For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு: அரசின் ''ஓட்டை உடைசல்'' விளக்க அறிக்கை- கருணாநிதி சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

செம்பரம்பாக்கம் ஏரி முறையாக முன்கூட்டியே படிப்படியாகத் திறக்கப்படாததாலும், அதைத் திறப்பது பற்றி உரிய நேரத்தில் திடமான முடிவு எடுக்காததாலும் தான் சென்னை நகரில் பேரழிவு ஏற்பட்டு, மாநகரத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது என்றும் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் அதிமுக ஆட்சியினர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்று தி.மு. கழகத்தின் சார்பிலே தமிழக ஆளுநரிடம் நேரில் கேட்டிருக்கிறோம்.

பலிகடா தலைமை செயலர்?

பலிகடா தலைமை செயலர்?

சென்னையில் அழிவுநாசம் ஏற்பட்டு; அனைத்துக் கட்சிகளின் சார்பிலும், வல்லுநர்கள் சார்பிலும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு, மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் காலம் கடந்து, 12 நாட்களுக்குப் பிறகு, தமிழக அரசின் சார்பில் அதுவும் தலைமைச் செயலாளர் பூசி மெழுகி, புண்ணுக்குப் புனுகு தடவும் பாணியில் "மேக்அப்" விளக்கம் அளித்திருக்கிறார். ஆணித்தரமான அடிப்படைகளுடன் விளக்கம் ஓரளவுக்கேனும் திருப்திகரமாக இருந்திருக்குமேயானால், அது குறித்த அறிக்கை எப்போதும் போல முதலமைச்சர் ஜெயலலிதா பெயரால் வந்திருக்கும். முதலமைச்சர் பதில் கூறாமல், தலைமைச் செயலாளரை விட்டு அறிக்கை கொடுத்திருப்பதில் இருந்தே விளக்கத்தில் உண்மை இல்லை - ஓட்டை உடைசல்கள் நிறைந்தது என்பதால் தான் முதலமைச்சர் பதில் அறிக்கை கொடுக்க முன் வராமல், தலைமைச் செயலாளரைப் பலிகடாவாக்கி இருக்கிறார்கள்.

விளக்கத்தை நேரடியா தரலாமே

விளக்கத்தை நேரடியா தரலாமே

முதல் அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ ஏராளமான குற்றச்சாட்டுகள் எதிர்க் கட்சிகள் சார்பில் சாட்டியிருக்கும்போது, பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் கொடுத்திருந்தால், அவர்கள் மக்கள் மத்தியில் நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி தெளிவாக்கியிருக்க முடியும். ஆனால் ஒருசில பத்திரிகைகளைக் கையில் வைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே முதல் அமைச்சரும், தலைமைச் செயலாளரும் மிரளுவது ஏன்?

மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் ஏற்படும்? உங்கள் மீது கிஞ்சிற்றும் தவறு இல்லை என்றால் பத்திரிகையாளர்களை நேரடியாக அழைத்து தைரியமாக விளக்கம் அளிக்க வேண்டியது தானே?

உதவாக்கரை அறிக்கை

உதவாக்கரை அறிக்கை

அது மாத்திரமல்ல; செம்பரம்பாக்கம் ஏரியை டிசம்பர் 1ஆம் தேதி திறந்து இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீரை வெளியேற்றியது பற்றி, குற்றச்சாட்டு வந்து இத்தனை நாட்கள் பதிலளிக்காமல் இருந்தது ஏன்? பொதுப்பணித் துறை செயலாளரையும், அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சித்து, அவர்கள் கூனிக் குறுகாமல் உறுதியாக நிமிர்ந்து நின்ற காரணத்தால் வேறு வழியின்றி எல்லோரையும் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் நடந்த நிகழ்வுகளை மண் மூடி மறைத்து தற்போது உதவாக்கரை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதா?

நீதிவிசாரணை நடத்துங்க

நீதிவிசாரணை நடத்துங்க

அனைத்தும் முறைப்படி தான் நடந்தது என்றால், நீதி விசாரணை அமைத்து விட்டுப் போக வேண்டியது தானே? அதற்கு முன் வரத் தயங்குவது ஏன்? அனைத்துக் கட்சித் தலைவர்களையும், அரசே அழைத்துக் கூட்டம் நடத்தி நடந்தவற்றைத் தெளிவாக்கி இருக்க வேண்டியது தானே?

அறிவுரை தேவை இல்லை..

அறிவுரை தேவை இல்லை..

தலைமைச் செயலாளரின் விளக்கத்தில், "No specific instructions or orders are required nor were they sought from the Principal Secretary, Public Works Department or the Chief Secretary regarding surplus releases from the Chembarambakkam Tank in the period leading up to December 1. 2015" - அதாவது செம்பரம்பாக்கம் ஏரியிலே உள்ள உபரி நீரை வெளியேற்றுவது பற்றி 1-12-2015 வரை, தலைமைச் செயலாளரிட மிருந்தோ, பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளரிட மிருந்தோ எந்த அறிவுரையும் கோரப்படவும் இல்லை; அது தேவையுமில்லை என்று கூறியிருக்கிறார்.

நடைமுறை வேறாக உள்ளதே

நடைமுறை வேறாக உள்ளதே

ஆனால் இதுவரை தமிழகத்திலே உள்ள சிறியது முதல் பெரியது வரை எந்த ஏரியாக அல்லது நீர் நிலையாக இருந்தாலும், அதனைத் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதாகத் தானே செய்திகள் வெளியிடுவது அரசின் வழக்கமாக இருந்து வருகிறது! குறிப்பாக கடந்த 30ஆம் தேதிய நாளேடுகளில் கூட "பெரியாறு, அமராவதி அணைகள் இன்று திறப்பு - ஜெயலலிதா உத்தரவு" என்று தான் உள்ளது. இன்றைய நாளேட்டில் கூட "வெலிங்டன் நீர்த் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட ஜெயலலிதா உத்தரவு" என்று தான் செய்தி வந்துள்ளது.

இந்த அணைகளையெல்லாம் திறக்க உத்தரவிடும் முதலமைச்சர் ஜெயலலிதா; செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும் போதிய அளவுக்கு உரிய நேரத்தில் திறக்க உத்தரவிடாதது ஏன்?

அரிச்சந்திரனாக தலைமை செயலர்

அரிச்சந்திரனாக தலைமை செயலர்

இப்போது திடீரென்று தலைமைச் செயலாளர், "அரிச்சந்திரனாக" மாறி, ஏரியைத் திறக்க துணைப் பொறியாளருக்குத் தான் அதிகாரம் உண்டு என்று கதையையே புரட்டிப் போடுகிறாரே எப்படி?

கோர்ட்டில் சொன்னது இது

கோர்ட்டில் சொன்னது இது

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பது பற்றி தலைமைச் செயலாளரிடமிருந்தோ, பொதுப்பணித் துறையின் முதன்மை செயலாளரிடமிருந்தோ எந்த அறிவுரையும் கோரப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் தனது அறிக்கையிலே கூறி யிருக்கிறார். ஆனால் சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்ற பொது நல வழக்கு ஒன்றில், "Chief Secretary ignored PWD letter to release water" என்ற தலைப்பில் வந்த செய்தியில், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை விடுவிப்பது பற்றி பொதுப்பணித் துறை 29-11-2015 அன்று தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியதாகவும், ஆனால் தலைமைச் செயலாளர் மூன்று நாட்கள் அந்தக் கடிதத்தின்மீது முடிவெடுக்காமல் தூங்கி வழிந்து விட்டு டிசம்பர் 1ஆம் தேதி இரவு தான் ஒப்புதல் கொடுத்ததாகவும் கூறப்பட்டதே; உயர் நீதி மன்ற வழக்கில் கூறப்பட்டது உண்மையா அல்லது தற்போது தலைமைச் செயலாளர் விடுத்துள்ள "சமாளிப்பு" அறிக்கையிலே சாற்றியிருப்பது உண்மையா?

முதல்வர் பெயரை தவிர்த்திருப்பது ஏன்

முதல்வர் பெயரை தவிர்த்திருப்பது ஏன்

செம்பரம்பாக்கம் ஏரியினால் வெள்ளம் ஏற்பட்டுப் பல நூறு பேர் பலியானார்கள்; பல இலட்சம் ரூபாய்ச் சொத்துக்கள் நாசம்; என்றதும், அதனைத் திறப்பது பற்றி முதன்மைச் செயலாளரிடமோ, தலைமைச் செயலாளரிடமோ அறிவுரை பெறத் தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிடத் துணிந்திருக்கிறார் என்றால், அதிலே முதல் அமைச்சரின் பெயரை தலைமைச் செயலாளர் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறாரா? அப்படியானால் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பது பற்றி முதல்வரின் அறிவுரை தான் கோரப்பட்டது, தம்முடைய அறிவுரை கோரப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாரா?

ஊடகங்கள் விளாசல்

ஊடகங்கள் விளாசல்

10-12-2015 அன்று "இந்து" ஆங்கில நாளிதழில்,"சென்னை மாநகரை மூழ்கடித்த ஒரு தவறான முடிவு" என்ற தலைப்பில் "செம்பரம்பாக்கம் ஏரியில் 75 சதவிகிதத்திற்கும் குறைவான நீர் மட்டுமே முன் கூட்டியே தேக்கி வைக்கப்பட்டிருந்தால், டிசம்பர் 1ஆம் தேதியன்று பெய்த பெருமழையில் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை ஒரே அடி யாக திறந்து விட்டிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.

பொதுப்பணித் துறையில் பணி புரிந்த முன்னாள் அதிகாரிகள் இது சரியான முறையல்ல என்று தெரிவித்திருக் கிறார்கள்.. மழை பெய்வதற்கு ஒரு நாள் முன்னரே, நீரைத் திறந்து விட்டிருக்க வேண்டும். அவ்வாறு விட்டிருந்தால் சென்னை வெள்ளக்காடாகி யிருக்காது" என்று "இந்து" எழுதியிருந்ததே; அந்தச் செய்தி தவறு என்றால், 10ஆம் தேதி "இந்து" கூறியதற்கு உடனடியாகத் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்காதது ஏன்?

டைம்ஸ் ஆப் இந்தியா

டைம்ஸ் ஆப் இந்தியா

"இந்து" நாளேடு எழுதுவதற்கு முன்பே, "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு 9-12-2015 அன்றும், அதற்கு முன்பும் "மதகுகளைத் திறப்பது பற்றி முடிவு செய்வதில் ஏற்பட்ட தாமதமே, வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது" என்ற தலைப்பில், "சென்னையை நாசம் செய்த வெள்ளம் இயற்கையான பேரழிவு அல்ல; மாறாக, சென்னையில் புறநகர்ப் பகுதியில் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதை ஒழுங்குபடுத்த மாநில அதிகார வர்க்கம் தவறியதே காரணம்" என்று குறிப்பாகச் சுட்டிக்காட்டி எழுதியதே; இன்னும் சொல்லப் போனால் தலைமைச் செயலாளரின் பெயரையே குறிப்பிட்டு, அவர் யாருடைய அனுமதிக் காகவோ காத்துக் கொண்டிருந்தார் என்றெல்லாம் "டைம்ஸ் ஆப் இந்தியா" எழுதி யிருந்ததே, அதற்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்போதே விளக்கம் அளிக்காதது ஏன்?

அதே "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு "Man Made Calamity - Humanitarian Crisis caused by floods in Chennai could have largely been prevented" என்று சாட்டிய குற்றச்சாட்டிற்கு தலைமைச் செயலாளர் பதிலளிக்க ஏன் இவ்வளவு தாமதம்? இதற்குப் பதிலைக் கேட்டுப் பெற "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவை பயனளிக்காமல் விரயமாகி விட்டது என்றே அதே ஏடு எழுதி யிருந்ததே!

உண்மை இருக்கிறதே

உண்மை இருக்கிறதே

தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில், "நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக நவம்பர் மாத மத்தியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிக அளவு நீர் வரத்து இருந்தது. 17-11-2015 அன்று ஏரியில் நீர் மட்டம் 22.3 அடியாக இருந்த நிலையில் வெள்ள நீரினை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகளின்படி எதிர்வரும் பருவ மழையினால் பெறக் கூடிய நீர்வரத்தினை கருத்திலே கொண்டு 18 ஆயிரம் கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 30-11-2015 அன்று 22.05 அடியாக இருந்த போது நீர் வெளியேற்றம் 800 கன அடியாக இருந்தது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலே தான் உண்மை இருக்கிறது.

ஒப்புதல் வாக்குமூலமே

ஒப்புதல் வாக்குமூலமே

நவம்பர் 17ஆம் தேதி ஏரியிலே 22.3 அடியாக நீர் மட்டம் இருந்த போது, 18 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியவர்கள்., நவம்பர் 30ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 22.05 இருந்த போது 800 கன அடி நீரை மட்டுமே அனுப்பியது தவறா இல்லையா? அதைத் தான் அனைத்து எதிர்க் கட்சிகளும் கேட்கின்றன. அதைத் தான் 11-12-2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேயும், நவம்பர் 17ஆம் தேதி 18 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. ஆனால் நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை மிகக் குறைந்த நீரே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விட்டது தான் சென்னை மாநகரிலே வெள்ளப் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம். இந்தத் தவறை தலைமைச் செயலாளரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே வெள்ளத்திற்குக் காரணம் தமிழக அரசின் நிர்வாகம் தான் என்பதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை என்பது அ.தி.மு.க. அரசின் ஒப்புதல் வாக்குமூலம் தான் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

800 அடி திறந்தது தப்புதானே

800 அடி திறந்தது தப்புதானே

மேலும் தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில், 1-12-2015 அன்று காலை 10 மணிக்கு 10,000 கன அடி நீரும், 12 மணிக்கு 12,000 கன அடி நீரும், 2 மணி முதல் 20,960 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டதாகவும், மாலை 5 மணி அளவில் அது 25,000 கன அடியாகவும், மாலை 6 மணிக்கு 29,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த அளவுக்கு ஒரே நாளில் நீர் வெளியேற்றப்பட்டதாகக் கூறும் தலைமைச் செயலாளர், அதற்கு முதல் நாள், அதிக நீரை வெளியேற்றாமல், வெறும் 800 கன அடி நீரை மட்டுமே வெளியேற்றியது மிகப் பெரிய, கொடுமையான தவறு தானே?

சென்னை அழிய காரணம்...

சென்னை அழிய காரணம்...

1ஆம் தேதிக்கு முன்பே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து போதிய நீரை வெளி யேற்றியிருந்தால், 1ஆம் தேதி ஒரே நாளில் 29,000 கன அடி என்ற அளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா? அந்த அளவுக்கு நீரை மிக அதிகமாக வெளியேற்றிய காரணத்தினால் தானே சென்னை மாநகரிலே பேரழிவு ஏற்படவும், பிணங்கள் மிதக்கவும் நேர்ந்தது. அதற்கு இந்த அ.தி.மு.க. அரசு தானே பொறுப்பேற்க வேண்டும்?

எதுங்க சரியான புள்ளி விவரம்?

எதுங்க சரியான புள்ளி விவரம்?

தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு 10 ஆயிரம் கன அடி நீரையும், 12 மணிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரையும் திறந்து விட்டதாக சொல்லி விட்டு, அவரே அதே அறிக்கையின் அடுத்த பக்கத்தில் சென்னை மாவட்டக் கலெக்டர் 11.20 மணிக்கு 7,500 கன அடி நீரை வெளியேற்றப்பட்டதாக அறிக்கை கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். இதிலே எந்தப் புள்ளி விவரம் சரியானது?

பழிபோடுவதா?

பழிபோடுவதா?

பொறியாளர்கள் யாரும் தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர், முதலமைச்சர் ஆகிய யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை, அவ்வாறு கூறுவது தவறு என்று தலைமைச் செயலாளர் அறிக்கையிலே கூறுகிறார். அதனை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், கீழ் மட்டத்திலே உள்ள அதிகாரிகள் அவர்களாகக் கேட்காவிட்டாலும், மேலே உள்ள அதிகாரிகள் தாங்களாக மழையின் நிலைமையை உணர்ந்து ஆணை பிறப்பித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? எனவே பழியை கீழ் மட்ட அதிகாரிகள் மீது போட்டு, தலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.

எச்சரிக்கையே கொடுக்கலையா?

எச்சரிக்கையே கொடுக்கலையா?

தலைமைச் செயலாளரின் அறிக்கையில், 30-11-2015 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 50 செண்டி மீட்டர் மழை பெய்யும் என்று தெரிவிக்க வில்லை என்றும், ஆங்காங்கு மிக மிகுந்த கனத்த மழை பெய்யும் என்று தான் கூறப் பட்டிருந்தது என்று சமாளித்திருக்கிறார். ஆனால் "இந்து" நாளிதழில், "Bloggers predict heavy rain on Monday (30-11-2015) and Tuesday in Coastal Regions of the State" என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 27ஆம் தேதி சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறும்போது, "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுhர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமனாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிகக் கன மழை பெய்யும்" என்று கூறி, அது நாளேடுகளில் வெளி வந்திருக்கிறதா இல்லையா?

இஸ்ரோ விஞ்ஞானி பேட்டி

இஸ்ரோ விஞ்ஞானி பேட்டி

இஸ்ரோ வி.எஸ்.எஸ்.சி.யின் இயக்குனர் சிவன் அவர்கள் அளித்த பேட்டியில், "சென்னையில் கன மழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து, தமிழக அரசுக்குத் தகவல் கூறினோம். ஆனால் அரசு முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை" என்றே தெரிவித்திருக்கிறார்.

அக்.16-ல் எச்சரிக்கை விடப்பட்டதே

அக்.16-ல் எச்சரிக்கை விடப்பட்டதே

இந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 16ஆம் தேதியன்றே, இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு இயல்பை விட தமிழகத்தில் 112 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்ததா இல்லையா?

ஜெ.வே சொன்னாரே

ஜெ.வே சொன்னாரே

இன்னும் சொல்லப் போனால், 1-12-2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30-11-2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுhர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1-12-2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக அரசின் மாபெரும் நிர்வாக தவறு

அதிமுக அரசின் மாபெரும் நிர்வாக தவறு

தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் இதையெல்லாம் மூடி மறைத்து விட்டுத் திசை திருப்பும் அறிக்கை விடுவது சரிதானா? நீதி விசாரணை நடத்த முன் வராமல், தலைமைச் செயலாளரைக் கொண்டு அ.தி.மு.க. அரசு உண்மைக்கு மாறாக இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடச் செய்திருப்ப திலிருந்தே, செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைத் திறந்து சென்னை மாநகரையும், இங்கே வாழும் மாநகரத்து மக்களையும், சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியதில் அ.தி.மு.க. அரசின் நிர்வாகம் மாபெரும் தவறு செய்து விட்டது என்பதையும், அதை மூடி மறைக்கும் முயற்சி தான் தலைமைச் செயலாளரின் இந்த அறிக்கை என்பதையும் தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi slammed the TN govt's response on the Chemabrambakkam water release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X