For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ள பாதிப்பு: கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் வழங்கிடுக: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இதற்கு முன் இருந்திராத வகையில் மிக அதிகளவில் பொழிந்து வெள்ளப் பெருக்கு ஏற்படுத்தியுள்ளதைத் தாங்கள் தனிப்பட்ட முறையில் அறிவீர்கள். பரவலான அந்த வெள்ளப் பெருக்கானது பெருத்த அளவில் சேதத்தை விளைவித்து மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கச் செய்துள்ளது. குறிப்பாக பாதுகாப்பற்ற நிலையில் வாழும் ஏழை எளிய மக்கள் பெருந்துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

jayalalitha letter to pm modi

மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, மிகப்பெரிய அளவில் மீட்பு, நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. வெள்ளத்தில் உயிரிழப்புகளுக்குள்ளான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கருணைத் தொகையும், கால்நடைகள்-குடிசைகளை இழந்து தவிப்போருக்கு இழப்பீடுகள் வழங்கியும், தமிழக அரசு பல்வேறு வகையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறி பல நாள்கள் தவிக்க நேர்ந்தது. அத்துடன், மிகப்பெரும் அளவில் தங்களது உடைமைகளையும் வெள்ளப் பெருக்கால் இழந்து வாட நேர்ந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 7 ஆயிரத்து 150 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன.

உணவுப் பொட்டலங்கள்: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19.63 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு 1.35 கோடி உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் விதத்தில் மாநில பேரிடர் மீட்பு நிதி நெறிமுறைகளின்படி, நிவாரணத் தொகுப்புத் திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.

நிவாரண முகாம்களின் மூலம் உணவு வழங்குதற்கான வகையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொட்டலங்கள் வழங்குதற்கான வகையிலும், வெள்ள நிவாரண தொகுப்புக்காகவும் ஏறத்தாழ 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான அரிசி தேவை உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறுகின்ற நுகர்வோரின் தேவைக்கும் கூடுதலாக இப்போதைய வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அளிக்கப்பட வேண்டிய அரிசியின் அளவாக 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு பொது விநியோகத் திட்டத்திற்காக, தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கும் நிறுவனத்திடம் இருப்பில் உள்ள அரிசியை கூடுதலாக அரிசி தேவைப்படும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான விலையில் தமிழகத்துக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை சிறப்பு ஒதுக்கீடாக வழங்குமாறு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தை தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.

கூடுதலாக மண்ணெண்ணெய்: அதிக எண்ணிக்கையிலான மக்கள், குறிப்பாக நகர்ப்புற குடிசைகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் வாழ்பவர்கள், சமையல் தேவைக்காக மண்ணெண்ணெய், விறகுகளைப் பயன்படுத்துகின்றனர். வெள்ளத்தில் சில குடும்பங்கள், அவர்களுடைய எரிவாயு உருளைகளையும் இழந்து விட்டனர்.

தொடர் கனமழையினால், விறகுகள் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் மண்ணெண்ணையானது, மாநிலத்தின் பெறத்தக்க உரிமையைவிட மிகக் குறைந்த அளவாக உள்ளது. இதனால், எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் வெள்ளத்தினால் எரிவாயு உருளைகளை இழந்து தவிக்கிற குடும்பங்களுக்கு, கூடுதல் மண்ணெண்ணெய் வழங்குவது அவசியமாகிறது. பரவலான கனமழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சுமார் 38.2 லட்சம் குடும்பங்கள் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர்.

இந்த குடும்பங்களுக்கு கூடுதல் அளவில் வழங்க 19 ஆயிரத்து 100 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்த் தேவை உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ், வழக்கமான ஒதுக்கீட்டுடன், 19 ஆயிரத்து 100 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய, பெட்ரோலிய-இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

English summary
tamilnadu chief minister jayalalitha asking to modi In addition to rice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X