For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி சப்போர்ட்.. கிழவியை தூக்கி மனையில் வைப்பதா என கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஆறு பேரை "சஸ்பென்ட்" செய்து தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்வது தேவையற்ற வேலை என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டனத்தின் மூலம், இவ்விவகாரத்தில் தேமுதிகவுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை" என்பதைப் போல, தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரின் இடை நீக்கத் தீர்மானத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் 12-2-2016 அன்று தீர்ப்பளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தப்பு செய்தார்களே

தப்பு செய்தார்களே

தற்போதுள்ள ஆளுங்கட்சியினர் கடந்த காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்த போது, பேரவையில் நடந்து கொண்டதை விட சட்டப் பேரவையில் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள், மோசமாக நடந்து கொள்ளவில்லை.

ஆட்சி முடியப்போகுது

ஆட்சி முடியப்போகுது

எது எப்படியோ, அவர்கள் மீது சட்டப்பேரவை எடுத்த நடவடிக்கை செல்லாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்த பிறகு, அ.தி.மு.க. ஆட்சியின் கடைசிப் பேரவைக் கூட்டம் இன்னும் நான்கு நாட்களே நடைபெறும் என்ற நிலையில், மக்கள் கொடுத்த வரிப் பணத்தை அரசு வீணாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது அவசியம்தானா?

அறைகள் ஒதுக்கீடு

அறைகள் ஒதுக்கீடு

இன்னும் சொல்லப்போனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், அந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களுடைய அறைகளைத் திறந்து விடாமல் தற்போது பொறுப்பிலே இருக்கும் பேரவைச் செயலாளர் பிடிவாதமாக இருந்ததாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்ய டெல்லி சென்ற அவரிடம் அரசு வக்கீல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அவர்களுடைய அறைகளைத் தராமல் இருப்பது தவறாக ஆகிவிடும், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று கடுமையாக எச்சரித்த பிறகுதான், அவர்களுடைய அறைகளைத் திறந்து விட்டார்களாம்.

ஆரோக்கியமில்லை

ஆரோக்கியமில்லை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்கள் மீது இப்படியெல்லாம் பழி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வது என்பது ஆட்சியினருக்கு நல்ல பெயரைத் தராது; மேலும் ஆட்சியினரின் ஆரோக்கியமற்ற மன நிலையையே வெளிப்படுத்தும்.

வக்கீலுக்கு பணம்தர முடியவில்லை

வக்கீலுக்கு பணம்தர முடியவில்லை

இன்னும் சொல்லப்போனால், பெங்களூரில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான சதீண் கிர்ஜிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடன் சுமை

கடன் சுமை

தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசுக்கு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் எனக் குறிப்பிட்டிருக்கின்ற நிலையில், ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து வீண் வேலையை மேற்கொள்வது என்பது, உச்ச நீதிமன்ற ஆணையைப் புறக்கணிப்பதாகவும், சட்டப்பேரவை நாகரிகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகவும் அமைந்து விடக் கூடும் என்று பொதுமக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் அல்லவா? இவ்வாறு கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வி

கேள்வி

மற்றொரு கேள்வி-பதில் அறிக்கையில், கருணாநிதி கூறியுள்ளதாவது: திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் கிழமை 15-2-2016 அன்று நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டையே தவறாக அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்களே?

தப்பாக அச்சடிப்பு

தப்பாக அச்சடிப்பு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் விழாவல்லவா அது? அதனால்தான் தவறாக அச்சடித்திருக்கிறார்கள். தற்போது நடைபெறுவது திருவள்ளுவர் ஆண்டு 2047 ஆகும். ஆனால் அழைப்பிதழில் 2046 என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

துணை வேந்தர்

துணை வேந்தர்

ஆளுநர், அமைச்சர் போன்றவர்கள் கலந்து கொள்ளும் விழாவிலேயே இந்த அடிப்படைத் தவறு நடைபெற்றுள்ளது. ஆளுங்கட்சி உள்நோக்கத் தோடு அவசர அவசரமாக துணை வேந்தர்களை நியமித்தால் இப்படியெல்லாம்தான் பிழைகள் நடக்கும்! வெட்கக் கேடு! திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலேயே இப்படித் திருகுதாள வேலையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது! இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.

English summary
Karunanidhi extend his support for DMDK in the MLA's suspension issue and oppose TN Gvt decision to file review petition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X