For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெடுபிடிகள்... தேர்தல் ஆணையத்தின் மீது ஜெ. வும் பாய்ச்சல்

By Mathi
|

திருவள்ளூர்: தேர்தல் ஆணையத்துடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் கெடுபிடிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jayalalithaa flays EC conditions

திருவள்ளூர் லோக்சபா தொகுதி வடமதுரையில் நேற்று தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதா பேசியதாவது:

இங்கு கூடுகிற கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது தான் எனக்கு வியப்பாக உள்ளது. அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நான் பிரசாரம் செய்யும் போது, அந்த தொகுதி வேட்பாளர் கலந்து கொள்ளக்கூடாது, மேடையில் இருக்கக்கூடாது, அவரது புகைப்படமும் இருக்கக்கூடாது, வேட்பாளரின் பெயரை கூட நான் உச்சரிக்க கூடாது, இத்தொகுதியின் வேட்பாளர் இவர் தான் என்று கூட நான் சொல்லக்கூடாது என்றெல்லாம் இதுவரையில் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு விந்தையான ஆணைகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

அவ்வாறு மீறி வேட்பாளருடைய பெயரை நான் உச்சரித்தாலோ, அல்லது அவர் மேடையில் இருந்தாலோ அல்லது அவரது புகைப்படம் இருந்தாலோ, இந்தக் கூட்டத்திற்கான அனைத்து செலவுகளையும் தேர்தல் ஆணையம் வேட்பாளர் கணக்கில் சேர்த்து விடுமாம். வாக்காள பெருமக்களாகிய நீங்கள் உங்கள் சொந்த செலவில் வாகனங்களில் வந்து செல்லும் செலவும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது. இது என்ன நியாயம்?.

அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், என்னை பொறுத்தவரையில், மேடை அமைப்பு, தோரணங்கள், பதாகைகள், கட்அவுட்டுகள், நாற்காலிகள் போன்ற செலவுகளை வேட்பாளர் கணக்கில் சேர்ப்பதற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், கூட்டம் அதிகமாக கூடுகிறது என்பதைக் காரணம் காட்டி, பொதுமக்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்டு கூட்டத்திற்கு வரும் செலவை கூட வேட்பாளர் கணக்கில் சேர்ப்போம் என்று சொன்னால் அது எப்படி நியாயமாகும்?.

அலைகடலென திரளும் மக்கள்..

ஒரு லோக்சபா தொகுதி என்பது ஒரு மாவட்டத்திற்கு இணையானது. நான் ஒரு மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்கிறேன், ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறேன் என்றால் என்னை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது உரையை கேட்க வேண்டும் என்ற விருப்பத்தில், அந்த தொகுதி முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தாங்களாகவே வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு அலை கடலென திரண்டு வருகிறார்கள். என்னைப்பார்க்க, எனது உரையை கேட்க வருகின்ற மக்கள் கூட்டத்தை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்?. இதை அ.தி.மு.க. நிர்வாகிகள் எப்படி கட்டுப்படுத்துவார்கள்?.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மக்கள் வர வேண்டும், அதற்கு மேல் வரக்கூடாது என்று நான் எப்படி சொல்ல முடியும்? எப்படி தடுக்க முடியும்? இது எங்களால் இயலாத காரியம். மக்கள் ஆர்வத்திற்கு அணை போட முடியாது. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களுக்கு எதிரான செயல்; ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மக்கள் தாங்களாகவே தங்கள் சொந்த செலவில் வாகனங்களில் எனது கூட்டத்திற்கு வரும் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், நான் பேசும் கூட்டத்தில் எனது கட்சியின் வேட்பாளர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது வேட்பாளர் மேடையில் நிற்க முடியாத சூழ்நிலையை, கூட்டத்திற்கு வர முடியாத சூழ்நிலையை, வேட்பாளரின் புகைப்படத்தை கூட ஒட்ட முடியாத சூழ்நிலையை, வேட்பாளர் பெயரை கூட உச்சரிக்க முடியாத சூழ்நிலையை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி விட்டது.

நள்ளிரவில் வீடு வீடாக பிரசாரம்..

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி முதலில் இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யலாம் என்று அறிவித்ததாக செய்தி வந்தது. தற்போது இரவு 10 மணிக்கு பிறகு வீடுகளில் உள்ள வாக்காளர்கள் விரும்பினால் மட்டுமே அவர்களின் வீடுகளுக்கு சென்று வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியும் என்றும், கதவைத்தட்டி பிரசாரம் செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஏன் இவ்வளவு குழப்பம்?. இதுபோன்று, தினம் தினம் புதிய அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதால் அரசியல்வாதிகள் குழம்பி போயிருக்கிறார்கள். மக்களும் குழம்பி போய் இருக்கிறார்கள். தெளிவான எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கலாமே.

மக்கள் விரும்பினால் பிரசாரம் செய்யலாம் என்றும், கதவை தட்டினால் புகார் அளிக்கலாம் என்றும் சொன்னால், அது எப்படி என்று யாருக்கும் புரியவில்லை. வீட்டின் கதவை தட்டிக்கேட்டால் தானே மக்கள் அதை விரும்புகிறார்களா, இல்லையா என்பது தெரியும்? என்னதான் செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் தெளிவாக மக்களுக்கு விளக்கவேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

English summary
AIADMK general secretary Jayalalithaa on Tuesday lashed out at the Election Commission for its latest conditions. Campaigning at Vadamadurai near Tiruvallur, Ms. Jayalalithaa said the Election Commission’s condition that the candidate not be on stage and the party leader not mention the candidate’s name and there be no photograph of the candidate had rendered the purpose of canvassing meaningless.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X