திமுகவினர் 7 பேரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: பழைய பதவிகள் வழங்கப்பட்டது
சென்னை: திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 7 பேரின் சஸ்பெண்ட் உத்தரவை அக்கட்சி தலைவர் கருணாநிதி ரத்து செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கட்சி பணிகளை முறையாக செய்யாததாகவும், கட்சியின் விதிகளை மீறியதாகவும் கூறி 2 மாவட்ட செயலாளர்கள் உள்பட 33 பேரை திமுக தலைவர் கருணாநிதி சஸ்பெண்ட் செய்தார்.
இதையடுத்து அவர்கள் இது குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விளக்க கடிதம் அனுப்பிய 7 பேரின் மனுக்களை பரிசீலித்த கருணாநிதி அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் ரத்து செய்துள்ளார்.

இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளரான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
7 பேரின் விளக்க கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர்கள் வகித்து வந்த பதவிகளிலேயே மீண்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் பதவி அளிக்கப்பட்டவர்களின் விவரம்,
1. தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் வசந்தம் க.கார்த்திகேயன்
2. பொள்ளாச்சி நகர செயலாளர் தென்றல் செல்வராஜ்
3. வால்பாறை ஒன்றிய செயலாளர் கோழிக்கடை கணேசன்
4. குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜ மாணிக்கம்
5. கவுண்டம்பாளையம் நகர செயலாளர் கே.எம். சுந்தரம்
6. பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றிய செயலாளர் டி.சி.சுப்பிரமணியம்
7. மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் கனகு என்ற கனகராஜ்
தர்மபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் முல்லை வேந்தன் மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் ஆவார். தற்போது தர்மபுரி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் கலைக்கப்பட்டு ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக்கப்பட்டு அதற்கு தடங்கள் பெ. சுப்பிரமணியம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.