ரஜினி எந்த கட்சிக்கு தலைவர்? கட்சி தொடங்கி கொள்கையை அறிவிக்கட்டும்.. பார்க்கலாம்... கமல்ஹாசன் நச்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் எந்த கட்சிக்கு தலைவர்? அவர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரட்டும்.. அவரது கொள்கைகள் பொருந்தவில்லை எனில் அதை மட்டும் விமர்சிப்பேன் என கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'பயிர்த்தொழில் பழகு' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள வெற்றி விவசாயிகளின் அனுபவங்களை விவரிக்கும் இந்த நிகழ்ச்சியின் அடுத்தக் கட்டமாக ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை "உழவன் விருதுகள்" வழங்கும் விழா நடைபெற்றது.

சிறந்த இளம் விவசாயி, சிறந்த முன்னோடி விவசாயி, சிறந்த வேளாண் தொழில் முனைவோர், சிறந்த விவசாய கண்டுபிடிப்பாளர் உள்ளிட்ட 8 பிரிவுகளில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 'உழவன் விருதுகள்' நிகழ்வில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி பேசினார் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

Kamal Haasan speaks on Rajinikanth's political party

இதைத் தொடர்ந்து அதே அரங்கத்தின் மேடையில், மக்களின் முன்னிலையில், கமல்ஹாசனுடம் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடத்தினார் 'நியூஸ் 18 தமிழ்நாடு' தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன். 'ரஜினி கட்சி தொடங்கி, அதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் கடுமையாக விமர்சிக்கத் தயங்கமாட்டேன்' என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை மக்கள் முன்னிலையில் பகிர்ந்துகொண்டார் கமல்.

கேள்வி பதில் நிகழ்ச்சி விவரம்:

குணசேகரன்: அ.தி.மு.க. மீது நீங்கள் வைக்கும் விமர்சனங்கள் மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதாக குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. இதற்கு உங்கள் பதில் என்ன?

கமல்: அ.தி.மு.க. என்பது ஒரு கட்சி. அது எப்பொழுது வேண்டுமானாலும் மேம்படலாம்; திருத்திக் கொள்ளலாம். ஆனால், என்னுடைய விமர்சனங்கள் அனைத்தும் இங்கு நடந்துகொண்டிருக்கும் அரசைப் பற்றியது. மக்கள் நீதி மய்யம் என்ற எங்கள் கட்சியைப் போல அ.தி.மு.க. என்பதும் ஒரு கட்சி... அவ்வளவுதான். அதன்மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

குணசேகரன்: அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக சொல்கிறீர்கள்; ரஜினிகாந்தும் சொல்கிறார். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் முதுமை இவற்றின் காரணமாக இந்த விமர்சனங்கள் எழுகின்றன. அ.தி.மு.க.வை பொருத்தவரை அது பிளவுபட்டு இரட்டைத் தலைமைக்குக் கீழே சென்றிருக்கிறது. ஆனால், தி.மு.க., ஸ்டாலின் தலைமையில் வலுவாக இருக்கிறது. இங்கே வெற்றிடம் என்பது எங்கே இருக்கிறது?

கமல்: வெற்றிடம் இருக்கிறது என்று நான் எங்கேயும் சொன்னது இல்லை. இதற்கு நான் பதில் சொல்வது நியாயமாக இருக்காது.

குணசேகரன்: 'அரசியலுக்கு வருபவர்கள் இல்லாத இடத்தை பிடிக்க வருவதில்லை. இருப்பதில் ஒரு வெற்றிடம் உருவாகும் தருணத்தில்தான் அதை நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியான ஒரு முயற்சியாக உங்களின் அரசியல் வருகையைப் பார்க்கலாமா?

கமல்: இங்கு நிரப்பப்பட வேண்டியவை பசித்த வயிறுகளை. நிரப்பப்பட வேண்டியது வேலை வாய்ப்பு தரும் நாற்காலிகளை. நிரப்பப்பட வேண்டியது தரமான கல்விதரும் கல்விக்கூடங்களை. இழுத்து மூடப்பட வேண்டியது, கல்வியை கல்லாப்பெட்டி நிரப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தும் சில அரசியல்வாதிகளின் வியாபாரத்தை.

குணசேகரன்: கலைத்துறையில் எல்லோரும் நண்பர்கள். ஆனால், அரசியல் என்று வரும்போது அப்படி எல்லோரும் நண்பர்களாக இருப்பதற்கான சாத்தியம் குறைவு. ஏனெனில், ஒன்று ஆளுங்கட்சி என்றால் இன்னொன்று எதிர்க்கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் தோழமைக்கட்சி எது, எதிர்க்கட்சி எது, யாரை எதிர்த்து அரசியல் செய்வது, யாரை ஆதரித்து அரசியல் செய்வது என சில திட்டவட்டமான முடிவுகள் இருக்கின்றன. அப்படி, அரசியலில் உங்களுடைய நண்பன் யார்? எதிரி யார்?''

கமல்: மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர்கள் என் அரசியல் நண்பர்கள். ராஜதந்திரமும், பணம் சேர்ப்பதும்தான் முக்கியம் என்று கருதுவோர் என் அரசியல் எதிரிகள். அவர்களுக்குத் தனியாக பெயர் பட்டியலோ, கட்சிப் பெயர்களோ தேவையில்லை.

குணசேகரன்: ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?

கமல்: தேர்தல் வரட்டும்... சொல்கிறேன்"

குணசேகரன்: ராஜாஜி, காமராசர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... - இதுவரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களில் இந்த ஏழு பேரும் முக்கியமானவர்கள். இதில் நல்லாட்சி என வரும்போது, 'எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை வழங்குவோம்' என்று சிலர் சொல்கின்றனர். காமராசரின் நல்லாட்சியை வழங்குவதாக வேறு சிலர் சொல்கிறார்கள். நீங்கள் தருவதாக சொல்கிற ஆட்சி, இந்தப் பட்டியலில் எது?

கமல்: நிச்சயமாக என்னுடைய ஆட்சி வேறு சாயலில்தான் இருக்கும். நான் நடிப்பில் இருக்கும்போதே அப்படித்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் குறிப்பிட்டவற்றில் எந்தெந்த ஆட்சிகளில் எல்லாம் நல்லவை நடந்தனவோ, அவற்றை பின்பற்றுவதற்கு மக்கள் நீதி மய்யம் முயற்சிக்கும். எந்தெந்த ஆட்சிகள் எல்லாம் இருண்டு கிடந்தனவோ, அந்த இருட்டிலும் கூட ஏதேனும் வெளிச்சம் தென்படுகிறதா என்று தேடுவோம். இவற்றின் மூலம் மக்களுக்கான ஓர் ஆட்சியை அமைக்க முடிந்தால், அதுதான் இந்த இயக்கத்தை தொடங்கியதற்கான உண்மையான அர்த்தமாக இருக்கும்"

குணசேகரன்: எல்லாவற்றில் இருந்தும் சிறந்ததை எடுத்துக்கொள்வோம் என்று சொல்ல வருகிறீர்களா?"

கமல்: ஆம்... சிறந்ததை எடுத்துக்கொள்வோம் என்பது மாத்திரம் அல்ல... தேவையற்றதை நிராகரிக்கவும் செய்வோம்.

குணசேகரன்: இதற்கும் உதாரணம் கேட்கிறேன். 'சிறந்ததை எடுத்துக்கொள்வோம்' என்பதற்கு உதாரணம் எது? 'தேவையற்றதை நிராகரிப்போம்' என்பதற்கு உதாரணம் எது?

கமல்: இங்கப் பாருங்க... வரப்போகும் தேர்தலில் அய்யா காமராசருடன் போட்டிப் போடப்போவது இல்லை. அண்ணாவுடனோ, எம்.ஜி.ஆருடனோ போட்டிப் போடப்போவது இல்லை. யாருடன் போட்டி போட வேண்டியிருக்கிறதோ, அவர்களிடம் ஏதேனும் நல்ல அம்சங்கள் இருந்தால் அதையும் எடுத்துக்கொள்வோம். கெட்டவை இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்போம்.

குணசேகரன்: ''இந்து தேசியம், தமிழ்த் தேசியம் என பல தேசியங்கள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் இவற்றில் இருந்து வேறுபட்டு, 'கிராமியமே தேசியம்' என்கிறீர்கள். கிராமியமே தேசியம் என்றால் என்ன பொருள்? இதை மக்கள் எப்படி புரிந்துகொள்வது?''

கமல்: 'இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றால் மிகவும் தாமதமாகிவிட்டது என்று பொருள். ஏனெனில், 1930-களில் இருந்து காந்தி சொல்லிக்கொண்டிருக்கிறார். சரித்திரம்தான் எனக்கு அவரை அடையாளம் காட்டியது. காந்தியின் பக்தர்கள் வாயிலாக நான் காந்தியை சென்றடையவில்லை. அவருடைய விமர்சகர்கள் வாயிலாகவே நான் காந்தியை வந்தடைந்தேன். இன்று நான் காந்தியின் மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். அவர், 'இந்த தேசத்தின் முதுகெலும்பு கிராமங்கள்தான்' என்று சொல்லியிருக்கிறார். 'கிராமியமே தேசியம்' என்பதை விளக்க இதைவிட சிறந்த சொற்றொடரை தேடுவதற்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன்"

கேள்வி: 'மய்யம்' என்ற சொல்லுக்கு சமீபத்தில் கூட ஒரு விளக்கம் தந்தீர்கள். மய்யத்தில் இருந்து பார்க்கும்போதுதான் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும் என்று சொன்னீர்கள். இடதுமுனையில் இருந்து பார்த்தால் மய்யத்தில் இருப்பது கூட வலதுதான். வலது முனையில் இருந்து பார்த்தால் மய்யத்தில் இருப்பது கூட இடதுதான். எனவே, பிரச்னைகளைப் புரிந்துகொள்வதற்கு மய்யத்தில் இருப்பது சரி. புரிந்துகொண்டபிறகு எதிர்வினையாற்ற எது சரியானது? இடதா? வலதா?''

கமல்: தராசில் இருக்கும் முள்ளைப் போன்று இருக்க வேண்டும். எது நியாயமான பாரம் என்று தோன்றுகிறதோ, அந்தப் பக்கம் சாய்ந்தே ஆக வேண்டும். இதில், இடதா வலதா என என்னால் பச்சைக்குத்திக்கொள்ள முடியாது. மய்யம் என்பது நான் கண்டுபிடித்தது அல்ல. Centrism என்பது உலகம் முழுவதும் நிகழத் தொடங்கியிருக்கிறது. பிரெஞ்சு அதிபர் மேக்ரான், தன்னை 'centrist' என்றே சொல்லிக்கொள்கிறார். 'March of the republic' என்று பிரெஞ்ச்சில் அர்த்தம் வரும் அவருடைய கட்சியும் அப்படித்தான் அடையாளப்படுத்திக்கொள்கிறது. செக்கோஸ்லோவாக்கியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் 'centrist' நிலைபாட்டுடன் சில கட்சிகள் இருக்கின்றன. ஆகவே, இது உலகளாவிய அளவில் மேலோங்கிவரும் ஓர் அரசியல் நிலைபாடு. நான் அதன் பிரதிபலிப்பாக; அதன் மாணவனாக இருக்கிறேன்.''

குணசேகரன்: உலகம் முழுவதும் வலதுசாரிகளின் செல்வாக்கு மேலோங்கி வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரெம்ப்பின் வெற்றி இதற்கு ஓர் உதாரணம். இந்தியாவிலும் கூட 20-க்கும் அதிகமான மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி செய்கிறது. இந்தியாவிலும் ஒரு வலதுசாரி எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?''

கமல்: ஆம்... இந்தியா என்கிற இந்த கடலில் அலை எழும்பும்; அலை அடங்கும். இன்னும் 10 வருடங்கள் கழித்து நீங்கள் இப்படி கேட்டால், இந்த கடலில் Centrism என்ற அலை வீசிக்கொண்டிருக்கலாம். அந்த அலையில் நாங்கள் சந்தோஷமாக மிதந்துகொண்டிருப்போம் என்று நம்புகிறேன்.

குணசேகரன்: ''கொள்கையை முன்வைத்து மக்களைத் திரட்டி தேர்தலை சந்தித்து ஆட்சியை கைப்பற்றுவது ஒரு வகை. ஆனால், கட்சியைத் தொடங்கிவிட்டு, 'ஆட்சியைப் பிடித்தபிறகு கொள்கைகளைச் சொல்கிறோம்' எனச் சொல்வது என்ன வகை?''

கமல்: ஆட்சியைப் பிடிப்போம் என்று நான் சொல்லவில்லை. 'இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்' என்றுதான் சொல்லியிருக்கிறேன்; சொல்கிறேன். நாளை ஒருவேளை நான் சொல்வதைப் போல இந்த ஆட்சி அகற்றப்படுமானால், அது நான் செய்தது அல்ல; மக்கள் செய்தது... மக்கள் நீதி மய்யம் செய்ததாகவே இருக்கும். இதுதான் மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோள். கொள்கை என்னவென்றால், ஒரே வார்த்தைதான்... மக்கள் நலன். அது ஒன்றுதான் கொள்கை. அதற்கும் கீழே ஆயிரம் திட்டங்கள் வகுக்கலாம். அவற்றை எல்லாம் விளக்கி ஒரு அறிக்கை வெளியிடவிருக்கிறோம். இன்னும் 170 நாட்களில் அதை வெளியிடுவோம்"

குணசேகரன்: ரஜினிகாந்த் உங்கள் நீண்டகால நண்பர். அவரை விமர்சிப்பதில்லை என்ற நிலைபாட்டை எடுத்துள்ளீர்கள். அரசியல் களத்தில் நீங்கள் ஒரு கட்சியின் தலைவர்... அவர் ஒரு கட்சியின் தலைவர்..''

கமல்: அவர் எந்தக் கட்சியின் தலைவர்?

கேள்வி: நீங்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராக இருப்பதைப் போல, ஆன்மிக அரசியலை முன்வைத்துத் தொடங்கப்போகும் ஒரு கட்சியின் தலைவர் அவர்..

கேள்வி: அவர் வரட்டும்; கட்சி என்று தொடங்கட்டும். அதற்குப் பெயர் வைக்கட்டும். நான் 'மக்கள் நலன்' என்று ஒரு வார்த்தையில் கொள்கையை சொல்லியிருக்கிறேன். இதைப்போல அவரும் அவருடைய கொள்கையைச் சொல்லட்டும். அதன்பிறகு இரண்டும் பொருந்துகிறதா என்று பார்ப்போம். அப்படி பொருந்தவில்லை என்றால், அப்பொழுதும் ரஜினியை விமர்சிக்க மாட்டேன். அவருடைய கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பேன். இது எங்கள் அரசியல் மாண்பு.''

கேள்வி: தனிப்பட்ட நட்பில் ஒருவரை விமர்சிக்காமல் இருக்கலாம். ஆனால் கட்சி அரசியல் என்று வந்துவிட்டால் அதன் கொள்கைகளை; செயல்பாடுகளை எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்?''

பதில்: 'தனி நபரை விமர்சிக்க மாட்டோம் என்றுதான் சொல்கிறேன். அப்படி விமர்சிக்கும் கட்சிகள் இங்கே நிறைய இருக்கின்றன. ரஜினி அவர்கள் கட்சித் தொடங்கிய பின்னர், அவருடைய கொள்கைகளை அறிந்தபின்னர் அதில் எங்களுக்கு விமர்சனம் இருந்தால் அது கடுமையானதாக இருக்கும்; பாராட்டுக்கள் இருந்தால் அது திறந்த மனதுடன் இருக்கும்.''

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Makkal Neethi Maiam President Kamal Haasan said that after Rajinikanth starts his political party and announces his ideology, if i disagree it then will criticise.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற