எச். ராஜாவிற்கு எதிராக கொந்தளித்த தமிழகம்... பயந்து போய் பதிவை நீக்கினார்!

சென்னை : தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டிருந்த கருத்தை பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பயந்து போய் எச். ராஜா நீக்கியுள்ளார்.
திரிபுராவில் புரட்சியாளர் லெனினின் சிலை உடைக்கப்பட்டது நாடு முழுவதும் பொதுஉடமைவாதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது ஏதோ வரலாற்று சாதனை என்ற ரீதியில் ஒரு கருத்தை பதிவிட்டு சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டார் எச். ராஜா.
லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று லெனினின் சிலை இன்று திரிபுராவில் உடைக்கப்பட்டது நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவெரா ராமசாமியின் சிலை என்று மிரட்டும் ரீதியில் ஒரு பதிவை போட்டிருந்தார்.

அரசியல் கட்சியினர் எதிர்ப்பு
எச். ராஜாவின் இந்த கருத்து தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. சமூக நீதிப் போராளி என்று போற்றப்படும் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராத போதே எச். ராஜா பேசுவது யார் கொடுத்த தைரியம் என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கொந்தளித்தனர்.

தமிழக பாஜக கைவிட்டது
மேலும் எச்.ராஜாவின் கருத்து அவருடைய சொந்த கருத்து, இதற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என்று தமிழிசை சவுந்திரராஜனும் எச். ராஜாவை கழட்டி விட்டார். இதனால் தான் சார்ந்த கட்சியிலேயே எச். ராஜாவிற்கு ஆதரவு இல்லாமல் போனது.

குண்டர் சட்டம் போட வேண்டும்
வன்முறையை தூண்டும் விதமாக கருத்து பதிந்த எச். ராஜா மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ராஜா மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என்ற கோரிக்கைகளும் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளன.

சர்ச்சை கருத்தை நீக்கிய ராஜா
இந்நிலையில் இன்று காலையில் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட அந்த சர்ச்சை கருத்தை எச். ராஜா நீக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் எழுந்த கொந்தளிப்பின் காரணமாக பயந்து போய் பதிவை நீக்கியுள்ளார் எச். ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!