For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2015 பொங்கல் பண்டிகை: இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ 486 கோடி நிதி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Jayalalitha announced Rs. 486 crores for free dhoti and saree
சென்னை: அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலை தயாரிப்பிற்கென ரூ 486 கோடியே 36 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

கடந்த 1983ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது தமிழக அரசு. அந்த வகையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு தர வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் தயாரிப்புக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கைத்தறி சேலை...

"சின்னச் சின்ன இழைப் பின்னிப் பின்னிவரும் சித்திரக் கைத்தறி சேலை" என்று ஆன்றோர் கைத்தறிச் சேலையின் சிறப்பை எண்ணிப் போற்றி பாடியுள்ளனர்.

ஜவுளித் தொழில்...

இந்திய பொருளாதாரத்தில் தனித்தன்மை பெற்று விளங்குவதும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஜவுளித் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நெசவாளர்களின் நல்வாழ்விற்காக பற்பல திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

நலத்திட்டங்கள்...

நெசவாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தினை 1,000 ரூபாயாக உயர்த்துதல், கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அரசின் பங்கினை உயர்த்தியது, பெடல் தறிகள் அரசின் மானியத்துடன் வழங்குதல், கைத்தறித் துணியின் உற்பத்தியை பெருக்குதல், நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக அவர்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரம் வழங்குதல், நெசவாளர்களுக்கு 10,000 வீடுகள் கட்டுதல், நலிவடைந்த கூட்டுறவு நூற்பாலைகளை புனரமைக்க நிதி உதவி அளித்தல், நெசவாளர்களின் கூலியினை அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்கள் நெசவாளர்களுக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விலையில்லா வேட்டி சேலைத் திட்டம்...

ஏழை எளிய மக்களின் நலனுக்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஒரு முக்கியமான திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

துவக்கம்...

1982 ஆம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் விளைவாக ஏற்பட்ட வறட்சியினைத் தொடர்ந்து நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம், முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்ரால் 1983 ஆம் ஆண்டு வேட்டி சேலை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம், இந்த திட்டத்திற்கான வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் பொறுப்பு கைத்தறி நெசவாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தரமான உடைகள்...

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேட்டி, சேலைகளின் தரத்தினை உயர்த்தும் வகையில் 40 ஆம் எண் பருத்தி நூலுடன் பாலியஸ்டர் நூல் கலந்த வேட்டி மற்றும் சேலைகளை தயாரித்து வழங்குமாறு 2003 ஆம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ஆணையிட்டார்கள். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று ஏழை எளிய மக்களுக்கு தரமான வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கூடுதல் செலவு...

2014 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளில், பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேலைகளின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் மாற்றம் செய்யப்பட்டு, 60 ஆம் எண் பருத்தி சாயமிட்ட நூலினை பாவாகவும், 80/34 பருமன் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை ஊடையாகவும், 150 பருமன் காட்லுக் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை கரையாகவும் கொண்ட பாலிகாட் சேலைகள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வழங்கப்பட்டன. இதற்காக அரசுக்கு 73 கோடியே 44 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டது.

வேலைவாய்ப்பு...

மொத்தத்தில் 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்ட வேட்டி, சேலை திட்டம் 486 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் சுமார் 11,000 கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சுமார் 54,000 விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வருவதுடன், கிராம மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.45 கோடி மக்களின் துணித் தேவையினையும் பூர்த்தி செய்கிறது.

பாலிகாட் சேலைகள்...

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தயாரிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட புதிய ரக சேலைகள் பொது மக்களிடையே பெருமளவில் வரவேற்பினை பெற்றுள்ளதால், வரும் 2015 பொங்கல் பண்டிகைக்கும் இதே ரகத்தில் பாலிகாட் சேலைகள் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முன்பணம்....

இதன்படி, 2015-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கடந்த ஆண்டினைப் போன்று 1,73,23,000 சேலைகளும், 1,72,05,000 வேட்டிகளும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்து வழங்கிட 486 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக, கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணம் வழங்க 240 கோடியே 55 லட்சம் ரூபாய் நிதியினை விடுவித்தும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The chief minister Jayalalithaa announced Rs. 486 crores for free dhoti and saree to be distributed at Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X