சண்டமாருதம் செய்துவிட்டு சட்டசபையை விட்டு போய் கடைசி நாள் வந்த ஜெ....
அடுத்து, சட்டப்பேரவையில் தி.மு.கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு 89 பேரைக் கொண்ட மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், எதிரிக் கட்சியாக நடந்து கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தம்பி மு.க.ஸ்டாலின் கூறியதோடு, சில கோரிக்கைகளையும் வைத்தார்.
அதில் முதல் கோரிக்கை, என்னுடைய உடல் நிலை கருதி, நான் அமருவதற்கேற்ற இட வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதாகும். என்ன செய்தார்கள் தெரியுமா? ஸ்டாலினும் துரைமுருகனும் அமர்ந்திருக்கும் இடத்திற்குப் பின் வரிசையில், அதாவது இரண்டாவது வரிசையில், சக்கர நாற்காலி போக முடியாத இடத்தில், இட வசதி செய்து அல்ல, இடம் ஒதுக்கி அறிவித்தார்கள்.
இரண்டாவது கோரிக்கையாக ஆளுநர் உரையில் தி.மு. கழகத்தின் சார்பாக 89 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பதாலும், அதிக எதிர்க்கட்சிகள் இல்லாததாலும், தற்போது கேள்வி நேரத்திற்காக அன்றாடம் ஒதுக்கப்படும் ஒன்றரை மணி நேரம் செலவாகாத காரணத்தினாலும், ஒவ்வொரு நாளும் மூன்று தி.மு.கழக உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்புத் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப் பட்டது.

இதையும் ஏற்றுக் கொள்வதற்கான பெருந்தன்மை ஆளுங்கட்சிக்கோ, பேரவைத் தலைவருக்கோ வரவில்லை. நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் பேசுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதுவும் அ.தி.மு.க. வின் இறுக்கமான ஒரு வழிப் பாதை ஜனநாயகம்தான்.
அடுத்த கோரிக்கைதான், முதலமைச்சர் ஆளுநர் உரைக்குப் பதில் பேசுவதற்கு முன், அதே நாளில் எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும் என்பது. பல ஆண்டுக் காலமாகப் பேரவையில் இருந்த இந்த மரபு தொடரப்பட வேண்டுமென்ற ஆர்வத்தில் கேட்டுக் கொண்டோம். ஆனால், அந்த ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டது.
ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதில ளிக்க வேண்டியவர் முதல் அமைச்சர். உடல் நிலை காரணமாக முதலமைச்சர் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டால், முதலமைச்சருக்குப் பதிலாக அவருக்கு அடுத்துள்ள அமைச்சர் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு பதிலளிக்கப் போகிறவர், ஆளுநர் உரை மீதான விவாதம் அவையில் நடக்கின்றபோது, அதுவும் குறிப்பாக எதிர்வரிசையிலே உள்ள உறுப்பினர்கள் பேசும் போது அவையிலே இருந்து, என்ன பேசுகிறார்கள் என்பதை தாங்களே குறிப்பெடுத்து, அதற்குப் பதில் தயாரித்துக் கொண்டு வந்து பேச வேண்டும்.
முடிந்தால் எதிர் வரிசையிலே உள்ளவர்கள் பேசும் போது அவர்களின் கருத்துக்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும். ஆனால் இப்போது என்ன நிலைமை? ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற போது, முதல் அமைச்சர் ஜெயலலிதா அவையிலே எத்தனை மணி நேரம் இருந்தார்? ஒரே ஒரு நாள் மட்டும், அதுவும் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ மட்டும் அவையிலே இருந்து, அப்போதும் கச்சத் தீவுப் பிரச்சினை மீது பேசுவதற்கு தி.மு. கழகத்திற்கு, குறிப் பாக எனக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது என்று ஆவேசமாகச் சண்டமாருதம் செய்து விட்டு, அவையை விட்டுப் போனவர்தான், பிறகு விவாதத்திற்குப் பதில் சொல்கின்ற இறுதி நாள் அன்றுதான் சட்டப்பேர வைக்கே வந்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர், தம்பி ஸ்டாலினோ, மற்ற எதிர்க்கட்சி வரிசையிலே உள்ளவர்களோ பேசும் போது, பேரவைக்கே வரவில்லை. இதிலிருந்தே முதல் அமைச்சர் பேரவையை எந்த அளவுக்கு மதிக்கிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்களை எந்த அளவுக்குப் போற்றுகிறார் என்பது தெளிவாகிறது என்பதை விட, எந்த அளவுக்கு கட்டிக் காப்பாற்ற வேண்டிய ஜனநாயகத்தைக் காலடியில் போட்டு மிதிக்கிறார் என்பதுதான் தெளிவாகிறது.
இன்னும் சொல்லப்போனால், சட்டப்பேரவையைப் பொறுத்தவரை பேரவைத் தலைவர்தான் ஆளுங் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா உறுப்பினர்களுக்கும் சேர்த்துத் தலைவர். அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். பேரவைத் தலைவர் யாராக இருந்தாலும், அவருக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் உயரிய மதிப்பு அளித்தாக வேண்டும். ஆனால் தமிழகத்திலே சட்டப்பேரவையிலே என்ன நிலைமை? பேரவைத் தலைவரே ஒரு பூங்கொத்தைத் தூக்கிக் கொண்டு, இடுப்பொடியக் குனிந்து, அந்தப் பூங்கொத்தை முதல் அமைச்சரிடம் கொடுத்து வரவேற்கின்ற ஜனநாயகக் கொடுமையை இங்கே தான் பார்க்க முடியும்.












Click it and Unblock the Notifications