• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ஐடி ரெய்டு… மோடி வைக்கும் குறி யாருக்கு?

By R Mani
|

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனைகளை நடத்தி வருகின்றனர். நத்தம் 2011 - 2016 ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை உள்ளிட்ட ''பசையான துறைகளை'' தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் கையில் வைத்திருந்தார்.

பல அமைச்சர்கள் நீக்கப் பட்டும், சேர்க்கப் பட்டும், ''உள்ளே வெளியே'' விளையாட்டு ''அம்மா'' வின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இடைவிடாமல் தொடர்ந்த போதும் நத்தம் மட்டும் வளங்கொழுக்கும் இந்த இலாக்காக்களில் ஒரு நாள் கூட நகராமல் ஒட்டிக் கொண்டுதான் இருந்தார்.

நத்தம் விஸ்வநாதன் தவிர இந்த முறை ஐடி ரெய்டுகளில் மாட்டிய மற்றோர் அஇஅதிமுக முக்கியஸ்தர் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. தொழிலதிபர் என்று வருணிக்கப் படும் வெற்றி, வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதிலும், விற்பதிலும் அகில இந்திய அளவில் முன்னணியில் இருக்கக் கூடிய ஒருவர். தன்னுடைய நாய்களை வெளிநாடுகளுக்கு நாய் கண்காட்சிக்காக இவர் அழைத்துச் செல்லுவதென்பது சர்வசாதரணமான நிகழ்வு.

IT Raids and Political calculations

செல்ல நாய்கள் வளர்ப்பு என்பது பொழுது போக்கு என்பதையும் தாண்டி, கோடிக் கணக்கில் பணம் புரளும் தொழிலாகவும் வெற்றிக்கு இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நத்தம், வெற்றி உள்ளிட்டோருக்குச் சொந்தமான 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனைகளை கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல்லில் நத்தம் பகுதியில் விஸ்வநாதனுக்குச் சொந்தமான வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், வெற்றிக்குச் சொந்தமான சென்னை சேலையூரில் உள்ள பிரம்மாண்ட பங்களா, மற்றும் சென்னையில் உள்ள தொழிற் கூடங்கள் ஆகியவற்றில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரையில் நடைபெற்ற இந்தச் சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள், தங்கம், ரொக்கப் பணம் ஆகியவை கைபற்றப் பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

தற்போதய முக்கியமான கேள்வி, ஏன் இந்த ரெய்டுகள் நடக்கின்றன? என்பதுதான். 1991 ம் ஆண்டு ஜெய லலிதா அரசு வந்ததில் இருந்து ''அம்மா'' பதவியில் இருக்கும் போது ஒரு முறை கூட வருமான வரித்துறையினர் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள், பதவியிலிருக்கும் மேயர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடத்தியதில்லை. 1991 - 1996, 2001 - 2006, 2011 - 2016 ஆட்சிக் காலங்களில் இதுதான் நிலைமை. ஒரு முறை அமலாக்கப் பிரிவு ஜெயலலிதா பதவியிலிருக்கும் போது அவருக்கு நெருக்கமான ஒருவரை கைது செய்தது. பிப்ரவரி, 6, 1996. சசிகலா வின் அக்கா மகன் டிடிவி தினகரன் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப் பட்டார். அப்போதிருந்த ''காஃபிபோசா'' எனப்படும் அந்நிய செலவாணி சட்டப்படி அவர் கைது செய்யப் பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அப்போது பிரதமர் நரசிம்ம ராவ்.

தினகரன் கைது செய்யப் பட்ட போது முதலமைச்சர் ஜெய லலிதா திருச்சியில் 5,000 திருமணங்களை நடத்திக் கொண்டிருந்தார். அங்குதான் இந்த ''இனிப்பான செய்தி'' அவருக்குத் தெரிவிக்கப் பட்டது. 1996 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் ஜெய ல லிதா வை வழிக்கு கொண்டு அன்றைய மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செய்த காரியம் இது என்றே அப்போது பரவலாகப் பேசப்பட்டது. அதன் பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ், அஇஅதிமுக கூட்டணி ஏற்பட்டு அது மண்ணையும் கவ்வியது வேறு கதை.

அதன் பிறகு அஇஅதிமுக முக்கியஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு என்பது இதே நத்தம் விஸ்வநாதன் வீட்டில் தான் நடந்தது. ஆனால் அப்போது அஇஅதிமுக ஆட்சியில் இல்லை. ஆகஸ்ட் 23, 2006 ம் ஆண்டு நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமான 19 இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது. அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, ப சிதம்பரம் நிதியமைச்சர். ஆகவே ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது அவரது கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஐடி ரெய்டில் சிக்குவது என்பது இதுதான் முதன்முறையாகும்.

நத்தம் விஸ்வநாதன் மிகவும் செல்வாக்கான அமைச்சராக இருந்தார். மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்குச் நெருக்கமான சி.பி. அன்புநாதன் என்பவர் வீட்டிலிருந்துதான் பல கோடி ரூபாய் பணமும், கரன்சி நோட்டுக்களை எண்ணும் இயந்திரமும் கைப்பற்றப் பட்டது. தேர்தலுக்கு முன்பே ''அம்மா'' வின் நம்பிக்கையை நத்தம் இழக்க ஆரம்பித்து விட்டாரென்பது அவரை தொகுதி மாற்றி ஆத்தூர் தொகுதியில் நிற்க கட்சித் தலைமை உத்திரவிட்டதிலிருந்தே தெரிய வந்தது. ஆத்தூர் தொகுதியில் திமுக பெரும்புள்ளி ஐ.பெரியசாமியிடம் ந த்தம் தோற்றுப் போனார். சில நாட்கள் கழித்து கட்சியின் அமைப்புச் செயலாளராகவும், பத்திரிகை செய்தி தொடர்பாளராகவும் அவரை ஜெயலலிதா நியமித்தார். ஆனால் ஐடி ரெய்டு துவங்கிய சில மணி நேரத்திலேயே இந்தப் பதவிகள் பிடுங்கப் பட்டு விட்டன.

இந்த ஐடி ரெய்டுகளுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மின்வாரியத் தலைவராகவும் இருந்தவர். வெளிமாநில மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியது மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்ததில் நிகழ்ந்த மிகப் பெரிய ஊழல்களை ஏற்கனவே எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் பின்னணியில்தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைகளும், ஐடி ரெய்டுகளும் பார்க்கப் படுகின்றன.

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த ஐடி ரெய்டுகளின் உண்மையான குறி யார் என்பதுதான். இன்று அஇஅதிமுக நான்காவது முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அஇஅதிமுக வுக்கு 50 எம் பி க்கள் இருக்கின்றனர். இன்று மாநில அரசியலில் ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாகத்தான் இருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர் ஐடி ரெய்டில் கொண்டு வரப்படுகிறார் என்றால், உண்மையான குறி யார் என்பதுதான் கேள்வி.

''இது போன்ற ரெய்டுகள் 50 எம் பி க்களைக் கொண்டிருக்கும் அஇஅதிமுக போன்ற கட்சியைச் சார்ந்தவர்கள் மீது பிரதமரின் கண்ணசைவு இல்லாமல் நடக்காது. இதில் நரசிம்மராவின் பாணியைத் தான் மோடியும் பின்பற்றுகிறார் என்றே கருதுகிறேன். இந்த ரெய்டுகளின் உண்மையான குறி ஜெயலலிதா தான். அரசியல் ரீதியாக அவரை பாஜக பக்கம் இணக்கமாக கொண்டு வருவதற்கான வேலையாகத் தான் இதனை நாம் பார்க்க வேண்டும். மற்றொன்று, 2011 - 2016 ஜெ ஆட்சிக் காலத்தில் நால்வரணியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்து தற்போதும் அமைச்சர்களாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் வருமான வரித் துறையின் கரங்கள் தீண்டுமா என்பதுதான்?'' என்று ஒன் இந்தியா விடம் கூறுகிறார் அரசியல் விமர்சகரும், வழக்கறிஞருமான ரவீந்திரன் துரைசாமி. ''தேசீய கட்சியான காங்கிரசுக்கு தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சியாக இருக்கிறது. ஆனால் பாஜக வுக்கு பெரிய கட்சி எதுவும் இன்று கூட்டணிக்கு தமிழகத்தில் இல்லை. அதனால்தான் அஇஅதிமுக வை வழிக்கொண்டு வர ஐடி ரெய்டுகள் இப்போதே துவங்கி விட்டன. இதில் உள்ள அரசியல் செய்தி இதுதான்'' என்று மேலும் கூறுகிறார் ரவீந்திரன் துரைசாமி.

தற்போது இந்த ஐடி ரெய்டுகளுக்கான உடனடி காரணம் (trigger) என்னவென்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியதாகிறது. இது அன்புநாதன் விவகாரம் மட்டுமல்ல என்றும் சொல்லப் படுகிறது. ''அன்புநாதன் டைரியில் உள்ள சில விவகாரங்கள் நத்தம் வீட்டில் ஐடி அதிகாரிகளை கொண்டு வந்துள்ளது. அதனைத் தாண்டியும் சிலவற்றை நான் கேள்விப் படுகிறேன். தேர்தல் நேரத்தில் திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் விவகாரம் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. அந்த விசாரணையில் சிபிஐ க்கு கிடைத்திருக்கும் சில தகவல்கள் (leads) தான் ஐடி ரெய்டாக முதலில் வந்திருக்கிறது. இந்த தகவல் உண்மையென்றால் விவகாரம் நாம் நினைத்ததை விட சீரியசாக மாறலாம்'' என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

இது ஜெயலலிதா வின் நான்காவது ஆட்சிக் காலம். கடந்த மூன்று ஆட்சிக் காலங்களில் அஇஅதிமுக முக்கியஸ்தர்கள் எவர் மீதும் ஜெ பதவியிலிருக்கும் போது ஐடி குறி வைத்தது இல்லை. ''ஆம். நரசிம்ம ராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய மூன்று பிரதமர்கள் ஜெ வின் முந்தய ஆட்சிக் காலங்களில் இருந்தார்கள். இதில் ஒருவர் கூட அஇஅதிமுக முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஐடி ரெய்டுகளை பயன்படுத்தியதில்லை. இத்தகைய ஐடி ரெய்டுகள் பிரதமர் அளவில் ஒப்புதல் இல்லாமல் நடக்க வாய்ப்பேயில்லை. அப்படியென்றால் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்'' என்கிறார் நீண்ட காலம் ஐடி துறையின் வழக்கறிஞராக பணியாற்றும் ஒருவர்.

இதில் மற்றோர் அஇஅதிமுக முக்கியஸ்தர் சொல்லும் வேறோர் கருத்து சுவாரஸ்யமாக இருக்கிறது. ''இன்று ந த்தம் விஸ்வநாதன் அஇஅதிமுக வின் பதவிகளில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார். நாளை ஐடி ரெய்டுகள் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அன்றைய நால்வரணியின் மற்றோர் உறுப்பினரான தற்போதய ராஜ்ய சபா எம்பி வைத்தியலிங்கம் ஆகியோர் மீது ஏவப்பட்டால் அப்போது ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதுதான். அந்த சூழ்நிலையில் நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சனைதான், எடுக்கா விட்டாலும் பிரச்சனைதான்'' என்கிறார் அவர்.

காங்கிரஸ் கட்சியின் இரண்டு முதலமைச்சர்கள் இன்று சிபிஐ வலையில் சிக்கியுள்ளனர் - ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீர் பத்திர சிங் மற்றும் உத்திராகண்ட் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் - ஹரியாணா முன்னாள் முதலமைச்சர் பூபிந்திர சிங் ஹூடா வும் இன்று மாட்டிக் கொண்டிருக்கிறார். வீர் பத்திர சிங் மகளின் திருமணத்திற்கு முதல் நாள் அவர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அரசியல் எதிரிகளை பாஜக அரசு எப்படி பதம் பார்க்கும் என்பதற்கு இவையெல்லாம் சிறிய சாம்பிள்கள்தான்.

மோடி வைத்த குறி யாருக்கு என்று இப்போது புரிகிறதா?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Columnist R Mani explains the recent for IT Raids at ADMK Former Minister Natham Viswanathan's house.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more