For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய மோசடி- போலி வாக்காளர்களை நீக்க கருணாநிதி வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் உடனே நீக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வாக்காளர் சேர்ப்பில் மிகப் பெரிய மோசடி நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது வாக்காளர் பட்டியல் மூலம் வெளி வந்திருக்கும் புள்ளி விவரங்களிலிருந்தும், இந்தப் புள்ளி விவரங்களை, மக்கள் தொகை புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் தெரிகிறது.

Karunanidhi appeals to ECI

"டைம்ஸ் ஆப் இந்தியா"" (21-1-2016) - "2016இல் தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிக வாக்காளர்கள்" என்றதலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் நான்காண்டுகளில் அதாவது 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, தற்போது 2016 ஜனவரியில் 22 சதவிகித வாக்காளர்கள் அதிகமாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77கோடியில் தற்போது 20-1-2016 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி, அதாவது 75.56 சதவிகிதம் பேர். இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை.

​2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 23.4சதவிகிதம் பேர்.

15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 6 சதவிகிதம் பேர். எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், அதாவது வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள் 23.4 + 6 = 29.4சதவிகிதம் பேர். மக்கள் தொகையில், மீதம் உள்ள 70.40சதவிகிதத்தினரே, வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள வாக்காளர் பட்டியலில் 75.56சதவிகிதம் பேர் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது. இதிலிருந்து 5.16 சதவிகிதம் பேர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாதவர்கள் அதாவது போலி வாக்காளர்கள், வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில், சுமார் 40 இலட்சம் பேர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது டைம்ஸ் ஆப் இந்தியா தந்துள்ள விவரம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தந்துள்ள விவரப்படி - தேர்தல் ஆணையம் மொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 71.16 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிட்டிருந்தது. அந்தக் கணக்கை எடுத்துக் கொண்டால் கூட, தேர்தல் ஆணையம் அனுமானித்ததை விட 4 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின்படி பார்த்தால், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 31 இலட்சமாகும்.

வாக்காளர் பட்டியல்படி பொதுவாக ஒரு தேர்தலுக்கும் அடுத்து வரும் தேர்தலுக்கும் இடையே 10 முதல் 12 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆனால் இப்போது வெளியிடப் பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலை விட இப்போது 22 சதவிகிதம் அளவுக்கும் கூடுதலாக வாக்காளர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. இந்த அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாகி இருப்பதற்கு என்ன காரணம் கூறப்படுகிறதென்றால், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கூடுதலான பேர் கட்டடத் தொழில் செய்து வாழ்வாதாரம் ஈட்டுபதற்காக, வருகை புரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் கட்டிடத் தொழில் முன் எப்போதையும் விட வளர்ந்து விட்டதாகவோ, வெளி மாநிலங்களிலிருந்து கட்டிடத் தொழில் செய்து பிழைப்பதற்காக அதிகம் பேர் இங்கே வந்து விட்டதாகவோ செய்தி எதுவும் இல்லை, மாநிலத்தில் தொழிற் சாலைகளும் அதிகமாக உருவாகி, புதிய வேலை வாய்ப்புகள் பெருகிடவில்லை என்பது தான் உண்மை. இதிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திலே அதிகம் பேர் குடியேறி விட்டார்கள் என்பதால் வாக்காளர் எண்ணிக்கையும் அபரிமிதமாக உயர்ந்து விட்டது என்ற தகவலும் உண்மைக்குப் பெரிதும் மாறானது.

ஆளும் அதிமுக வினரின் தலையீட்டில் ஏராளமாகப் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று தி.மு. கழகத்தின் சார்பில் ஏற்கனவே குரல் கொடுத்திருக்கிறோம். எனினும் அதைக் கவனித்துக் களைவதற்கான அதிகாரம் படைத்தவர்கள் அலட்சியப்படுத்தியதால், தொடக்க நிலையில் ஏற்பட்ட தவறுகள் பெருகி, இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் சட்டப்படித் தகுதி இல்லாதவர்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய அபாயகரமான நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தையும், தேர்தல் முறைகளையும் கேலிக்கூத்தாக்கும் போலி வாக்காளர் சேர்த்தலைக் கண்டு பிடித்து நீக்கிடத் தேவையான அவசர நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டுமென்று பெரிதும் வலியுறுத்துகிறேன்!

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has appealed to Election Commission on Voters list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X