For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே கல்லில் 22 மாங்காய்களை அடித்த ஜெயலலிதா...!

Google Oneindia Tamil News

சென்னை: மீண்டும் முதல்வரான பின்னர் கலந்து கொள்ளும் முதல் சட்டசபைக் கூட்டத்தின் 2வது நாளிலேயே முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக இன்று 22 திட்டங்களை அறிவித்தார்.

சட்டசபையில் ஜெயலலிதா திட்டங்களை அறிவி்ப்பது புதிதல்ல. விதி எண் 110-ன் கீழ் அவர் அறிவிக்காத திட்டமே இல்லை. அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் கூட விடாமல் தொடர்ந்து அதைக் கடைப்பிடித்து வருகிறார் ஜெயலலிதா.

மீண்டும் அவர் முதல்வரான பின்னர் முதல்முறையாக நேற்று சட்டசபை கூடியது. முதல் நாளில் அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று முதல் முழுமையான கூட்டம் தொடங்கியது. இன்று ஒரே நாளில் 22 திட்டங்களை அறிவித்து அசத்தி விட்டார் ஜெயலலிதா. அதுவும் ஒரே அறிக்கை மூலம் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் அந்த மிக நீண்ட அறிக்கை:

விசையுறும் பந்தினைப் போல்

விசையுறும் பந்தினைப் போல்

"விசையுறும் பந்தினைப் போல் - உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்" என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி உருகுகிறார் மகாகவி பாரதியார். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால் தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் எளிதில் பெற்று மனித வளக் குறியீட்டில் தமிழகம் சாதனை படைக்க முடியும் என்பதால் தான் எனது தலைமையிலான அரசு, தமிழக மக்களின் உடல் நலன் பேணும் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.

மட்டற்ற மகிழ்ச்சி

மட்டற்ற மகிழ்ச்சி

இதன் காரணமாக, தாய் சேய் நலத்தை பேணிக் காப்பது, தொற்றும் மற்றும் தொற்றா நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது உள்பட அனைத்திலும் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. சுகாதாரச் சேவைகள் மேலும் செம்மையுற்று, அதன் பயன்கள் மக்களை சென்றடையும் வகையில், நடப்பாண்டில் பின் வரும் புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

10 சுகாதார நிலையங்கள்

10 சுகாதார நிலையங்கள்

1. ஆரம்ப சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்த கடந்த நான்காண்டுகளில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 10 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 கோடி ரூபாய் செலவில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இருப்பிட வசதிகள் ஏற்படுத்தும் வண்ணம், 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடி ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ரத்த வங்கிகள், ரத்த சேமிப்பு மையங்கள்

புதிய ரத்த வங்கிகள், ரத்த சேமிப்பு மையங்கள்

பாதுகாப்பான தரமான ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகள் நோயாளிகளின் தேவைக்கேற்ப உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வது இன்றியமையாததாகும். அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுவது மட்டுமல்லாது, டெங்கு போன்ற நோய்களினால் ஏற்படும் இறப்பை தடுப்பதற்கும் ரத்தம் அவசியமாகும். தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற 281 ரத்த வங்கிகளும், 415 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 12 புதிய ரத்த வங்கிகள், 10 ரத்த சேமிப்பு மையங்கள் மற்றும் 10 ரத்த சேகரிப்பு பிரிவுகள் 12 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம்

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம்

தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்களை அரசு மருத்துவமனைகளில் எனது தலைமையிலான அரசு அமைத்து வருகிறது. தற்போது 64 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்கள் செம்மையாக செயல்பட்டு வருகின்றன. இதனை, மேலும் வலுப்படுத்தும் வகையில், தாம்பரம், திருத்தணி, குடியாத்தம், ராஜபாளையம் மற்றும் விருதாச்சலம் ஆகிய 5 மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் டெங்கு, மூளைக்காய்ச்சல், சாலை விபத்து மற்றும் தற்செயலாக விஷம் அருந்துவது போன்ற அபாயகரமானவற்றிலிருந்து அவர்களை காப்பாற்ற, ராஜபாளையத்தில் 20 படுக்கை வசதி கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், தீவிர சிகிச்சைக்குப் பின் நிலைப்படுத்தப்பட்ட குழந்தைகளை அடுத்த 48 மணி நேரத்திற்கு பராமரிக்கும் 5 படுக்கை வசதி கொண்ட ஸ்டெப் டவுன் வார்டும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு வாகனங்கள்

மருத்துவக் கல்லூரிகளுக்கு வாகனங்கள்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை முடிந்து கட்டணம் ஏதுமின்றி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 3 லட்சம் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தை மேலும் செம்மையாக செயல்படுத்த 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 20 வாகனங்கள், 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆம்புலன்ஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆம்புலன்ஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

விபத்துகளினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதற்கும், விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றவும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 406லிருந்து 751ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நடப்பு ஆண்டில், முதல் கட்டமாக 50 பழைய ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக புதிய ஆம்புலன்ஸ்கள் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளம் சிசு பராமரிப்பு மையங்கள்

இளம் சிசு பராமரிப்பு மையங்கள்

ஆபத்தான நிலையில் உள்ள இளம் குழந்தைகளுக்கு இளம் சிசு பராமரிப்பு மையம் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது. இவைகளை வலுப்படுத்தும் பொருட்டு, முதல் கட்டமாக 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இளம் சிசு பராமரிப்பு மையங்களுக்கு 10 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் வெண்டிலேட்டர் போன்ற புதிய உபகரணங்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடையாறு புற்றுநோய் மையம்

அடையாறு புற்றுநோய் மையம்

புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த எனது தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் மண்டல புற்று நோய் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புற்று நோயை குணப்படுத்த அடையார் புற்றுநோய் மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதை ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பாரத பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். எனது கோரிக்கையினை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, சென்னை, அடையாறு புற்றுநோய் மையம், மாநில உயர்நிலை மையமாகவும், ஒப்புயர்வு மையமாகவும் 120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மார்பக புற்று நோயை கண்டறிந்து உறுதி செய்ய 15 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், மேமோகிராபி மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோய் தடுப்பு சிகிச்சை உட்பட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்கு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு வருடத்தில் அனுமதிக்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசே ஏற்கும் வகையில், 10 கோடி ரூபாய் தொகுப்பு நிதி ஒன்று ஏற்படுத்தப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்ததற்கு இணங்க, மாநில அரசின் பங்காக 10 கோடி ரூபாயும், காப்பீட்டு தொகையிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கப் பெறும் தொகையிலிருந்து ஒரு பங்கினையும் சேர்த்து ஒரு தொகுப்பு நிதி 2012-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியிலிருந்து, இதுவரை 2,506 பயனாளிகள் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதற்கென 177 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிதியிலிருந்து பயன்பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கணிசமாக உயர்ந்து வருவதால், இந்த தொகுப்பு நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த தொகுப்பு நிதிக்கு, கூடுதலாக 25 கோடி ரூபாய் அரசின் பங்காக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல் கவுண்டர் கருவி

செல் கவுண்டர் கருவி

சர்க்கரை நோயாளிகளின் மூன்று மாத கால சர்க்கரை சராசரி அளவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அனலைசர் கருவியும், நோய் தாக்கம் மற்றும் ரத்த உட்கூறுகளின் அளவை கண்டறிய செல் கவுண்டர் கருவியும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் என, 302 அரசு மருத்துவமனைகளுக்கு 9 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட்டம் சாரா மருத்துவமனைகள்

வட்டம் சாரா மருத்துவமனைகள்

நிர்வாக வசதிக்காகவும், மக்களின் சிரமங்களை போக்கவும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய வட்டங்களை பிரித்து, புதிய வட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 49 புதிய வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 வட்டங்களில், புதிய தாலுக்கா மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 39 புதிய வட்டங்களில் வட்டத்திற்கு ஒன்று வீதம், 39 வட்டம் சாரா மருத்துவமனைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகளாக 70 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முட நீக்கியல் சிகிச்சை மையம்

முட நீக்கியல் சிகிச்சை மையம்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள முட நீக்கியல் சிகிச்சை மையம், மாநிலத்தில் உள்ள முடநீக்கியல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குகிறது. முடநீக்கியல் நோயாளிகள், மற்ற நோயாளிகளிலிருந்து மாறுபட்டு இருப்பதால், அவர்களுக்கு மருந்துகள் வழங்க மற்ற துறைகளை விட கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே சென்னை அரசு பொது மருத்துவமனையின் முடநீக்கியல் சிகிச்சை மையத்திற்கு, சிறப்பு மருந்துகளுக்காக 5 கோடி ரூபாய், சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அணு மருத்துவம்

அணு மருத்துவம்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பர்னாடு கதிர்வீச்சு நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் அணு மருத்துவத்தைப் பயன்படுத்தி, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் 25 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் இமேஜிங் மற்றும் சிகிச்சை திட்டம் மேம்படுத்தப்படும்.

குழந்தைகள் மருத்துவமனையில் புதிய ஆய்வகம்

குழந்தைகள் மருத்துவமனையில் புதிய ஆய்வகம்

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான சேவை செய்து வருகிறது. இம்மருத்துவமனைக்கு சென்னை மற்றும் வட தமிழகத்திலிருந்து மட்டும் அல்லாது அண்டை மாநிலமான ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மரபியல் காரணங்களால் ஏற்படும் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக உயர்தர ஆய்வகம் ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதல் மருந்துகள்

கூடுதல் மருந்துகள்

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மருந்துக்கு மட்டும் 307 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. நடப்பு ஆண்டில் தொற்றா நோய் தடுப்பு திட்டம், பேறுசார் மற்றும் குழந்தை நலத்திட்டம், நகரும் மருத்துவப் பிரிவு திட்டம் ஆகியவற்றிற்காக கூடுதலாக மருந்துகள் வழங்க 102 கோடியே 51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரிகள்

மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டு மக்களுக்கு தகுதியான மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது இந்த அரசின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாகும். புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது என்பது ஒரு தொலைநோக்கு திட்டமாகும். இந்திய மருத்துவக் குழு மத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள், தேவையான கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆண்டிற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் எனது அரசு புதிய மருத்துவ கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் 100 மாணவர்கள் சேர்க்கையுடன் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக 410 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி

புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசு எடுத்த தொடர் முயற்சிகளினால், கூடுதலாக 710 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரூரில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நான் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளேன். அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென் மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி

தென் மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி

தமிழ்நாட்டில், ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே சென்னையில் உள்ளது. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, இந்த பல் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதன் காரணமாக, முதுகலை பல் மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை 35-லிருந்து 58-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் பல் மருத்துவமனை ஓர் ஒப்புயர்வு மையமாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 50 கோடி ரூபாய் செலவில், தென் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

செவிலியர்களுக்கு விடுதி

செவிலியர்களுக்கு விடுதி

நடப்பாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்களுக்கு 6 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் விடுதி கட்டடம் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியிருப்புகள்

குடியிருப்புகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு தங்கும் குடியிருப்புகள் இருந்தால், அங்கு அவர்கள் தங்கி மேலும் சிறப்பாக பணி செய்ய முடியும் என்பதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 4 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் குடியிருப்புகளும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், 30 தங்கும் குடியிருப்புகள் மற்றும் 400 மாணவர்கள் அமரும் வகையில் விரிவுரை அரங்கமும் கட்டப்படும்.

மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள்

மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள்

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் நோயாளிகளின் வசதிக்காக மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இத்தகைய வசதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், முதல் கட்டமாக 20 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோபியில் புதிய கட்டடம்

கோபியில் புதிய கட்டடம்

கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலிதா அறிவித்தார்.

சுகாதாரத் திட்டங்கள்

சுகாதாரத் திட்டங்கள்

முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்த அத்தனைத் திட்டங்களும் சுகாதாரத் துறை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒரே அறிக்கையில் அவர் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மக்களைக் கவரும் திட்டங்கள்

மக்களைக் கவரும் திட்டங்கள்

அதிலும் ஜெயலலிதா அறிவித்துள்ள அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அம்மா பெண்கள் மாஸ்டர் ஹெல்த் செக்கப் திட்டம் போன்றவை மகளிரைக் கவரும் வகையிலானவை என்பது முக்கியமானது.

மொத்தத்தில் இன்று ஒரே கல்லில் 22 மாங்காய்களை அடித்து விட்டார் ஜெயலலிதா.

English summary
AIADMK chief and Tamil Nadu CM J Jayalalithaa as CM has returned back to assembly once again after her acquittal in connection with a case of disproportionate assets. She announced a 22 point health chart for all sectors of the society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X