ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு... மதுரை பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு

சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தை கமல்ஹாசன் திடீரென இன்று சந்தித்து பேசியுள்ளார். மதுரையில் 21-ஆம் தேதி நடத்தப்படும் பொதுக் கூட்டத்துக்கு ரஜினிக்கு கமல் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு மே மாதம் சிஸ்டம் சரியில்லை என்று கூறியதன் மூலம் அவரது அரசியல் ஈடுபாட்டை மறைமுகமாக உணர்த்தினார். பின்னர் தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று ரஜினி தெரிவித்தார்.
பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்தார்.

ராமேஸ்வரம்
இதனிடையே கடந்த சில மாதங்களாக தமிழக ஆட்சியாளர்களை கமல் விமர்சனம் செய்து வந்த நிலையில் தானும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளேன் என்று கூறினார். வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கவுள்ளார்.

கமல் சந்திப்பு
இந்நிலையில் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இதையடுத்து கமலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சென்னையில் சந்தித்தார். இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார்.

பிடித்த தலைவர்கள்
நேற்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்தார் கமல். அப்போது ஆதர்ஷ தலைவர்களை தாம் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இடதுசாரிகள் மட்டுமின்றி அனைவரையும் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மதுரை கூட்டத்துக்கு அழைப்பு
இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு இன்று கமல் திடீரென வருகை புரிந்தார். அப்போது மதுரையில் 21-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். கமல்ஹாசனும் ரஜினியும் அரசியல் குறித்து தங்கள் நிலைப்பாடுகளை அறிவித்த பின்னர் முதல் முறையாக சந்தித்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!