For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேராசிரியப் பெருந்தகையே, கழகம் வாழ, நீ வாழ்க வாழ்க.. கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் 93வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அன்பழகன் பிறந்த நாளையொட்டி வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டார்.

அன்பழகன் இன்று தனது 93வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அன்பழகனை வாழ்த்தினர்.

மேலும் திமுக முன்னணியினர், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலரும் நேரில் வந்து வாழ்த்தினர்.

அன்பழகன் பிறந்த நாளையொட்டி கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

ஒவ்வொருவரும் "மணிவிழா" என்ற பெயரால், தங்களின் அகவை 60 முடிகின்ற போது விழா கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால் எனக்கும், கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியருக்கும் நட்பு முகிழ்த்ததற்கே ஒரு மணி விழா கொண்டாட வேண்டும்.

1942ஆம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்து கொள்ள பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்தபோது, அந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். இறுதியாக அண்ணாவைப் பேசுவதற்காக அழைத்த நேரத்தில், அண்ணா அவர்கள் எழுந்து, நான் பேசுவதற்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர் ஒருவரை நான் அழைத்து வந்திருக்கிறேன், அவர் உங்கள் முன்னால் பேசுவார் என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார். அந்த இளைஞர் தான் இன்று 93வது பிறந்தநாள் காணும் பேராசிரியர் அன்பழகனார்!

Karunanidhi pays rich tribute to Anbalagan on his 93rd birth day

முதன் முதலாக அங்கே தான் நான் பேராசிரியர் அவர்களைச் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். அப்போது எங்களிடையே முகிழ்த்த நட்பு தான், எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றுக்கிடையே மணிவிழா கண்டு அதற்கு மேலும் இரண்டாண்டுகள் கடந்து, அவருக்கு நானும், எனக்கு அவரும், இருவரும் சேர்ந்து நம்முடைய கழகத்திற்கு துணையாகவும் இருந்து நடத்தி வருகிறோம்.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக உழைத்த எத்தனையோ ஆலமரங்கள் விழுந்து விட்டன. அவர்களில் ஒருசிலரையாவது இந்த நேரத்தில் என் நினைவில் கொண்டு வந்தால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நாவலர், என்.வி. நடராசன், முரசொலி மாறன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கே.ஏ. மதியழகன், நாஞ்சிலார், சி.பி. சிற்றரசு, ஏ. கோவிந்த சாமி, மதுரை முத்து, அன்பில், மன்னை, எஸ்.எஸ். தென்னரசு, வே. தங்கபாண்டியன், ப.உ. சண்முகம், சி.வி.எம். அண்ணாமலை, கே.டி.எஸ். மணி, கோவை ராஜமாணிக்கம், பி.ஏ. சாமிநாதன், திருவண்ணாமலை தர்மலிங்கம், முருகையன், வேலூர் தேவராஜ், மா.பா. சாரதி, இரா. வெற்றிகொண்டான், ப.உ. சண்முகம், கடலூர் இளவழுதி, இராம.அரங்கண்ணல், சாதிக் பாட்சா, செ. கந்தப்பன், முல்லை வடிவேலு, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், காரைக்குடி ராம. சுப்பையா, காஞ்சி மணிமொழியார், புலவர் கோவிந்தன், தாழை. மு. கருணாநிதி, து.ப. அழகமுத்து, எம்.எஸ். மணி, பராங்குசம், நீலநாராயணன், டி.கே. சீனிவாசன், எஸ். இராகவானந்தம், சி.டி.தண்டபாணி, புதுக்கோட்டை பெரியண்ணன், வீரபாண்டி எஸ். ஆறுமுகம் என்று எழுதிக் கொண்டே போகலாம். விழுந்த விட்ட இந்த ஆலமரங்கள் போக, எஞ்சியிருக்கும் இரண்டு ஆலமரங்களாக, எங்களைச் சுற்றி வேர் விட்டுள்ள விழுதுகளின் துணையோடு இந்த இயக்கத்தைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

Karunanidhi pays rich tribute to Anbalagan on his 93rd birth day

நான் பதினெட்டு வயது இளைஞனாக மாணவ நேசன் என்ற பெயரில் கையெழுத்து ஏடு ஒன்றினை நடத்திக் கொண்டிருந்த போது தமிழ் மாணவர் மன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி நடத்த முற்பட்டேன். அந்த மன்றத்தின் ஆண்டு விழா 1942இல் திருவாரூரில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. அவர்கள் எல்லாம் வருவார்கள் என்று ஆவலோடு எதிர் பார்த்து, அவர்களை வரவேற்க திருவாரூர் புகைவண்டி நிலையத்திலே காத்திருந்தபோது, அவர்களில் பலர் வரவில்லை என்று தெரிந்து கண்களிலே நீர் பெருக கலங்கி நான் நின்று கொண்டிருந்தபோது தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த - இன்றைய பேராசிரியர், அன்றைய மாணவர் அன்பழகனும், மதியழகனும் அங்கு வந்து எனக்கு ஆறுதல் வழங்கினார்.

எனக்குத் துணையாக 1942இல் அங்கே பேராசிரியர் வந்தபோது என்னுடைய வயது 18. அப்போது என் துணைக்கு வந்த பேராசிரியர்,இன்று 93வது வயதில் அடியெடுத்து வைக்கின்ற நிலையிலும் எனக்குத் துணையாக இருக்கின்றார் என்பதை எண்ணும்போது இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - கழகத்திலே உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர் தான் நம்முடைய இனமானப் பேராசிரியர்.

மணவழகர் ஈன்றெடுத்த செல்வன் - மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை எனக் கூறி மாத்தமிழ் காக்கும் அரிமா - பெரியாரின் பெரும் தொண்டர் - அண்ணாவின் அன்புத் தம்பி - எனது உயிரனைய உடன்பிறப்பு தான் இனமானப் பேராசிரியர்.

இந்த வயதிலும் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிதானமான போக்கு, நேர்மையான சிந்தனை, தன் மனதில் பட்ட கருத்தை மறைக்காது எடுத்துரைக்கும் திறந்த நெஞ்சம், ஆபத்து தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ என்றால் அனலாகக் கொதிக்கின்ற உள்ளம், எதிர் தரப்பினரை சுழற்றி அடிக்கும் வாள் வீச்செனவாயிலிருந்து பிறக்கும் "சுளீர்! சுளீர்!" என்ற வார்த்தைகள் பேராசிரியருக்கே சொந்தமானவை! உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாதவர் பேராசிரியர். சாதி மதப் பேதங்களில் சிக்கித் தவித்த இந்தச் சமுதாயத்தை தலை நிமிரச் செய்ய வேண்டுமென்பதற்காக அவரது பேச்சும், எழுத்தும் பயன்பட்டது என்றால் அது மிகையல்ல.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிஞர் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றே பேராசிரியர் அன்பழகன். அவருடைய கருத்தழகும், கனிவான சொல்லழுகும், தமிழ்க் கட்டழுகும் மேடையில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம் பல முறை. பேராசிரியரைப் பற்றி ஒருமுறை நான் கூறும்போது, "நான் மக்களுக்காக எழுதுகிறேன், பேராசிரியர் அன்பழகன் அவர்களோ என் போன்றோருக்காக எழுதுகிறார் என்று சொன்னேன். அத்தகைய அறிவும் ஆற்றலும் அனுபவமும் உள்ளவர் பேராசிரியர்.

பேராசிரியருக்கு 93வது பிறந்த நாள் தமிழுக்கு முடிசூட்டுகின்ற நாள் - தன்மான உணர்வுக்கு மகுடம் புனைகின்ற நாள் - திராவிட மக்கள் மட்டுமல்ல - உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும், தமிழர்களின் வெற்றிக்காக, உரிமைக்காகக் குரல் கொடுப்போம் என்று சூளுரைக்கின்ற நாள் இந்த நாள் என்றுகூறி, மேலும் பல்லாண்டுகள் பேராசிரியப் பெருந்தகையே, கழகம் வாழ, நீ வாழ்க வாழ்க என்று மனமார வாழ்த்துகின்றேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK leader Karunanidhi has greeeted party general secretary K. Anbalagan on his 93rd birth day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X