For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சுப்ரீ்ம் கோர்ட் தீர்ப்புப்படியே டாக்டர்கள் நியமனம்- ஜெ.

Google Oneindia Tamil News

Jaya clarifies doctors appointment for Chennai super specialty hospital
சென்னை: உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை, பொறியியல் மற்றும் இதர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பதவிகளில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றுவது சரியாக இருக்காது என்று தெரிவித்து்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும், நடைமுறையில் உள்ள விதியினையும், முன்மாதிரியையும் கருத்தில் கொண்டே ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமூக நீதியின் குரல் வளையை நான் நெரிப்பதாக கருணாநிதி கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல, எவரும் ஏற்றுக் கொள்ள இயலாததும் ஆகும்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சகல வசதிகளுடன் அமையவுள்ள பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படும் போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது என்று தமிழக அரசின் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

தமிழக அரசால் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், மருத்துவப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், மாற்றுப் பணி மூலமாகவும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பணி மூலம் நியமிக்கப்படுபவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. ஏனெனில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் முதன் முதலில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ள மருத்துவர்களைப் பொறுத்த வரையில், தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 11-ன்படி அவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட பொது விதிகள் பொருந்தாது.

இந்த விதிகளின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் 2006 முதல் 2011 வரை, சுகாதாரத் துறையில், கடந்த மைனாரிட்டி தி.மு.க. அரசால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்; திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம்; தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் மாநில நலவாழ்வு சங்கம் ஆகியவற்றின் கீழ் 540-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசுக்கு எதிராக ‘எய்ம்ஸ்' பேராசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது 18.7.2013 நாளைய தீர்ப்பில், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை, பொறியியல் மற்றும் இதர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பதவிகளில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றுவது சரியாக இருக்காது என்று இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற இயலாது என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திறனாய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்னமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினையும், நடைமுறையில் உள்ள விதியினையும், முன்மாதிரி யையும் கருத்தில் கொண்டே ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாற்ற வேண்டுமென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்திய அரசு தான் கொண்டு வர வேண்டும். தற்போதுள்ள மத்திய அரசு, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வகையில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிச்சயமாக உரிய திருத்தங்களை கொண்டு வராது.

நான் 2011ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றவுடன், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீங்குவதாலோ ஏற்படும் காலி இடங்கள் மற்றும் புதியதாகத் தோற்றுவிக்கப்படும் பணி இடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பும் பொருட்டு, இந்தியாவிலேயே முதல் முறையாக, மருத்துவத் துறை பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு என்று, "மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்", என்ற ஒர் அமைப்பினை ஏற்படுத்தினேன்.

இதன் மூலம், 2334 மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படுவதற்கு முன் 2,027 மருத்துவர்களும் என மொத்தம் 4,361 மருத்துவர்கள் காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

மருத்துவம் சார்ந்த பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இவர்களை பணியில் அமர்த்தும் போது, இட ஒதுக்கீடு முழுவதுமாக கடை பிடிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி தனது அறிக்கையில், "இயக்குநர் பதவிக்கான மாதாந்திர சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டரை லட்சம் ரூபாய். தலைமைச் செயலாளருக்குக் கூட, ஏன் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் கூட இந்த அளவிற்கு சம்பளம் இருக்குமா என்று தெரிய ல்லை! மூத்த மருத்துவ ஆலோசகர் என்று 14 பேரை நியமிக்கப் போகிறார்களாம். அவர்களுக்கான ஊதியம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய்...." என மருத்துவர்களின் சம்பளம் குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார்.

பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரிய அதிக தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நிச்சயம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, இது போன்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக சம்பளம் பெற்று வருகிறார்கள் என்பதால், அவர்களை, ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் அளிக்கக் கூடிய இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் அதிக சம்பளம் தரும் வகையில் ‘சிவப்புக் கம்பளம்' விரிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை ஏழை, எளிய மக்களுக்கு இது போன்ற வசதிகள் கிடைக்கக் கூடாது என்ற நினைப்பில் இது போன்ற அறிக்கையை விடுத்திருக்கிறார் போலும் கருணாநிதி.

இதே போன்று, ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் சமூகநீதி கடைபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். மத்திய அரசின் உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களையே ஆசிரியராக நியமிக்க இயலும். எனவே, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் 18,647 ஆசிரியர்கள் மற்றும் போட்டித் தேர்வின் மூலம் 2,273 ஆசிரியர்கள் என மொத்தம் 20,920 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

2014 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் அதிமுக கொள்கைகள் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் சூழ்நிலை உருவாகும் போது, உச்ச நீதிமன்ற ஆணையினை மாற்றும் வகையில் உரிய திருத்தங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.

English summary
Chief Minister has clarified the issue of doctors appointment for Chennai super specialty hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X