது, ‘‘வடக்கு மாகாண நிர்வாகத்திற்கு குறுக்கீடாக இருப்பது ராணுவம் தான். வடக்கு மாகாணம், ராணுவ முகாம்கள் நிறைந்த பகுதியாகிவிட்டது. உள்நாட்டுப் போரின்போது இடம் பெயர்ந்த பல குடும்பங்கள் இன்னும் சொந்த இடம் திரும்ப முடியாமல் தவிக்கின்றன. தனியார் நிலங்களையும், சில இடங்களில் விவசாய நிலங்களையும் இலங்கை ராணுவம் கையகப்படுத்தி கொண்டுள்ளது. நிலம் தமக்கே சொந்தமானதாக இருந்தாலும் அதில் முகாமிட்டுள்ள ராணுவத்தினர் பயிரிடும் விளைபொருள்களை உள்ளூர் பகுதி விவசாயிகள் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றனர். பெண்களும், குழந்தைகளும் ராணுவத்தினரின் மிரட்டலுக்கு உள்ளாகி வேதனைப்படுகிறார்கள். கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. ஆளுநராக உள்ள இலங்கை முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரலுடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பணிபுரியும் ஊழியர்கள் ஆளுநர் சொல்வதை மட்டும் கேட்டு நடந்து கொள்கிறார்கள்'' என்றெல்லாம் மனம் நொந்து கூறியிருக்கிறார்.

ஏற்கனவே இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த உறுதிமொழிகளுக்கு நேர்மாறானவை என்பதையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், அதற்கு முரணான காரியங்களே இலங்கையிலே நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதையும் இந்திய அரசு மனதிலே கொண்டு, தற்போது நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தைகளின்போது மிகுந்த எச்சரிக்கையாக இருந்து தமிழக மீனவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்து, அவர்கள் இனியும் இலங்கை கடற்படையினரின் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படாமல் நிம்மதியாக வாழ்க்கையை நடத்திட உதவ வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi has asked the centre and state governments to be careful while having talks with Sri Lanka in connection with the fishermen issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X