For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கேரள அரசு ஏற்க வேண்டும் - பெ.மணியரசன் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்யாமல் கேரள அரசு ஏற்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நீண்ட நெடிய காலதாமதமானாலும் முல்லைப் பெரியாறு அணை உரிமையில் புதன்கிழமை அன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியத் தீர்ப்பு தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக அமைந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய வல்லுநர் குழுக்களின் அறிக்கையைப் பெற்று அணை வலுவாக இருக்கிறது என்றும், முதல் கட்டமாக தமிழக அரசு 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், சிற்றணையில் சிறுசிறு செப்பனிடும் பணிகளை முடித்துக் கொண்டு முழு நீர்த்தேக்க அளவான 152 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பு கேரளத்தைக் கட்டுப்படுத்தாது என்று கேரள சட்டமன்றம் புதிய மசோதா ஒன்றை இயற்றியது. அதற்கு ஆளுநர் ஒப்புதலும் கொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கேரளத்தின் இந்த அடாவடித் தனத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

மேற்கண்ட அரசமைப்பு சட்டத்திற்கு முரணான கேரளச் சட்டம் செல்லாது என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டித் தர வேண்டும் என்றும் தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மறுவிசாரணைக்கு அனுப்பியது. மறுபடியும் நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுநர் குழு அமைத்து அணையின் வலுத்தன்மை பற்றி அறிக்கை தருமாறு அந்த அரசியல் சாசன அமர்வு கோரியது.

வழங்கப்பட்ட நீதியை செயல்படுத்த இத்தனை தடங்கல்களும், உச்ச நீதிமன்றத்தின் தாமதங்களும் இருந்திருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டு தமிழக அரசு இப்பொழுது வந்துள்ள தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும். 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 136 அடிக்கு மேல் ஓரங்குலம் தண்ணீர் உயர்ந்தால் கூட அது வெளியே வழிந்து செல்லும் அளவிற்கு 16 வடிகால் மதகுகளும் உயரத் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளன. திறந்து கிடக்கும் வடிகால் மதகுகளை உடனடியாக இறக்கி மூடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

அடுத்து அணைப் பாதுகாப்புக்கு கேரளக் காவல்துறை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கேரள பாதுகாப்புத்துறையை விலக்கிக் கொள்ளச் செய்து, தமிழகக் காவல்துறை பொறுப்பில் அணைப் பாதுகாப்பை எடுத்துக் கொள்ள தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

கேரள அரசு சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டு இப்பொழுது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும். மாறாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளத்தில் முழு அடைப்பு நடத்துவது, தமிழக-கேரள இணக்கச் சூழ்நிலையைக் கெடுத்துவிடும். 2011ல் நடந்ததைப் போல கேரளத்தில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படும் நிலை உருவானால் அது தமிழ்நாட்டில் எதிர்வினையை உருவாக்கி இருமாநிலங்களுக்கிடையே பதட்டச் சூழ்நிலையை உருவாக்கும் என்பதை இந்திய அரசு இந்தத் தடவையாவது உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Desa Pothuvudamai party general secretary P. Maniarasan has asked the Kerala government to go by the supreme court's judgement in Mullai Periyar issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X