For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி ஒரு கேவலமான தேர்தலை நடத்த ஆணையம் தேவையா?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. வரும் 19 ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இவற்றில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்ட அஇஅதிமுக வேட்பாளர் இறந்து போனதால் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆனால் மற்ற இரண்டு தொகுதிகளிலும் கடந்த மே 16 ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல்கள் ரத்து செய்யப் பட்டதற்கு காரணம் முற்றிலும் வேறு. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் வேட்பாளர்களுக்கு திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே பெரியளவில் பணப் பட்டுவாடா செய்த காரணத்தால்தான் இடைத் தேர்தல்கள் ரத்தாகியிருக்கின்றன.

Indian Election Commission becomes mockery of the system

சுதந்திர இந்தியாவின் 69 ஆண்டு கால வரலாற்றில் வாக்காளர்களைக் குறி வைத்து அரசியல் கட்சிகள் நிகழ்த்திய பணப்பட்டுவாடாவைத் தடுக்க முடியவில்லை என்று ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கி, தேர்தல்களை ஆணையம் ரத்து செய்வது இதுதான் முதன் முறையாகும். இதற்கு முன்பு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் எத்தனையோ தேர்தல்கள் ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. ஆனால் அவையெல்லாமே அரசியல் கட்சிகளின் வன்முறை களாலும் மற்றும் பிரிவினை வாதிகளின் ஆயுதந் தாங்கிய போராட்டங்களாலும் ரத்து செய்யப் பட்ட தேர்தல்கள். பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாததற்காக தேர்தல்கள் ரத்தானது இதுதான் முதன்முறை என்பது தமிழ் நாட்டு மக்கள் நினைத்து, நினைத்து புளகாங்கிதம் அடைய வேண்டிய வரலாற்றுச் சாதனைதான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதிலுமே கரன்சி நோட்டுக்கள் பல தொகுதிகளிலும் கரை புரண்டு ஓடினாலுமே, அரவக்குறிச்சி தொகுதியில் நடந்தது கற்பனையும் செய்ய முடியாதது. ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாயில் ஆரம்பித்தது அடுத்தடுத்த ,ரவுண்டுகளில் 5,000 ரூபாய் வரையில் போயிருக்கிறது. இது தவிர ஃபிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் என்றும் ஏகத்துக்கு பொருள் விநியோகமும் நடந்திருக்கிறது. வீட்டு உபயோக பொருட்களுக்கான டோக்கன்களும், கூப்பன்களும் கொடுக்கப் பட்டன. இதில் இரண்டு தரப்புமே ஈடுபட்டன. ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஈடுபட்டிருக்கின்றனர். விஞ்ஞானரீதியில் பணப்பட்டுவாடாவும், பொருட்கள் பட்டுவாடாவும் ஒவ்வோர் ஏரியாவிலும், அந்தந்த வாக்காளர்களின் தேவைகளை குறிவைத்து நடத்தப் பட்டிருக்கின்றன. ஒருவித்தில் இது இரண்டு கட்சிகளும் நிகழத்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்' என்றும் சொல்லலாம்.

இதில் தஞ்சாவூர் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளர் ரங்கசாமி இத்தனை பேருக்கு இவ்வளவு பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும் என்று தன் கைப்பட ஒரு காகிதத்தில் எழுதியதாக சில காகிதங்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியது. அரவக்குறிச்சி அஇஅதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது நேரடியாக புகார்கள் இல்லாவிட்டாலும், அன்புநாதன் என்பவர் பிடிபட்ட போது அவரிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணயில் ஆளும் கட்சி வேட்பாளருக்காக அவர் பணப்பட்டுவாடா செய்த விவரங்கள் வெளிவந்தன. திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமி வீட்டில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப் பட்டது.

ஏக இந்தியாவிலும் தமிழகத்துக்கு ஈடு இணையில்லாத நற்பெயரை வாங்கித் தந்த இந்த வேட்பாளர்களைத்தான் திமுக வும், அஇஅதிமுகவும் இன்று மீண்டும் களத்தில் நிறுத்தியிருக்கின்றன. இந்த அவலத்தை தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்த முடியாதா? இதுதான் தமிழகத்தின் தலை விதி என்றால் இந்த கேவலமான தேர்தலை ஏன் மே 2016 லேயே தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கக் கூடாது? இப்போது தேர்தல்களை நடத்துவதால் வரும் செலவினங்களாவது தவிர்க்கப் பட்டிருக்கும்.

மே 2016 ல் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் ஒருவர் மீது கூட இதுவரையில் எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. வழக்குகள் நடத்தப் படவில்லை. புகார்கள் மட்டத்தில் மட்டுமே இவை நின்று கொண்டிருக்கின்றன. ஆறு மாத காலத்துக்கு மேல் ஒரு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இன்றி காலியாக இருக்க முடியாது என்ற அரசியல் அமைப்பு சாசன விதியின் படி தற்போது தேர்தல்கள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே தேர்தல் கமிஷனின் நடவடிக்கை சரிதானா என்ற கேள்வி எழுகிறது. இதில் தேர்தல் கமிஷனுக்கு பெரியளவில் அதிகாரம் இல்லை என்ற பார்வையை ஆணையத்தின் முன்னாள் அதிகாரிகள் வைக்கின்றனர்.

"மூன்று தொகுதிகளில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.. சிலர் மீது குற்றம் சாட்டப் பட்டது. ஆனால் நீதி மன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப் படவில்லை. ஆனால் ஒருவரை தேர்தலில் போட்டியிடாமல் தடை செய்ய வேண்டுமானால் அவர் மீதான குற்றச் சாட்டு நீதிமன்றத்தில் நிருபிக்கப் பட்டிருக்க வேண்டும். தற்போது அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் எவ்வாறு வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்? இது சட்டப்படி இயலாத காரியம்,'' என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி.

ஆனால் இந்தக் கருத்திற்கு சற்றே எதிரான கருத்தும் தற்போது மேலோங்கிக் கொண்டிருக்கிறது. "தேர்தல்களை முறையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சாசனம் தேர்தல் ஆணையத்துக்கு நிரம்ப அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் இதே போன்ற அதிகாரங்களை வழங்கியிருக்கின்றன,'' என்று ஒன்இந்தியாவிடம் கூறினார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், ஹரியாணா வின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.ஜி. தேவசஹாயம்.

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பணப்பட்டுவாடா வுக்காக தேர்தல்கள் ரத்தான தொகுதிகளில் மே 2016 ல் போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையும் ஜனநாயகத்தை காப்பாற்றும் விதத்தில் சம்மந்தப் பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் விவரமறிந்தவர்களின் கோரிக்கையாகும். ஆனால் அப்படி செய்தால் அவர்கள் நீதிமன்றத்துக்குப் போகமாட்டார்களா?

"விவகாரம் நீதிமன்றத்துக்கு போகும்... போகட்டும் ... ஒரு வேளை தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறு என்று தீர்ப்பு வந்தால், அப்போது நீதிமன்றங்கள் மக்கள் மன்றத்தின் முன் சாயம் வெளுத்து (எக்ஸ்போஸ்) நிற்கும். ஆனால் அதனை விடுத்து சம்மந்தப்பட்ட வேட்பாளர்களேயே மீண்டும் களத்தில் நிற்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் என்றால், அதற்குப் பதிலாக தேர்தல் ஆணையத்தேயே நாம் கலைத்து விடலாம்,'' என்று கூறுகிறார் தேவசஹாயம்.

ஆக்ரோஷமான வார்த்தைகள்தான். ஆனால் ஓய்வு பெற்ற இந்த ஐஏஎஸ் அதிகாரியின் கருத்துத்தான் சராசரி அறிவும், மனசாட்சியும் உள்ள பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் தேர்தல் நடைமுறைகளை தமிழகத்தில் உள்ளது போல பண பலம் இந்தளவுக்கு கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கவில்லை. சர்வ தேச சமூகத்தின் பார்வையும் இந்தியாவின் இந்த அவலத்தின் மீது இன்று நன்றாகவே பதிந்திருக்கிறது.

மீண்டும் கரன்சி மழை பொழிய இருக்கும் மூன்று தொகுதிகளிலும் இந்த அட்டூழியத்தை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் பிரதான கேள்வி. ஆணையம் எதுவுமே செய்யாது என்றால் தேவசஹாயம் சொன்னது போன்று தேர்தல் ஆணையத்தை கலைத்து விடுவதுதான் உத்தமமான வேலை. குறைந்த பட்சம் மக்களின் வரிப்பணமாவது மிஞ்சும் அல்லவா?

English summary
Columnist special article on the forthcoming by elections in Aravakkurichi and Thanjavur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X