For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத்தமும் சதையும் அரசியல்.. சம காலத்தில் யாருக்கும் இல்லாத தலைமைத்துவம்.. அவர்தான் கலைஞர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கலைஞர்-சம காலத்தில் யாருக்கும் இல்லாத தலைமைத்துவம்- வீடியோ

    - கிங்

    வாழ்க்கையே போராட்டம் என்று வர்ணிப்பவர்கள் மத்தியில் போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி. ஒரு இயக்கம் அல்லது நிறுவனம் ஒன்றிற்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்துவது என்பதே சவாலான சங்கதியாக இருக்கும்போது ஐம்பது ஆண்டுகளாக ஒரு இயக்கத்தை கட்டிக் காத்து எதிரிகளும் எதிர்கட்சிகளும் திமுகவின் வேர்களின் வெந்நீர் ஊற்றியபோதும் அதன் ஆணிவேராய் மட்டுமின்றி அனைத்துமாய் நின்று கட்டி காத்தவர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல.

    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அடுத்த தலைமை யார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது திமுகவில், நாவலர் நெடுஞ்செழியனின் பெயர் பரவலாக அடிபடுகிறது. கருணாநிதியும் நெடுஞ்செழியன்தான் அடுத்த முதல்வர் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால் இயற்கை வேறு வகையில் முடிவெடுக்கிறது. கட்சியில் இருந்த முன்னணித் தலைவர்களில் எம் ஜி ஆர் உட்பட முன்னணியினர் கருணாநிதி முதல்வராக வரவேண்டும் என்று கூறுகின்றனர். பெரியாரும் கருணாநிதிக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார். ஆனால் இந்த முடிவை நாவலர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். நெடுஞ்செழியனை துணை முதல்வராக இருங்கள் என்று கருணாநிதி கேட்டுக் கொள்கிறார்.

     Karunanidhis Giant size Political life

    நெடுஞ்செழியன் மறுக்கவே அப்படியானால் அவை முன்னவராக அமருங்கள், சட்டசபையில் நீங்கள் அமர்ந்த பிறகு இரண்டாவது இடத்தில் நான் அமருகிறேன் என்று கூறி சமாதானப்படுத்த முயல்கிறார் கருணாநிதி. இருந்தும் நெடுஞ்செழியன் மறுத்துவிட்டு முதல்வர் போட்டியிலிருந்து விலகி விடுகிறார். இப்படியாக முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி சில நாட்களிலேயே கட்சித்தலைவர் பொறுப்பையும் ஏற்கிறார். அன்று முதல் இன்று வரை எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்து சமாளித்து கட்சியின் தலைமைப் பொறுப்பில் 50 ஆண்டுகளை தொட்டுவிட்டார் கலைஞர்.

    அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சமாளித்தார் என்பதற்கு ஒரு எளிய உதாரணத்தை கூறலாம். சென்னைக் கடற்கரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகிறார் பேராசிரியர் அன்பழகன் அப்போது கருணாநிதியைத் தளபதியாக வேண்டுமானால் ஏற்றுக்கொள்வேனே தவிர, தலைவராக ஏற்க மாட்டேன்' என்று சூளுரைக்கிறார். ஆனால் பின்னாளில் இதே பேராசிரியர் அன்பழகன் கலைஞரை நான் ஏன் தலைவராக ஏற்றுக்கொண்டேன் தெரியுமா?' என்று விளக்கமளிக்கும் அளவில் கருணாநிதியின் தலைமைப் பண்பு இருந்தது.

     Karunanidhis Giant size Political life

    இப்போது நடைபெறும் அரசியல் நிகழ்வுகளிளெல்லாம் கருணாநிதி ஆக்டிவாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று நாம் பேசுகிறோம். அண்ணாவுக்கு பிறகும் இது போன்றதொரு நிலையே நீடித்து வந்தது. அண்ணா இருந்த இடத்தில் கருணாநிதியா என்றெல்லாம் திமுகவில் இருந்தவர்களே பேசி வந்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே திமுக தலைமைப் பொறுப்புக்கு கருணாநிதி மட்டும் வராமல் இருந்திருந்தால் திமுக என்னும் இயக்கமே இல்லாமல் போயிருக்கும் என்று கூறும் அளவுக்கு கருணாநிதி தக்கதொரு தலைமையை திமுக இயக்கத்திற்கு தந்து கொண்டிருந்தார்.

    1957 ம் ஆண்டு முதன் முதலாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் எந்த தேர்தலிலும் இதுவரை தோற்றது இல்லை என்பது கருணாநிதியின் பல்வேறு சாதனைகளுள் ஒன்று. தேர்தல் அரசியலில் திமுக பங்கேற்ற அந்த ஆண்டுதான் கருணாநிதியும் தேர்தல் அரசியலில் பங்கேற்ற ஆண்டு. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் தர்மலிங்கத்தை 8296 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தவர் இன்றுவரை சட்டமன்ற நிகழ்வுகளை மட்டுமல்லாது தமிழக அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் தீர்மானிப்பவராகவே இருந்துவருகிறார்.

    1962 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் திமுகவுக்கு சோதனையான தேர்தல். காமராஜரின் வியூகத்தில் 1957 ல் பெற்ற அனைத்து தொகுதிகளையும் இழந்தது திமுக. கருணாநிதி வெற்றிபெற்ற தொகுதியை தவிர. இம்முறை தஞ்சாவூர் தொகுதியில் களம்கண்டு காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்தம் நாடாரை 1928 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

     Karunanidhis Giant size Political life

    1967-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாக இருந்தது. அதுவரை ராஜாஜியை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் அதே ஆண்டு ராஜாஜியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரசை வீட்டுக்கு அனுப்பியது திமுக. அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் தமிழகத்தில் எழவே இல்லை. அந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினாயகத்தை 20484 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்.

    1969 ம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த தீர்மானிக்கிறார் கருணாநிதி. 1971 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சைதாப்பேட்டையில் போட்டியிட்ட கருணாநிதி, ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் கருணாநிதியின் கணக்கு மிகச் சரியாக பலித்தது. 201 இடங்களில் போட்டியிட்ட திமுக 183 இடங்களை பெற்று ஆட்சியமைத்தது.

    1977 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தமிழக தேர்தலின் போக்கை மாற்றியமைத்த தேர்தல். இந்த தேர்தல்தான் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் போட்டி என்றிருந்த தேர்தலை அதிமுக - திமுக என்று மாற்றியமைத்த தேர்தல். இந்த தேர்தலில் எம் ஜி ஆர் தலைமையிலான அதிமுக போட்டியிட்டு வென்று ஆட்சியமைத்தது. திமுக வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்ற தேர்தல் அது. இத்தேர்தலில் கருணாநிதி அண்ணா நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    எம் ஜி ஆர் ஆட்சி கலைக்கப்பட்டதன் விளைவாக 1980 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட திமுக ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு தோல்வியை கண்டது இருப்பினும் நூலிழையில் 699 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் ஹன்டேயை வெற்றிபெற்றார் கருணாநிதி. மீண்டும் 1984 ம் ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் அதிமுகவே வெல்கிறது, ஆட்சியையும் பிடிக்கிறது. இந்த தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. காரணம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பின்னர் மேலவை உறுப்பினராக இருந்ததால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அதன் பின்னர் எம் ஜி ஆர் மறைவிற்குப் பிறகு 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெறுகிறது. கருணாநிதி துறைமுகம் தொகுதியில் 41632 வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறார். ஆனால் இந்த முறை விடுதலைப் புலிகள் தமிழகத்தில் உள்ளனர் என்ற காரணம் காட்டி திமுக ஆட்சியை கலைக்கிறது மத்திய அரசு.

    1991-ம் ஆண்டு திமுக வரலாற்றிலேயே மிகவும் சோதனையான காலம். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது, இந்த படுகொலைக்கு காரணமான விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளிக்கிறது என்ற குற்றசாற்றுகள் காரணமாக திமுக படு தோல்வியை சந்தித்தது. வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் திமுக வெல்கிறது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டுமே வென்றனர். 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் கருணாநிதியின் கூட்டணியின் வியூகத்திற்கு கிடைத்த வெற்றி. இம்முறை சேப்பாக்கம் தொகுதியில் நெல்லைக் கண்ணனை 35784 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டமன்றம் சென்றார்.

    2001 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி மீது பெரும்பாலான குற்றசாற்றுகளோ குறைகளோ இல்லாதபோதும் திமுக பாஜகவோடு கொண்ட கூட்டணியை தமிழக மக்கள் விரும்பாத காரணத்தால் அதிமுக கூட்டணி 197 இடங்களில் வென்றது. சேப்பாக்கம் தொகுதியில் 4834 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி

    2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி வெற்றி பெற்றதோடு திமுகவும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்டது இம்முறை திமுக ஆட்சியமைக்க பெரும் காரணமாக அமைந்தது.
    2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 31 இடங்களை மட்டுமே பெற்றது. இந்த தேர்தலில் தனது சொந்த ஊரான திருவாரூரில் நின்ற கருணாநிதி 50249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை தோற்கடித்தார்.

    2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருவாரூரில் களம் கண்ட கருணாநிதி 13 வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வென்றிருக்கிறார். இப்படியாக போராட்டத்தையே தனது வாழ்வாக கொண்ட கருணாநிதி அரசியலில் நுழைந்த அன்று முதல் இன்று வரை தன்னை சுற்றி அரசியலை சுழல வைத்ததும், அரசியலை சுற்றியே தனது வாழ்வை அமைத்துக் கொண்டு ரத்தமும் சதையும் அரசியலாகவே இருந்து வந்ததும் சமகாலத்தில் எந்த தலைவருக்கும் இல்லாத பெருமை என்றால் அது மிகையல்ல.

    English summary
    No leaver lived a life like Kalaignar Karunanidhi. He was not only ruled his party DMK, but the hearts of crores of Tamils all over the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X