For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை, வெள்ளத்தால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கிடுக....கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மழை, வெள்ளத்தால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை, புயல் அபாயம் ஆண்டுதோறும் ஏற்படுவதும், அதற்காக அரசு சார்பில் முன்னேற்பாடுகள் எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு, எந்த நிலையையும் எதிர்கொள்ளத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும்.

Karunanidhi demands Rs 10 lakh solatium to flood victims

ஆனால் தமிழ் நாட்டிலே அரசு என்ற ஒன்று இருக்கிறதா? இருந்தால் அது செயல் ஊக்கத்தோடு காரியமாற்றுகிறதா என்பதே தான் கேள்விக்குறியாக உள்ளதே! நாளேடுகளில் பெரு மழை பெய்யப் போகிறது என்றும், காற்று அழுத்தத் தாழ்வு மண்டலம் வங்கக் கடல் பகுதியிலிருந்து அரபிக் கடலை நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளது என்றும், அதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை கடுமையாக இருக்குமென்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்த நிலையில்,

அரசு என்ற ஒன்று இருந்தால் அந்த எச்சரிக்கையைப் புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? கோடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்து விட்டு, தீபாவளிக்காகச் சென்னை வருகின்ற முதல் அமைச்சர் ஜெயலலிதா, இந்தப் பெருமழையை யொட்டி, அதிகாரிகளை அழைத்து விவாதிக்க வந்திருக்கக் கூடாதா? ஏன், 8ஆம் தேதியன்றே சென்னை திரும்பிய முதலமைச்சர், கடந்த ஒரு மாதமாக தலைமைச் செயலகம் எங்கே, எப்படி இருக்கிறது என்றே சிறிதும் கவலைப்படாமல் இருந்து வந்தாரே, வந்தவுடன் 9ஆம் தேதி யன்றே தலைமைச் செயலகத்திற்கு வந்து மாநில மக்களின் நலன் - பாதுகாப்பு கருதி மழை, வெள்ளம் பற்றி அதிகாரிகளோடு விவாதித்திருக்க வேண்டாமா?

நான் முதல் அமைச்சராக இருந்த போது, புழல் ஏரி உடையக் கூடிய நிலை உள்ளதாக உளவுத் துறை மூலமாக நள்ளிரவில் எனக்குத் தகவல் கிடைத்ததும், நள்ளிரவு 2.30 மணிக்கே தலைமைச் செயலகத்திற்கு சென்று காவலர்களை அழைத்து நானே அலுவலகத்தைத் திறக்கச் சொல்லி, மக்கள் தலைவர் மூப்பனார் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களை அந்த நேரத்திற்கு வரவழைத்து, அதிகாரிகளோடு கலந்தாலோசித்து விட்டு, அவர்களையும் அழைத்துக் கொண்டு புழல் ஏரிக்கே நேரில் சென்றவன், இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் சொல்வதென்றால், "நான்" அல்லவா? "என்னுடைய தலைமையிலான ஆட்சியில்" எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்லவா?

ஏன் இது போன்ற பெருமழை பெய்து, "தானே" புயல் வீசிய போது, ஆட்சியிலே இல்லாத நிலையிலும் காரிலேயே நான் பயணம் செய்து, கடலூரிலும், மரக்காணம், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர் பகுதிகளிலும் நேரிலே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு ஆறுதல் அளித்தவன் நான் அல்லவா? தி.மு.க. சார்பில் கட்சியினரை முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.

கழகத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளுக்காக வழங்கச் செய்தேன். ஆனால் இப்போது என்ன நிலை?

சிறுதாவூரில் ஓய்வு - கோடநாட்டில் ஓய்வு! எப்போதும் ஓய்வெடுப்பதற்கா ஒரு முதலமைச்சர்? உடல் நலம் சரியாக இல்லாமல், மருத்துவ மனையிலே இருந்தால் கூட அதை ஒரு காரணமாகக் கூறலாம். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்தோடு, அதிகாரிகளை யெல்லாம் கோடநாட்டிற்கே வரவழைத்து விவாதம் நடத்திக் கொண்டிருக்க வில்லையா? காலத்தைக் கழிக்கிறார் என்றால் இது ஒரு நாடா? முதல் அமைச்சருக்கு முடியவில்லை யென்றால், மற்ற அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? தலைமைச் செயலகத்திற்கு வருகிறார்களா? தங்கள் தங்கள் துறைகளின் மூலமாக எப்படியெல்லாம் ஆதாயம் பெறலாம் என்பதில் தான் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, மக்களை வளைத்திருக்கும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்களா?

இப்போது என்ன நிலை? தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்ப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. நீலகிரி, ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நீலகிரி மலை ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மரங்களும் வழியில் முறிந்து கிடப்பதால் மலை ரயில் நான்கு நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பெருமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலே மழை நீர் வடிந்தோடுவதற்கு வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாகவும், பாம்புகளும், விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் படையெடுத்து வருவதாகவும் பொது மக்கள் பயந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. சேலத்தை அடுத்த கன்னங்குறிச்சியில் ஏரி நிரம்பி, வெள்ள நீர் விவசாய நிலத்தில் புகுந்து, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

ஏற்காடு மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குழித்துறை, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால், வெள்ள அபாயம் உள்ளதாக மக்கள் பீதியிலே உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தை அடுத்த கடம்பூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வாழை மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் ஐந்து ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களும், பத்தாயிரம் ஏக்கரில் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் மழைநீரில் மூழ்கி மிதக்கின்றனவாம். பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிடவோ, விவசாயிகளைச் சந்திக்கவோ அரசு சார்பில் யாரும் வரவில்லை.

தலைநகர் சென்னையிலோ கேட்கவே வேண்டியதில்லை. ஜெயலலிதா வெற்றி பெற்ற ராதாகிருஷ்ண நகர் தொகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மனித வாழ்க்கை பெரும் சோதனைக்குள்ளாகி விட்டது. தரமணி பகுதியில் பெரியார் நகர், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதாம். பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை மாநகராட்சி, அம்மையாருக்குப் பாராட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதிலும், எதிர்க் கட்சிகளைத் தாக்கித் தரக் குறைவாகப் பேசுவதிலும் நேரத்தைக் கழித்த காரணத்தினால், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டது. மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து பல இடங்களில் மக்கள் சாலை மறியலிலே ஈடுபட்டுள்ளார்கள். சென்னையின் பல பகுதிகளிலே மரங்கள் முறிந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் கொடுமை, மின்சாரம் பல இடங்களிலே "கண்ணாமூச்சி" விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.

என்.எல்.சி. நிறுவனத்தில் நிலக்கரி வெட்டும் பணி முடங்கியதால் 1,540 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடிய வில்லை. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வெள்ள நீர் வடிவதற்கான நடவடிக்கை எதையும் அரசு நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுவதால் மக்கள் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். விழுப்புரம் போன்ற சில மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தப் பெருமழை காரணமாக பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரமே அரசு சார்பில் இதுவரை தரப்படவில்லை. ஒவ்வொரு ஏட்டிலும் 13 பேர் என்றும், 20 பேர் என்றும் வெவ்வேறு தகவல்கள் தரப்படுகின்றன. மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூரில் மாவட்டத்தில் மட்டுமே சுமார் 12 பேர் மழைக்குப் பலியாகி விட்டதாக செய்திகள் வந்தன. அண்டை மாநிலங்களோடு கலந்து பேசி குடிநீரோ, மின்சாரமோ பெற்றுத் தருவதிலும் ஜெயலலிதா அக்கறை காட்டவில்லை. டெல்லி சென்று மத்திய அரசுடனும், பிரதமருடனும் விவாதித்து தமிழகத்துக்குத் தேவையான உதவிகள் எதையும் பெற்றுத் தர வில்லை. மாறாக அதிகாரிகள் அவ்வப்போது எழுதிவைத்திடும் கடிதங்களில் கையெழுத்து போடுவதோடு, கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறார். முதல்வருக்கு வருகின்ற கோப்புகளைக் கூடத் தனித் தனியாகப் பார்த்து கையெழுத்திடுவது இல்லையாம்!

மக்களாட்சி எவ்வாறு வெறும் காணொலிக் காட்சியாக மட்டுமே தமிழகத்திலே நடைபெறுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை. தற்போது பெய்த பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் , அரசின் சார்பில் உடனடியாக தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும். உரிய முறையில் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட வேண்டும். மழையின் காரணமாக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்ச ரூபாய் உடனடியாக வழங்கப்பட வேண்டும். பயிர் நாசம் காரணமாக வேளாண்மை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படவேண்டும். வீடு இழந்த மக்களுக்கு தகுந்த உதவித் தொகை தரப்பட வேண்டும்.

மழை வெள்ளத்தின் தொடர்ச்சியாக, தொற்று நோய் பரவிட வாய்ப்புகள் அதிகம் என்பதால்; "டெங்கு" பாதிக்கப்பட்டோர் பற்றிய பதிவுகளை ஆவணங்களிலிருந்து அகற்றியதைப் போன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபடாமல்; நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தி.மு. கழகத்தின் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டக் கழக உடன்பிறப்புகள் பாதிக்கப் பட்டோருக்கு உதவிட வேண்டும். தலைமைக் கழகத்தின் சார்பில், மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has demanded Rs 10 lakhs solatium to Cuddalore flood victims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X