For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக அணி 'ஜனநாயக முற்போக்குக் கூட்டணி' ஆனது!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீடு நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் திமுக அணிக்கு ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுக்கு மயிலாடுதுறை, தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

Karunanidhi discuss with alliance leaders

2 தொகுதிகள் கேட்ட முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டாலும் எந்த தொகுதி என்பது அறிவிக்கப்படவில்லை. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 பொதுத் தொகுதி மற்றும் 2 தனித் தொகுதிகளை கேட்டு வருகிறது.

இது தொடர்பான நேற்றைய பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி சுமார் 3 மணி நேரம் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கலிபூங்குன்றன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தேர்தல் பிரச்சாரம் குறித்தும் தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் திமுக அணிக்கு "ஜனநாயக முற்போக்கு கூட்டணி" (ஜ.மு.கூ) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எப்போதும் கூட்டணி கட்சிகளை கைவிடமாட்டோம்- கருணாநிதி

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

இந்தக் கூட்டணிக்கு "ஜனநாயக முற்போக்குக் கூட்டணி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே, முதலில் நம்முடைய இந்தக் கூட்டணிக்கு பெயர் ஒன்றைச் சூட்டி விட்டு, என் பேச்சைத் தொடங்கலாம் என்று கருதுகிறேன். இந்தக் கூட்டணியை நாம் "ஜனநாயக முற்போக்குக் கூட்டணி"" என்று அழைப்போமாக!

காலையிலிருந்து இதுவரை நம்முடைய கூட்டணி கட்சிகளிலே இடம் பெற்றுள்ள தலைவர்களும், நிறைவாக கி. வீரமணியும் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள். எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துகளைப் பற்றிய விவாதங்களில் நான் ஈடுபட விரும்பவில்லை.

ஆனால் இங்கே முன் வைத்துள்ள அனைத்துக் கருத்துக்களையும் ஆராய்ந்து, தெளிந்து அதன்படி நடவடிக்கை மேற்கொள்ள என்னால் இயன்ற எல்லா விதமான முயற்சிகளையும் எடுப்பேன் என்ற உறுதியை முதற்கண் உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் விரும்பியவாறு, இந்தக் கூட்டணிக்கு "ஜனநாயக முற்போக்குக் கூட்டணி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலும், நாங்கள் மதிக்கப்பட வேண்டுமென்று ஒரு சில கருத்துகள் இங்கே கூறப்பட்டன; மாவட்ட அளவிலே மாத்திரமல்ல, ஒன்றிய அளவிலே கூட உங்களுடைய கருத்துகள் மதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நானே முன் நின்று செய்து கொடுப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கான அறிவுரைகளை வெகு விரைவில் ஒரு சில நாட்களிலேயே, மாவட்டச் செயலாளர்களுடைய கூட்டம் கூட்டப்பட்டு, அவர்கள் மூலமாக அந்த அறிவுரை வழங்கப்படும். மாவட்ட அளவிலே, தோழமைக் கட்சியின் தலைவர்கள், முன்னணியினர், அவரவர்களின் வசதிப்படி, வாய்ப்புப்படி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் வாயிலாக அந்தத் தொகுதி நிலவரங்களை அறியவும், தேர்தல் பணிகளை விரைந்து செய்து முடிக்கவும் இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைமை நிலையம் அன்றாடம் தன்னுடைய பணிகளை முடுக்கி விடும், கண்ணும் கருத்துமாக அதிலே இருக்கும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், பெரியார் அவர்களிடம் நாங்கள் கற்ற பாடம், பிறரை மதிப்பது, பிறருக்கு மரியாதை செலுத்துவது என்பதாகும். அந்தப் பாடத்தை அழுத்தந்திருத்தமாக எங்கள் மனதிலே பதிய வைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்களாவார். எனவே பெரியார் வழியில், அண்ணா வழியில் மாற்றுக் கட்சியினரை மதிக்கக் கற்றுக் கொண்டுள்ள நாங்கள், இந்தச் சூழ்நிலையிலும் உங்களை மதிக்கத் தவற மாட்டோம், தொடர்ந்து இந்த மரியாதை கடைப்பிடிக்கப்படும் என்பதையும் நான் உறுதிபட மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

தோழமைக் கட்சிகளும், அதாவது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், ஆங்காங்குள்ள நிலவரங்களை எவ்வழியில் எங்களுக்குத் தெரிவிக்க முடியுமோ, அவ்வழியில் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டணியிலே உள்ளவர்களை ஒரு சில இடங்களில் மதிக்காத சூழ்நிலை இருப்பது இங்கே சுட்டிக் காட்டப்பட்டது.

அது நான் உணராத ஒன்றல்ல. உணர்ந்திருக்கிறேன். உணர்ந்து கழகத்தின் மற்ற செயல்வீரர்கள் மூலமாக அவர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறேன். அவர்களைத் திருத்திக் கொள்ளுமாறும் செய்திருக்கிறேன். அது தொடரும். இது ஏதோ தேர்தலுக்காக மாத்திரம் தான் தொடரும் என்றல்ல. என்றைக்கும், எந்த நிலையிலும் நாமெல்லாம் இங்கே ஒன்றாக அமர்ந்து கருத்துகளைச்சொல்கின்ற நேரத்திலே மாத்திரமல்ல, எல்லா நேரங்களிலும் உங்களை நான் மதித்துப் பழக்கப்பட்டவன். எதிரியானாலும் அவர்களிடத்திலே அன்போடும், நட்புணர்வோடும் நடக்கக் கற்றவன். அந்தப் பாடத்தை எனக்குக் கற்பித்த பெரியவர்கள் பெரியாரும், அறிஞர் அண்ணாவும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நம்முடைய வீரமணி சொன்னதைப் போல, உடல் நிலை சரியில்லாத நிலையில், எல்லா இடங்களுக்கும் நான் நேரில் வந்து பிரச்சாரம் செய்வதற்கு இயலாவிட்டாலும் கூட, எந்த வழியாக பிரச்சாரம் செய்யப்பட வேண்டுமோ, அந்த வழியானப் பிரச்சாரங்களையெல்லாம் நான் இடைவிடாது செய்வேன். என்றென்றும் அந்தப் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் உறுதியாகக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய பிரச்சாரங்களில் நம்முடைய கருத்துகள் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாம் மேடைகளிலே மக்களைச் சந்திக்கின்ற காரணத்தால், பாராளுமன்றத்திலே பெரும்பான்மை பெறுவது யார்? மதச் சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களா அல்லவா என்பதற்கான அந்த வாதத்தை மாத்திரம் எடுத்து வைத்து, அதிலே யாரையும் மட்டம் தட்டாமல், யாருக்கும் மதிப்புக்கும் குறைவு ஏற்படாமல், நம்முடைய கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து காப்பாற்றி வருகின்ற நயத்தகு நாகரீகம் அணுவளவும் சிந்தாமல் சிதறாமல் - நேர்மையாக, நாணயமாக, நலிவுற்ற மக்களுக்காகத் தான் இந்த இயக்கம், இந்தக் கூட்டணி, அவர்களைக் கரையேற்றுவதற்காகத் தான் இந்த அமைப்பு என்பதை தேர்தல் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் மாத்திரமல்ல, என்றென்றும் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காக, இந்திய நாட்டு மக்களுக்காக நம்முடைய உழைப்பும், நம்முடைய செயலும் இருந்திட வேண்டுமென்ற உறுதியோடு பாடுபட வேண்டும்.

இந்தக் கூட்டம் கூட, வெறும் தேர்தல் பணிகளை எப்படி ஆற்றுவது என்பதற்காக கூட்டப்பட்ட கூட்டம் என்று யாரும் கருதிக் கொள்ளாமல், எதிர் காலத்தில் தமிழகத்திலும், இந்தியாவிலும் நாம் ஆற்ற வேண்டிய பெரும் பணி - அதற்கு அச்சாரப் பணியாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்ற அந்த உணர்வோடு நீங்கள் எல்லாம் இந்த அணியிலே ஒத்துழைக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறு சிறு குறைபாடுகள், சிறு சிறு மனக்கஷ்டங்கள் வரும், ஆனால் அப்படி வருவதை நம்முடைய உறுதியால், கொண்டுள்ள கொள்கைப் பற்றால் போக்கிக் கொண்டு, இந்தியா பலம் கொண்ட நாடாகவும், அதிலே தமிழகம் எல்லா உரிமைகளையும் பெற்ற நாடாகவும் விளங்குவதற்கு உங்களுடைய அருமையான கருத்துகளையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

அவற்றை யெல்லாம் மனதிலே பதிய வைத்துக் கொண்டு, நானும் நீங்கள் எடுத்துச் சொன்ன அந்த வழியிலே - ஏதோ இந்தக் கூட்டணியின் தலைவர் என்ற அந்த இறு மாப்போடு அல்ல - உங்களால் பணிக்கப்பட்டிருக்கிறேன், உங்களால் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன், உங்களால் கட்டளையிடப்பட்டிருக்கிறேன், உங்களால் உத்தரவிடப்பட்டிருக்கிறேன் என்ற அந்த ஒரு மரியாதை போதும் என்ற அளவில் நீங்கள் இன்று காலையிலிருந்து இதுவரையில், இவ்வளவு நேரம் காட்டியுள்ள அருமையான நயத்தகு நாகரிகத்திற்கும், அரிய உரைகளுக்கும் இந்த இயக்கம் அதிலும் குறிப்பாக இந்த இயக்கம் சார்ந்துள்ள இந்தக் கூட்டணி வெற்றி பெறுவதற்குரிய கருத்துகளையெல்லாம் செயல்படுத்த எங்களால் இயன்ற அனைத்தும் செய்வோம் என்ற உறுதியை உங்களுக்கு அளித்து, இந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு இன்றைக்கு நாம் கொடியேற்றுவோம், அந்தக் கொடி உயரப் பறக்கட்டும், பறக்கின்ற அந்தக் கொடி நிழலில் தமிழ் நாட்டு மக்களை மாத்திரமல்ல, இந்திய நாட்டு மக்களை மதச்சார்பற்ற ஓரணியில் திரட்டுவோம் என்ற அந்த உறுதியை தெரிவித்து, இந்த அளவில் நான் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன் - தற்காலிகமாக இன்றைக்கு!

ஏன் இப்படிச்சொல்கிறேன் என்றால், என் உடல் நிலை இதற்கு மேல் இடம் தரவில்லை, உடலை விடக் குரல் என்னுடன் ஒத்துழைக்கவில்லை. அது ஒத்துழைப்பதற்கு சரி செய்து கொண்டு மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பேன் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

English summary
DMK leader M Karunanidhi held discussion with allinace leaders for upcoming lok sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X