For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லை பெரியாறு பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடவில்லை: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப்பெரியாறு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாதான் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்திய உச்சநீதிமன்றம் 7.5.2014 அன்று தீர்ப்பளித்தவுடன், அது குறித்து செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கருத்து கேட்டபோது, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து தி.மு.க.வின் சார்பில் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லாமல் ஒரே வரியில், "முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது" என்று சுருக்கமாகப் பதில் அளித்தேன்.

Karunanidhi clarifies his stand in Mullaiperiyar dam issue

ஆனால் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பு பற்றி 7.5.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் வழக்கம்போல என்மீது அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். அதற்குப் பதிலளித்திடும் வகையிலே தான், 27.2.2006 அன்று சொல்லப்பட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு பற்றியும், கேரள அரசின் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தி.மு.க. அரசு மேற்கொண்ட முயற்சி- விசாரணைக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் - நிறைவு கட்டமாக 7.5.2014 அன்று வெளியிடப்பட்ட உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஆகியவற்றைப் பற்றியும் 8.5.2014 அன்று விளக்கியிருந்தேன்.

தற்போது (10.5.2014) ஜெயலலிதா "முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்" என்று எனக்கு அறிவுரை கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை, என்னுடைய அறிக்கையையும், ஜெயலலிதாவினுடைய அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து கொள்வார்கள்.

ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் "கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட நிலுவையில் இருந்த வழக்குகளை உச்சநீதி மன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு மாற்றல் மனு ஒன்றை 1998-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினையை மீண்டும் அரசியலாக்கி ஆதாயம் தேட எத்தனித்திருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, "உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றல் மனு 13.12.1999 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் சார்பில், இரு மாநிலங்களுக்கிடையே பேச்சு வார்த்தை நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து, வழக்கை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏதேனும் ஒரு வகையில் இரு மாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகக் கூடும் என்ற எண்ணத்தில் உச்சநீதிமன்றம் விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

அதன்படி 5.4.2000 அன்று நான் திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். கேரள அரசு தனது பிடிவாதமான நிலையை தளர்த்திக் கொள்ளாததால், அந்தப் பேச்சு வார்த்தையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

தொடர்ந்த 19.5.2000 அன்று டெல்லியில் மத்தியில் நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நானும், என்னோடு அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் தம்பி துரைமுருகன் கலந்து கொண்டோம். அப்போதும் கேரள அரசின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாததால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீரியியல் பொறியாளர்கள் 7 பேர் கொண்ட குழு ஒன்றினை 14.6.2000 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்தது. மத்திய நீர்வளத் துறையின் தலைவர் பி.கே.மிட்டல் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார்.

தமிழக அரசின் சார்பிலும் கேரள அரசின் சார்பிலும் பிரதிநிதிகள் அந்தக் குழுவில் இடம் பெற்றனர். இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்று ஆய்வு நடத்தி, 10.10.2000 அன்று அணையை நேரடியாகவே பார்வையிட்டு பின்னர், 2001 மார்ச் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து இடைக்கால நிவாரணமாக 142 வரை உயர்த்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதனை அடுத்த மத்திய அரசு, வல்லுநர் குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் தமிழக அரசின் கருத்தினையும் கோரியது. இதற்கிடையே தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு தாக்கல் செய்ததற்குப் பிறகு தி.மு.க. அரசு தொடர்ந்து எப்போதும் போல முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. எனினும் எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்க நினைக்கும் ஜெயலலிதா, இனியாவது குறைந்தபட்சம் முல்லைப் பெரியாறு பிரச்சினையையாவது அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், அது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை பொது மக்களின் குடிதண்ணீர்ப் பிரச்சினை என்பதால் அரசு நிர்வாக ரீதியான தொடர் நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்வதே நல்லது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi has refuted the charges of CM Jayalalitha in Mullaiperiyar dam issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X