1 வாரத்தில்.. அடுத்தடுத்து 4 ஆக்சன்! தமிழ்நாடு மீது போகஸை திருப்பிய மோடி! என்னாச்சு? இதுதான் காரணமா?
சென்னை: பிரதமர் மோடி கடந்த 7 நாட்களில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழ் மீதும், தமிழ்நாடும் மீதும் கவனம் செலுத்தும் விதமாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.
சமீபத்தில் ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருந்தார் . ஜப்பானில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள ஹிரோசிமா நகருக்கு பிரதமர் மோடி சென்று இருந்தார். அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் பிடன் உடன் சந்திப்பு, அதன்பின் ஜப்பான் பிரதமர் கிஷிடா உடன் தனிப்பட்ட சந்திப்பையும் நடத்தினார்.
தமிழ்நாடு - கரூர் கவனம்:ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கே கரூரில் தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து இருந்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கரூரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை நிற உடையை அணிந்து இருந்தார்.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் இந்த உடையை அணிந்து இருந்தார். இது கரூரில் இருக்கும் காக்காவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட உடை ஆகும். பிளாஸ்டிக் பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஆடை ஆகும் இது. அந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நூலாக்கி, அதை வைத்து உடை நெய்து இவர்கள் தயாரித்து உள்ளனர்.
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட துணியாலான ஜாக்கெட்டை அவர் அணிந்து இருந்தார்.
மோடி திருக்குறள்:இதையடுத்து பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றார். அங்கு அவர் திருக்குறளை வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம் அடைந்தார். தோக் பிசின் மொழியில் திருக்குறள் அங்கு பிரதமர் மோடி மூலம் வெளியிடப்பட்டது.
பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான தோக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டது தமிழர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோடி தமிழ்:இதையடுத்து இன்று டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்' மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டதற்கான காரணங்களை தெரிவித்தார். அதில், தமிழ் என்பது இந்தியாவின் மொழி.
அது இந்தியர்களின் மொழி. தமிழ் மொழி என்பது நமது மொழி. இது ஒவ்வொரு இந்தியரின் மொழியாகும். அதோடு உலகில் பழமையான மொழியாக தமிழ் உள்ளது. பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்' மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட வாய்ப்பு கிடைத்தது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று மோடி தமிழை புகழ்ந்து பாராட்டு பேசினார்.
தமிழ்நாடு - செங்கோல்:புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவ முடிவு செய்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவிடம் ஆகஸ்ட் 14, 1947 இரவு சுமார் 10:45 மணிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து நம் நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அறிகுறியாக இந்த செங்கோல் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆதினம் மூலம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது.

அதை புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வைக்க முடிவு செய்துள்ளார். ஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை வைத்து உருவாக்கப்பட்ட செங்கோலை பிரதமர் மோடி அங்கே வைக்க உள்ளார்.
ஏன் இப்படி?:இப்படி பிரதமர் மோடி கடந்த 7 நாட்களில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழ் மீதும், தமிழ்நாடும் மீதும் கவனம் செலுத்தும் விதமாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.
லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பிரதமர் மோடி இப்படி செய்கிறாரா? இல்லை 2026ல் தமிழ்நாட்டில் வெற்றிபெற இப்படி செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் தென்னிந்தியாவில் இருந்து பாஜக முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வழிகளை பாஜக மேற்கொண்டு உள்ளதோ.. இதை மனதில் வைத்தே பிரதமர் மோடியின் சமீபத்திய நிகழ்வுகள் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications