செவிலியர் மணிமாலா தற்கொலை விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் : வேல்முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் மணிமாலாவின் தற்கொலைக்கு நீதி வழங்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் மணிமாலா, கடந்த 10ம் தேதியன்று அங்குள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்று வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 தற்கொலை செய்துகொண்ட செவிலியர்

தற்கொலை செய்துகொண்ட செவிலியர்

அந்த அறிக்கையில், இதற்குக் காரணம், அவரின் மேலதிகாரிகளான உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி, தலைமை மருத்துவர் தமயந்தி இருவருக்குமிடையேயான பனிப்போரும், அதன் காரணமாக இருவருமே மணிமாலாவுக்குக் கொடுத்துவந்த தொடர் கெடுபிடிகளும்தான். வெள்ளக்கோவில் வட்டார அரசுப் பள்ளி, அங்கன்வாடி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து மருந்துகள் கொடுக்கும் பணி சக்தி அகிலாண்டேஸ்வரியின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. ஆனால் அவர் தன் பணியைச் சரிவரச் செய்வதில்லை. காலையில் பணிக்குச் செல்வதாக மருத்துவமனைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு பாதி வழியில் இறங்கி வேறெங்கோ சென்றுவிடுவார்.

 மிரட்டிய மருத்துவர்

மிரட்டிய மருத்துவர்

இதனைத் தெரிந்துகொண்ட தமயந்தி, 'மருத்துவர் இல்லாமல் செவிலியரான நீ எப்படி மருந்து கொடுக்கலாம்' என்று மணிமாலாவைக் கேட்டு வாட்டியெடுத்து, அவருக்கு ‘குற்றக் குறிப்பாணை' (மெமோ) கொடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற மணிமாலா, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பெரிய நரிமேட்டில் உள்ள தன் குடும்பத்தாரிடம் சொல்லி அழுது அரற்றியிருக்கிறார். அதேசமயம் மறுநாள் சக்தி அகிலாண்டேஸ்வரி, 'மெமோவுக்குப் பதில் விளக்கம் சொல்வதாக, என்னைக் காரணம் காட்டினாய் என்றால் உன்னை நான் சும்மா விடமாட்டேன்' என்று மணிமாலாவை கடுமையாக மிரட்டியிருக்கிறார்.

 தற்கொலை செய்துகொண்ட மணிமாலா

தற்கொலை செய்துகொண்ட மணிமாலா

இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த மணிமாலாவை, 10ம் தேதியன்று மாலை புறநோயாளிகள் பிரிவில் பணியில் இருந்தபோது, தமயந்தி அவரை சொல்லவே கூசும்படியான தகாத வார்த்தைகளால் கண்டபடித் திட்டித் தீர்த்திருக்கிறார். இதனை மெல்லவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் உள்ளுக்குள்ளேயே பொருமித் துடித்த மணிமாலா, நேராகத் தன் அறைக்குச் சென்றார். மனமுடைந்த அவர் இரவு 7 மணி அளவில் அறையில் யாருமே இல்லாத நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 எதிர்கட்சிகளும் போராட்டம்

எதிர்கட்சிகளும் போராட்டம்

இதையடுத்து உடற்கூறாய்வுகாக மணிமாலாவின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

மணிமாலாவின் தற்கொலைக்கு மேலதிகாரிகளான சக்தி அகிலாண்டேஸ்வரியும் தமயந்தியும்தான் காரணம் என்பதை அறிந்து மணிமாலாவின் உறவினர்களும் காங்கேயம் மருத்துவமனைச் செவிலியர்கள் உள்பட அனைத்துச் செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கினர். மூன்று நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன.

 துறைரீதியான நடவடிக்கை

துறைரீதியான நடவடிக்கை

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், 13ம் தேதி நள்ளிரவில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் வடிவேல் அவர்கள் வந்து பேசி கீழ்க்கண்ட உறுதிமொழிகள் அளிக்கப்பட்டது. உடனடி நடவடிக்கையாக தலைமை மருத்துவர் தமயந்தி, உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் மீது காவல்துறை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருவாய் வட்டாட்சியர் தலைமையில் தனி விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.

 நிவாரணம் கிடைக்க ஏற்பாடு

நிவாரணம் கிடைக்க ஏற்பாடு

மேலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலம் செவிலியர் மணிமாலா குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், மணிமாலாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பொது சுகாதாரத் துறையில் பணி வழங்கப்படும் என்றும் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மணிமாலாவின் உடலைக் குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர். இந்த உறுதிமொழிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்வதுடன், இனி இதுபோல் சோகங்கள் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுமாறு வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Velmurugan Requests Government should act upon Nurse Suicide issue. Earlier A Nurse committed suicide while in duty due to Doctors scoldings and the Nurses went on protest.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற