கமல்ஹாசனின் "விளி" கேட்க வழி மீது விழி வைத்துக் காத்திருக்கும் தமிழகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள திடீர் டிவீட்டுகள் ராத்திரியை பகலாக்க விட்டுள்ளது. பலரும் டிவீட்டைப் பார்ப்பதை விட அதில் உள்ள அர்த்தம் என்ன என்றுதான் அலை பாய்ந்து கொண்டுள்ளனர்.

ஒரு டிவீட்டில் "அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்" என்று கூறியுள்ளார். இதற்கான அருஞ்சொற் பொருள் சுத்தமாக புரியவில்லை.

Kamal Haasan's message to TN politicians?

விரைவில் விளி கேட்கும் என்றால் விரைவில் ஒரு அழைப்பு என்று பொருள் வருகிறது. அதுவரை அமைதி காப்பீர் என்று அவர் கூறுவதாகவும் தெரிகிறது. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் என்று அவர் யாரையோ பார்த்து விமர்சிப்பதாகவும் ஊகிக்கலாம்.

எனவே, இந்த டிவீட்டிலிருந்து நமக்குப் புரிய வருவது என்னவென்றால் (உத்தேசமாகத்தான்) விரைவில் அழைப்பு வரும், அதுவரை அமைதி காப்பீர். அழைப்பு வரும்போது காளான்கள் கருகிச் சாகும் என்பதாக எடுத்துக் கொள்ளலாமா? (என்று தெரியவில்லை).

அடுத்து டிவீட் சற்றே நீளமானது.. முழுமையான தமிழ்க் கவிதை

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
பேடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழன் என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்

நல்ல கவிதையாக உள்ளது. விளங்கிக் கொள்வதுதான் சிரமமாக உள்ளது. கமல்ஹாசனே இதை விளக்கினால்தான் உண்டு. ஆனால் அவர் நாளைதான் விளக்கப் போகிறார். அதிலும் ஆங்கிலத்தில் வரப் போகிறது என்று அவரே கூறியிருமிருக்கிறார்.

விளங்க முடியாத கவிதை நான் என்று முன்பே இயம்பியவர்தான் கமல்ஹாசன். தமிழ்ச் செருக்கும், தமிழ் முறுக்கும் நிரம்பியவர்தான் கமல் ஹாசன்.. புரியாத பாஷையில் பேசுவதை விட புரிந்த பாஷையில் விழி விரிய பேசும் திறம் படைத்தவரும் கூட நமது கலைஞானி.. இன்று அவர் விடுத்துள்ள அம்புகள்.. மன்மத அம்புகளை விட கூர்மையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. இந்த அம்புகள் தாக்கப் போவது யாரை என்பதுதான் விளங்கிக் கொள்ள முடியாத பெரும் குழப்பமாக நமக்குத் தோன்றுகிறது.

சரி, "ஆண்டவரே" சொல்லி விட்டார்.. விளி வரும் வரை காத்திருங்கள் என்று .. விடியும் வரை காத்திருப்போம்... கமல்ஹாசன் என்ற அந்த நடிப்பு மேதை நமக்கெல்லாம் நாளை என்ன சேதி சொல்லப் போகிறார்.. என்ன சொல்லி நம்மை விளங்க வைக்கப் போகிறார் என்பதை விழி விரிய காத்திருப்போம்.. அவரிடமிருந்து கிளம்பப் போகும் விளி கேட்க.. வழி பார்த்து விழி வைத்து.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Haasan's message to TN politicians?
Please Wait while comments are loading...