அதிகளவில் குக்கர் இறக்குமதி என புகார்.. சென்னை ராயபுரம் குக்கர் கடையில் ஐடி அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு குக்கர் கடையில் டோக்கன் மூலம் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பார்வையாளர்களுடன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கேட்டதால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கியது.
இதையடுத்து தினகரனும், மதுசூதனனும் சுயேச்சையாக தொப்பி மற்றும் இரட்டை விளக்கு சின்னங்களில் களத்தில் இருந்தனர். தனக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை தினகரன் பிரபலப்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டார்.

இரட்டை இலை சின்னம்
இதனிடையே பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அப்போது அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து விட்டன. இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிட்டது. ஆனால் தினகரனோ தனக்கென ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார்.

அதிமுக களம்
இந்நிலையில் சென்னை ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் ஜெயலலிதா இல்லாமல் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக களம் இறங்குகிறது.

வெற்றிக் கனி யாருக்கு?
அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், தினகரன் அணி சார்பில் தினகரனும், பாஜக சார்பில் கரு நாகராஜனும், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயமும் போட்டியிடுகின்றனர். 5 வேட்பாளர்களும் வெற்றிக் கனியை நோக்கி போராடி வருகின்றனர்.

குக்கர்கள் பறிமுதல்
இதனிடையே ஆர்கே நகரில் தினகரன் அணி சார்பில் ஏராளமான பிரஷர் குக்கர்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன. அவ்வப்போது தேர்தல் அதிகாரிகளும் சோதனை நடத்தி குக்கர்களை பறிமுதல் செய்ததாக செய்திகளும் வந்தன.

ஐடி ரெய்டு
இந்நிலையில் ராயபுரத்தில் உள்ள ஒரு குக்கர் கடையில் குக்கரை லஞ்சமாக பெற்றுக் கொள்ள ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கனை வைத்து மக்களும் குக்கர்களையும் பெற்று வருவதாகவும் ஐடி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இரண்டாவது முறையாக ரத்து?
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு தேர்தல் பார்வையாளர்களுடன் சென்ற ஐடி அதிகாரிகள் அதிகளவில் குக்கர் இறக்குமதி செய்யப்படுவது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். ஆர்கே நகரில் இரண்டாவது முறையாக தேர்தல் ரத்து செய்யப்படும் என்று விவேக் ஜெயராமன், எஸ்வி சேகர் உள்ளிட்டோர் கருத்து கூறியுள்ளது நினைவுக்கூரத்தக்கது.