For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல 2015 வழிவகுக்கும்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழருக்கு எதிரான நிகழ்வுகள் பதிவான 2014 முடிவடைந்து 2015 பிறக்க உள்ளதாகவும், தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இந்தப் புத்தாண்டு வழிவகுக்கும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக நிகழ்வுகளை வருங்காலத் தலைமுறைகளுக்குக் காலமுறைப்படி நினைவூட்டிடும் வரலாற்றிற்கு அச்சாணியாக, இயேசு நாதரின் பிறப்பினை மையமாக வைத்துக் கணக்கிடப்படும் ஆங்கில ஆண்டு நிரலில் 2014 விடைபெற, புத்தாண்டு 2015 பிறக்கிறது!

Karunanidhi wishes for new year

பொய்களையே அணிகலன்களாகப் பூண்டவர்கள் தமிழக அரசியலில் புரிந்துவரும் கேடுகளைப் பறைசாற்றிப் பெங்களூரு தனிநீதிமன்றம் உரிய தண்டனை வழங்கி, "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பதை நிலைநாட்டிய ஆண்டு 2014!

மத்திய அரசில் மாற்றத்தை ஏற்படுத்திய அந்த 2014 மறைந்திட, புதுமை விளையுமா? எனக் காத்துள்ள மக்களை நாடி வருகிறது 2015! சங்கப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடிய "நீடுவாழ் கென்றியான் நெடுங்கடை குறுகி" என்னும் புறநானூற்றுப் பாடலில் "அட்ட குழிசி அழற்பயந் தாங்கு" - என்னும் வரி, "இட்ட அரிசி பானையில் சோறாக வெந்திருக்குமென எதிர்பார்த்து நிற்க, அது எரி நெருப்பாய்க் கனன்றது கண்டு வேதனை கொண்ட நெஞ்சம்போல" மாற்றத்தை எண்ணி வாக்களித்த மக்களுக்கு மூன்றாண்டுகளாகியும் ஏமாற்றம் குறையவில்லை!

வாக்குறுதிகளை காப்பாற்றும் வாய்மை இல்லை! மின்சாரமில்லை! அதற்கும் இரண்டுமுறை உயர்த்தப்பட்ட கட்டணமோ அநியாயம்! பேருந்துக் கட்டண உயர்வோ பேரதிர்ச்சி! பால் விலை உயர்வோ மகா கொடுமை!

உப்பு முதல் உணவுப் பொருள் ஒவ்வொன்றின் விலையும் விஷம் போல் உயர்வு! புதிய தொழிற்சாலைகள் இல்லை; ஏற்கனவே இருந்த தொழில்களைக் காக்கும் திராணியும் இல்லை! தொழிலாளர் வாழ்வோ தொடர் போராட்டம்! போராடும்போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குச் சிறைக்கூடமே பரிசு! "எடுத்தேன் - கவிழ்த்தேன்" என்ற எதேச்சாதிகார நடவடிக்கைகளால் எங்கும், எதிலும் குழப்பம்! எனினும், எதனையும் தெளிவுபடுத்துவதில் நாட்டமில்லை! ஏடுகளும் எதிர்க்கட்சிகளும் சுட்டிக் காட்டினாலோ வழக்குகள் ஈட்டி முனைகளாய்ப் பாய்கின்றன!

மத்திய அரசோ வளர்ச்சிப் பணிகளில் நாட்டம் செலுத்துவதைவிட பள்ளிகளில் சமஸ்கிருத வாரம்! அரசுத் துறைகளுக்கான இணைய தளங்களில் இந்தி மொழி! மதச் சார்பற்ற கொள்கையை மண்ணில் மிதித்து ‘இந்துத்வா'வின் நடமாட்டம்! என்பனபோல் ஆரவார ஆதிக்க அரசியலில் ஆர்வம் காட்டுவதுடன்; தமிழகம் மேலும்மேலும் பாதிக்கப்படும் வகையில் மேகதாது என்னுமிடத்தில் காவிரியில் இரண்டு புதிய அணைகளைக் கட்டிட முனைந்திடும் கர்நாடக அரசைத் தடுத்திடாமை! உச்சநீதி மன்றம் மறுத்துவிட்ட நிலையிலும் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசு புதிய அணை கட்டுதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கித் தமிழகத்திற்குப் பாதகம் செய்தல்!

தமிழரைக் கொன்றுகுவித்த போர்க்குற்றவாளி இராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற வாழ்த்துரைத்துத் தமிழினத்திற்குத் துரோகமிழைக்கும் திசையில் நடைபோடல்! என 2014ஆம் ஆண்டு தமிழகத்திற்கு - தமிழக நலனுக்கு - தமிழர் முன்னேற்றத்திற்கு எதிராகவே தாங்க முடியாக் கேடுகளைப் பதிவுசெய்து அரங்கேற்றிவிட்டு நகர்கிறது.

தமிழ்ச் சமுதாயம் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் நன்று இது; தீது இது என ஆராயாது அவசரப்பட்டதால் இன்று தமிழகம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில், மக்கள் நலப்பணிகளில், உற்பத்தியில், தொழில் வளர்ச்சியில் என அனைத்து வகையிலும் இந்திய அளவில் பின்தங்கிவிட்ட அவலத்தையும் ஜனநாயக விரோத - மக்கள் விரோதச் சேட்டைகள் நாள்தோறும் பெருகி வருவதையும் எல்லோரும் எண்ணிப் பார்த்திட வேண்டும். இந்த அவலம் களையப்படவும், இப்போதைய பின்னடைவுகளிலிருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப்படவும், களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து முனைப்போடு உழைத்திட வேண்டும். அதற்கு இந்தப் புத்தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Karunanidhi extent his wishes to the Tamilnadu people for 2015 new year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X