For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலிங்கராயனுக்கு சிலை.. அணைக்கட்டு சுற்றுலாதலமாகிறது… ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு மாவட்டம், அணை நாசுவம்பாளையம் பகுதியில் காலிங்கராயனுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதி சுற்றுலாத் தலமாக அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகள் பாசனம் பெற நற்பணி ஆற்றியவர் காலிங்கராயன். ஈரோடு மாவட்டத்தின் அணிகலனாகத் திகழ்வது காலிங்கராயன் கால்வாய் ஆகும். இந்த காலிங்கராயன் கால்வாயை கட்டிய பெருமை லிங்கையன் என்கிற காலிங்கராயனையே சாரும். காலிங்கராயன் பாண்டிய நாட்டு தலைவர் ஆன பிறகு, தன் ஆளுகைக்குட்பட்ட புன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு, நாட்டு மக்களின் உதவியுடன் காலிங்கராயன் அணையினைக் கட்டி, கால்வாயினையும் வெட்டினார் என்பது வரலாறு.

காவிரி ஆற்றின் கிளை நதிகளான பவானியையும், நொய்யலையும் இணைக்கும் கால்வாய் காலிங்கராயன் கால்வாய். இதன் மூலம் பவானி ஆற்றிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்பட்டு, காவிரி ஆற்றின் ஓரமாகவே அதன் தென் கரையில் சுமார் 56 மைல்கள் கிழக்காக ஓடி ஆவுடையார் பாறை என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் சங்கமமாகிறது.

பவானி ஆற்றை நொய்யல் ஆற்றுடன் இணைக்க 32 மைல் தூரம் கால்வாய் வெட்டினால் போதும் என்ற நிலை இருந்த போதிலும், அதிகமான நிலங்கள் பாசனம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும், நீர் தேங்கி நின்று வயலுக்குப் பாய வேண்டும் என்ற எண்ணத்துடனும், நீரின் வேகத்தைக் குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், 56 மைல் தூரத்திற்கு இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் இரு கரைகளும் காரையால் கட்டப்பட்டு இருப்பதால் "காரை வாய்க்கால்" என்றும், பாம்பு போல் நெளிந்து செல்வதால் "கோண வாய்க்கால்" என்றும் இதனை அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலம் தற்போது பாசன வசதி பெற்று வருகிறது. இப்படிப்பட்ட வலுவான அணையினையும், கால்வாயினையும் கட்டிக் கொடுத்தவரும், நதிகள் இணைப்பில் முன்னோடியாக விளங்கியவரும், மக்களுக்கு பல அறப்பணிகளை செய்வதவருமான காலிங்கராயனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்றும், காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதியினை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, காலிங்கராயனின் சமுதாயப் பணியை போற்றும் வகையில், அன்னாருக்கு ஈரோடு மாவட்டம், அணை நாசுவம்பாளையம் பகுதியில் சிலை அமைக்கப்படும் என்பதையும், காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதி சுற்றுலாத் தலமாக அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalitha has said that the govt will built a statue for Kalingarayan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X