இன்னும் 2 நாள்தான்.. என்னாக போகுதோ தமிழக அரசியல் களம்!

சென்னை: இன்னும் 2 நாள்தான்... தமிழக அரசியல் நிலவரம் என்ன ஆக போகுதோ என்ற பரபரப்பு இப்போதே எகிற தொடங்கிவிட்டது.
என்ன காரணம் தெரியுமா? 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கவழக்கின் இறுதி தீர்ப்பு 5-ம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என்று 2 நீதிபதிகள் உத்தரவிட்டும்... 3-வது நீதிபதியின் உத்தரவுக்காக ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டு போகிறது இந்த விவகாரம்.

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு
எங்களுக்கு சாதாகமாகத்தான் தீர்ப்பு வரும் என்று இரு தரப்பு அதிமுகவினருமே உரத்த குரலில்தான் பேட்டி கொடுத்து வருகிறார்கள். ஆனால் வழக்கின் தீர்ப்பு எந்தவித பாதிப்பையும் ஆளும் தமிழக அரசுக்கு ஏற்படுத்தாது என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளது. அதேசமயத்தில், தீர்ப்பு 18 எம்.எல்.ஏ.களுக்கும் சாதகமாக வரும் பட்சத்தில் அதிமுக அரசுக்கு சிக்கல்தான்.

மேல்முறையீட்டு வழி
சிக்கல் என்றாலும், அந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழிமுறையும் காலஅவகாசமும் இருக்கவே செய்கிறது என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. இழுத்துக் கொண்டே போகும் இந்த வழக்கின் தீர்ப்பின் முடிவு நாளை மறுநாள் வரும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை 5-ம் தேதி இல்லாவிட்டாலும், வெள்ளிக்கிழமை அன்று கண்டிப்பாக தீர்ப்பு வந்துவிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

விஜயபாஸ்கர் விவகாரம்
5-ம் தேதி வெளியாகும் தீர்ப்பினால் பாதிக்கப்பட போவது ஆளும் அதிமுகவா? அல்லது தினகரன் தரப்பா என தெரியவில்லை. ஏற்கனவே ஓபிஎஸ்-ஈபிஎஸ் விவகாரம் முழுமையாக தெரியாமல் அதிமுக தொண்டர்கள் மண்டையை பிய்த்துகொண்டு உள்ளனர். இதற்கு நடுவில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் விவகாரம் வேறு. இதில் வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்க போகிறதோ என்று மேலும் அச்சத்தில் உள்ளனர்.

அழகிரி பில்ட்-அப்?
அதிமுகவில்தான் இப்படி பீதி நிலவுகிறது என்றால், அதே 5-ம் தேதி அமைதி பேரணி... ஒரு லட்சம் மக்கள்... பலத்தை நிரூபிப்பேன் என்று அழகிரி இன்றுகூட மார்தட்டி கூறுகிறார். இது நடக்குமா? இல்லை.. வெறும் பில்ட்-அப்பா தெரியவில்லை. மதுரையில் அவரது ஆலோசனை கூட்டத்துக்கு போடப்பட்ட பந்தல் மற்றும் அங்கிருந்த காலி இருக்கைகள் இன்னமும் பேசப்பட்டு வருகின்றன.

டென்ஷனா? புஷ்வாணமா?
500 பேர் கூட அந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் ஒரு லட்சம் பேர் திரள்வார்கள் என்று உறுதி கூறிவருகிறார் அழகிரி. ஆக ஒரே நாளில் அதிமுக மற்றும் திமுகவுக்கு டென்ஷன் தரப் போகும் 2 சம்பவங்கள் காத்திருக்கின்றன. டென்ஷன் தருமா அல்லது புஸ்வாணம் ஆகுமா... பொறுத்திருந்து பார்ப்போம்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!