பாறை இடுக்குல சடலம் கிடந்தது! மூக்குல சரியான அடி! குற்றால அருவியில் சிறுவனின் உடலை மீட்ட நபர் பேட்டி
தென்காசி: குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் எப்படி மீட்கப்பட்டது என்பது குறித்து சடலத்தை மீட்டவர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து முருகன் என்ற நபர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பழைய குற்றாலத்தில் வெள்ளம் வந்ததும் 7, 8 பேர் தண்ணீரில் சிக்கினர். அவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

தண்ணீர் அளவு அதிகமாக இருந்ததால் எங்களால் உடனடியாக மீட்க முடியவில்லை. தண்ணீர் குறைந்ததும் நாங்கள் தேடிய போது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாறையின் இடுக்குகளில் சடலமாக இருந்தார். அவரை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்துள்ளோம்.
அவருக்கு மூக்கு பகுதியில் அதிக காயம் இருந்தது. இவ்வாறு முருகன் தெரிவித்தார். நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுவன் அஸ்வின். அவர் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த குமாரின் மகன் ஆவார். பிளஸ் 1 படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக தென்காசி மாவட்டத்தில் மேலகரத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார்.
அங்கு தனது அத்தை மாமாவுடன் பழைய குற்றால அருவிக்கு குளிக்க வந்துள்ளார். அங்கு தனது மாமா அருண் என்பவருடன் குளித்துக் கொண்டிருந்தார். அஸ்வின் அவருடைய கையை பிடித்துக் கொண்டிருந்தாராம். தண்ணீர் ஆர்ப்பரிக்கும் போது ஓடி வந்ததால் படிக்கட்டில் அருண் தவறி விழுந்துள்ளார்.
அப்போது அவருடன் இருந்த அஸ்வின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் சிறுவன் அடித்துச் செல்வதை கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் பதறினர். இதையடுத்துதான் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த சிறுவனை தேடும் பணிகள் நடந்தன. இதையடுத்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
சிறுவனின் உடலை பார்த்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது ஒரு பெண் "போங்க போங்கன்னு சொல்றீங்களே நான் வீட்டுக்கு போய் என்னத்த சொல்லுவேன் என தலையில் அடித்துக் கொண்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கம்பிகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறுமி உள்பட 3 பேரை அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் காப்பாற்றினர். அவர்கள் அழைக்க சென்ற போது அவர்கள் மூவருமே பயத்தில் வர மறுத்தனர். பிறகு, ஆட்டோ டிரைவர்கள், பயப்படாதீங்க, நாங்கள் பத்திரமாக கூட்டிட்டு போகிறோம் என சொன்னதும் மூவரும் அவர்களுடைய கைகளை பிடித்த படி வந்தனர்.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் புதிய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றால அருவிகளிலும் குளிக்க வேண்டாம் என தடை விதித்தும் அதையும் மீறி குளித்ததாக கூறுகிறார்கள். ஆனால் சுற்றுலா பயணிகளை கேட்டால், பழைய அருவிகளில் குளிக்க தடை இல்லை என கூறியதால்தான் இங்கு வந்தோம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications