For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசக் கூட சட்டசபையில் அனுமதி இல்லை.. எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு சிறப்பு தீர்மானம் கொண்டுவருவது பற்றி சட்டசபையில் பேச திமுகவிற்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ அருகதை இல்லை என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த ஆண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலையில் தொடங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2015ம் ஆண்டு பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் குறித்தும், ஜம்மு - காஷ்மீர் முதல் மந்திரி முகமது சயீத் மறைவு குறித்தும், பழம்பெரும் நடிகை மனோரமா மறைவு குறித்தும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மறைவு குறித்தும் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Jallikattu ban stirs up heat in TN assembly

இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் பதிலளித்தனர்.

281 பாலங்கள் திறப்பு

ஆரணி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைத்துத்தர மா.கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 281 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. 109 பாலங்கள் கட்டும் பணிகளும், 9 பாலங்ளுக்கான ஒப்பந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றுவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக சட்டசபையில் தெரிவித்தார்.

3000 குடியிருப்புகள் காலி

அரூர் எம்.எல்.ஏ., டில்லிபாபு கேள்விக்கு சட்டசபையில் பதிலளித்த வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தமிழகத்தில் 3000 க்கும் அதிகமான வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கள் காலியாக உள்ளன. அரசு ஊழியர்களுக்கு வீடுகள் கட்ட அரசு கடன் வழங்குவதால் பலர் சொந்த வீடு கட்டி உள்ளனர் என தெரிவித்தார்.

ஸ்டாலின் கோரிக்கை

தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் முன்பாக ஜீரோ அவரில், ஜல்லிக்கட்டு தடையை நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், கோரிக்கை வைத்தனர்.

ஒ.பி.எஸ் பதில்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சரும் அவை முன்னவருமான ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டு தடைக்கு சிறப்பு தீர்மானம் கொண்டுவருவது பற்றி சட்டசபையில் பேச திமுகவிற்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ அருகதை இல்லை என்றார். மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போதுதான் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டதாக கூறினார்.

எதிர்கட்சிகள் வெளிநடப்பு

ஓ.பன்னீர் செல்வத்தில் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய, ஜல்லிக்கட்டு தடை விதிக்கப்படுவதற்கு காரணம் அதிமுக அரசுதான் என்று குற்றம் சாட்டினார். அதை சரி செய்யும் வகையில் சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டதால் அவையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

அவையில் இருந்து வெளிநடப்பு செய்த புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே முதியவரின் சடலத்தை பொது பாதையில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேபோல மதுரை மாவட்டம் குருவித்துறையில் தேவேந்திரகுல சமுதாயத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களின் குடிசைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுபற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

விஜயதாரணி பதில்

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக பொறுப்பும், உரிமையும் உண்டு என்று கூறினார்.

சிறப்பு தீர்மானம் கொண்டுவரவேண்டும்

அவரைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்த மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சௌந்தரராஜன், ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு காங்கிரஸ், திமுகவும் காரணம் என்றார். சிறப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறியதற்கு அவை முன்னவர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்பதால் வெளிநடப்பு செய்ததாகவும், காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சௌந்தரராஜன் வலியுறுத்தினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

English summary
After the Supreme Court imposed an interim ban on jallikattu, supporters of the bull-taming sport have taken to street protests and road blockades in several parts of Madurai district. Opposition party MLA's demanding in TN assembly, to lift the ban on the sport, that is rooted in the history of Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X