திருமணம் செய்து வைக்காத தந்தை மீது ஆத்திரம்.. இரும்பு பைப்பால் அடித்துக் கொன்ற மகன் - கொடூர சம்பவம்!
கள்ளக்குறிச்சி : திருமணம் செய்து வைக்காத விரக்தியில் தந்தையை இரும்புக் குழாயால் அடித்து மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கா.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மூத்த மகன் பாலகிருஷ்ணன். பட்டதாரியான பாலகிருஷ்ணன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக குடும்பத்திற்குள் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

கண்டித்த தந்தை
பாலகிருஷ்ணன், தந்தை சக்திவேல், தாய் சின்னப்பொண்ணு ஆகியோர் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாலகிருஷ்ணனுக்கும் அவரது தாய் சின்னப்பொண்ணுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாலகிருஷ்ணனை அவரது தந்தை பழனிவேல், சத்தம் போடாதே எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இரும்புக் குழாயால்
தந்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் எனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று ஆத்திரத்தோடு கேட்டபடி அருகில் கிடந்த இரும்புக் குழாயை எடுத்து தந்தை பழனிவேலின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

தாய் மீதும் தாக்குதல்
பழனிவேலை தாக்கிய மகனை தடுக்க வந்த தாயையும் தாக்கியுள்ளார் பாலகிருஷ்ணன். தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பழனிவேலையும், சின்னப்பொண்ணுவையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழப்பு
அங்கு பழனிவேலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். சின்னப்பொண்ணு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் தந்தையை அடித்துக் கொலை செய்த பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விரக்தியில்
தனக்கு திருமணம் செய்து வைக்காத விரக்தியில் தந்தையை இரும்புக் குழாயால் பலமாக அடித்து மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications