For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

94 பேர் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 12ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, பலியான குழந்தைகளின் படத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. நாட்டையே உலுக்கி போட்ட இந்த சம்பவத்தில், 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர்.

Homage paid to school fire tragedy victims in Kumbakonam

இந்த தீ விபத்து நடைபெற்ற 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கும்பகோணத்தில் கடைபிடிக்கப்படுகிறது. தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன் பலியான 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

கும்பகோணம் பாலக்கரையில், இறந்த குழந்தைகள் நினைவாக நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர் தங்களது குழந்தைகள் படத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன், தங்கள் குழந்தை விரும்பி சாப்பிட்ட உணவு பொருட்களை படைத்து குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று வழிபட்டனர்.

தீ விபத்து நடைபெற்று 12ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் இன்னும் சோகத்துடனே உள்ளனர். குழந்தைகளின் இழப்பை அவர்களால் இன்றுவரை ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். தொடர்ந்து 21 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மேலும் 11 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தகுந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். இவர், அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான தீ காயம் அடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், சிறு காயம் அடைந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால், இந்த இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்

மனுதாரரின் இந்த 2 கோரிக்கைகளையும், தமிழக அரசு கருணையுடன் பரிசீலித்து, அது தொடர்பான அறிக்கையை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். மேலும், இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை குறித்தும், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். குழந்தைகளையும் தீயிக்கு பலி கொடுத்து அதற்கான நிவாரணமும் கிடைக்காமல் இன்னமும் அல்லாடி வருகின்றனர் பெற்றோர்கள்.

English summary
Homage was paid to the 94 children who perished in a major fire at a primary school here on the occasion of the 12 anniversary of the tragedy today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X