For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்து வருவது "நிறம் மாறாத பூக்கள்" என்ற படத்தில் இருந்து "ஆயிரம்.. மலர்களே.. மலருங்கள்"...

சர்வதேச வானொலி தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்து வருவது "நிறம் மாறாத பூக்கள்" என்ற படத்தில் இருந்து "ஆயிரம்.. மலர்களே.. மலருங்கள்" என்ற பாடல்.. இப்படி ஒரு சத்தம் வீட்டையே அதிர வைக்கும்.. வீட்டின் மூலையில்.. ஒரு மரப்பெட்டி வடிவத்தில்.. உயரத்தில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்.. ரேடியாவை... அதில் இருந்துதான் அதிர கேட்கும் அந்த குரல்!

அதுதான் அப்போதைய பிரமாண்ட வடிவமான அறிவியல் கருவி.. அந்நாளில் பலருக்கு ரேடியோவை எப்படி ஆபரேட் செய்வது என்றுகூட தெரியாது.. ரேடியோவுக்கு சுவிட்ச் வட்டமாக இருக்கும்.. அதை வைத்துதான் திருப்ப வேண்டும்.

அப்படி திருப்பினால் ரேடியோவில் பொருத்தியிருக்கும் அலைவரிசையை காட்டும் அளவீட்டு கருவி சிவப்பு கலரில் இருக்கும்.. அந்த முள்ளை சரியாக நகர்த்தி, விரும்பும் அலைவரிசையை தேர்வு செய்ய வேண்டும்.. இது வீட்டில் உள்ள ஒருவர்தான் சரியாக செய்வார்.. அவர்தான் ரேடியோ ஆபரேட்டராகவும் இருப்பார்.

தென்கச்சி சுவாமிநாதன்

தென்கச்சி சுவாமிநாதன்

பெரும்பாலான ஓலை குடிசைகளில் இந்த ரேடியோ இருக்காது.. ரேடியோ சத்தம் கேட்கும் வீடு, கொஞ்சம் வசதி படைத்த வீடு என்று கணக்கில் கொள்வார்கள். இதைதவிர, டீக்கடைகளிலும், பார்பர் ஷாப்பிலும் அலறும் இந்த ரேடியோ சத்தத்துக்கு ஆயிரமாயிரம் பேர் நேயர்கள்... காலையில் நாம் தூங்கி எழுந்ததும் தென்கச்சி சுவாமிநாதன் பேசிக் கொண்டிருப்பார்.. அரைகுறையாக காதில் விழுந்தாலும், அவ்வளவும் அர்த்தம் நிறைந்த வார்த்தையாகவே இருக்கும்.

நாட்டு நடப்புகள்

நாட்டு நடப்புகள்

"ஆகாசவானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி'... இந்த குரலை கேட்டாலே ஒருவித சீரியஸ்தன்மை ஒட்டிக் கொள்ளும்.. நிறைய தலைவர்கள் செத்துப் போனதை இவர்தான் செய்தியாக சொல்லியுள்ளார்.. தலைவர்களின் இரங்கல், தேர்தல் முடிவுகள்.. என முக்கிய செய்திகளை கேட்க ஒட்டுமொத்த மக்களும் ஓரிடத்தில் திரண்டு நிற்பார்கள்.. நிசப்த அமைதியில் ரேடியோ பெட்டியில் இருந்து வார்த்தைகள்தான் இவர்களின் ஒட்டுமொத்த நாட்டு நிலவரமும்..

நெருக்கமானது

நெருக்கமானது

குறிப்பாக மீனவர்கள்.. இவர்களின் காட் ஃபாதர் ரேடியோ என்றுகூட சொல்லலாம்.. மழை, புயல், இயற்கை சீற்றத்தை சொல்லி மீனவர்களை காத்த இந்த ரேடியோவின் முன்னெச்சரிக்கை தகவல்கள்தான்... ஆனால், ரேடியோ மூலம் யாருடைய முகமும் நமக்கு பரிச்சயம் இல்லை... ஆனால் ரேடியோக்களில் இருந்து ஒலிக்கும் குரல், நம்ம வீட்டில் இருக்கும் ஒரு நபரை போல அன்னியோன்யமானது.. நெருக்கமானது..

சொல்பேச்சு

சொல்பேச்சு

80'களில் தமிழக மக்களை அதிகமாக கட்டிப்போட்டது இளையராஜாதான்! இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவை... என்று தொடங்கி அம்மம்மா, அப்பப்பா.. என்று உச்சரித்தது வரை இவர்கள் மக்களை மகிழ்வித்ததை வரிகளால் செல்ல முடியாது.. உழைத்து களைத்த மக்களுக்கு இந்த ரேடியோதான் எல்லாமே.. நடுநடுவே குரல்கள் கம்மும்.. சத்தம் கேட்காது.. மக்கர் செய்யும்.. தலையில் ஒரு தட்டு தட்டினால்தான் சில ரேடியோக்கள் சொல்பேச்சு கேட்கும்... ரேடியோக்களுக்கு தொண்டை கரகரப்பு என்பது உடன்பிறந்த நோய்.. ரேடியோ ஒரு கருவி மட்டும் இல்லை.. நம் உணர்வில் கலந்த ஒரு பொருள்.. உறவுகளுடன் சேர்ந்தே பயணித்த உயிரற்ற நபர்.. பல காதலை வளர்த்துவிட்ட பிதாமகன்.

வசனங்கள்

வசனங்கள்

திரைச்சித்திரம் என்று மதிய நேரத்தில் ஒரு சினிமாவின் திரைக்கதை ஒலிபரப்பாகும்.. சினிமாவுக்கு போக முடியாத எத்தனையோ பேருக்கு இதில் சுருக்கி தரும் அந்த படம்தான் சினிமா.. இதன்மூலம் எத்தனையோ படங்களின் வசனங்கள் மக்களுக்கு மனப்பாடமாக தெரியும்.. திருவிளையாடல் முதல் விதி படத்தில் சுஜாதா கோர்ட்டில் பேசும் வசனம்வரை அத்தனையும் அத்துப்படி! அந்நாட்களில் அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தது ரேடியோ!.. அதே மாதிரி அந்த தங்கப்பதக்கம்.. அதாங்க தங்கப் பதக்கம் வசனமும் மக்களுக்கு அப்படி மனதில் பதிய வைத்தது இந்த ரேடியோ பொட்டிதான்.

நேயர் விருப்பம்

நேயர் விருப்பம்

15 பைசா போஸ்ட் கார்ட்டுகளில் தங்களுக்கு பிடித்த பாடல்களை எழுதி அனுப்புவார்கள் நம் மக்கள்.. நேயர் விருப்ப பாடலில் அவர்களின் பெயர்களும் அப்போது இடம்பெறும்.. ஒட்டுமொத்த ஊரின் பெயரும் அந்த சின்ன போஸ்ட் கார்ட்டில் அடைத்து, நெருக்கி, குறுக்கி எழுதி வைத்திருப்பார்கள்.. தங்கள் பெயர் எப்போது வரும் என்று ரேடியோவையே உற்று கவனிப்பார்கள்.. அதிலும் ஒரேபெயரில் பலர் இருப்பார்கள்.. அதனால் இன்ஷியலோடு சேர்த்து படிக்கும்போது, நேயர் முகத்தில் அப்படி ஒரு குஷி தென்படும்!

தந்தி முறை

தந்தி முறை

90'களில் எஃஎம் வந்துவிட்டது.. இன்றும்கூட அடுத்தடுத்த கட்டங்களுக்கு ரேடியோ சென்று கொண்டிருக்கிறது... வானொலியின் காற்றின் மூலமாக பாயும் இந்த கம்பியில்லாத் தந்தி முறை தான் இன்றைய சோஷியல் மீடியாவின் நாபிகமலம்.. ஆழ்ந்த அடிப்படை... பிரதமர் நேருவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது ரேடியோதான்.. நேரு, ரேடியோவில் உரையாற்றுகிறார் என்றாலே மொத்த இந்தியாவும் காதை தீட்டி வைத்து கொள்ளும்.. அதைத்தான் இன்றைய பிரதமர் மோடியும் மன் கி பாத் மூலம் கையாண்டு வருகிறார்.. ஆனால் நேருதான் இதற்கு முன்னோடி.

இன்று நம்ம ரேடியோவுக்கு ஹேப்பி பர்த் டே.. சர்வதேச வானொலி தினம்.. காலங்காலமாக உறவுகளுடன் சேர்ந்தே பயணிக்கும் ரேடியோவுக்கும், பிதாமகன் மார்கோனிக்கும் உலக மக்களின் இதயம் கனிந்த நன்றிகள் பல!!

English summary
international radio day today is being celebrating all over the world
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X