கிங் விஜயகாந்தும், அன்புமணியின் மன்னராட்சியும்!
-ஆர்.மணி
இன்று காலையில் தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் அனைத்து முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
ஒரு மேடையில் மைக் முன்னால் நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் சம தூரத்தில் விரித்துக் கொண்டு சீரியஸான முகத்தோற்றத்துடன் காட்சி தந்து கொண்டிருக்கிறார் பாமக வின் இந்த இளம் முதலமைச்சர் வேட்பாளர். முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளும் அன்புமணி ராமதாஸ் கீழ்கண்ட உறுதி மொழிகளை எடுத்துக் கொள்ளுகிறார்.

'அன்புமணியாகிய நான் பூரண மதுவிலக்கை அமல் படுத்துவேன் என்று உத்திரவாதம் அளிக்கிறேன். முதல் கையெத்தே பூரண மதுவிலக்குதான். கள்ளச் சாராயத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகள். மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப் படும்.'
‘அன்புமணியாகிய நான் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவேன். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டு வருவேன். புகார்களை தெரிவிக்க இலவச, கட்டணமில்லாத தொலைபேசி சேவை அளிக்கப்படும்.
‘அன்புமணியாகிய நான் கட்டாய, தரமான, சிபிஎஸ்ஸி க்கு இணையான இலவச கல்வியை வழங்குவேன். பாரம்பரிய மருத்துவ முறைகளை வளர்க்க முன்னுரிமை தருவேன்.'
‘அன்புமணியாகிய நான் ... வேளாண் புரட்சியை உருவாக்குவேன் ... வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கையை உருவாக்குவேன்.'
‘அன்புமணியாகிய நான் பொருளாதார வளர்ச்சியை பெருக்கவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும், ஒற்றைச் சாளர முறை அனுமதியை தொழிற் முதலீட்டாளர்களுக்கு வழங்குவேன். குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை வாய்ப்பை உறுதிப் படுத்துவேன் ....' என்று நீளுகிறது பாட்டாளி மக்கள் கட்சியின் பட்டத்து இளவரசரின் முழு பக்க விளம்பர வாக்குறுதிகள்.
இவை கேட்பதற்கு காதுக்கு இனிமையாகவும், படிப்பதற்கு குளுமையாகவும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறைவேற்றுவது எவ்வளவு கடினமான காரியம், இதற்கான நிதியாரங்கள் எப்படி, எங்கிருந்து வரப் போகிறது என்பது பற்றியெல்லாம் எந்த தகவலும் இல்லை. இதனை எங்களது மற்ற ஆய்வறிக்கைகளில் சொல்லி விட்டோம், மாதிரி பட்ஜெட்டில் சொல்லி விட்டோம் என்று பாமக சமாளித்துக் கொள்ளலாம். எப்படி சமாளிக்கப் போகிறோம், எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதியாரங்களை என்பதை விளம்பரத்தில் எப்படி சொல்ல முடியும்? என்றும் பாமக நியாயமான சமாளிப்புகளில் ஈடுபடலாம்தான்.
ஆனால் இன்றைய விளம்பரத்தின் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம் இதுதான். இந்த விளம்பரத்தில் அன்புமணி தெரிகிறார், மாம்பழம் சின்னம் தெரிகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் இல்லை.
இதுதான் முக்கியமானது ... தனி மனிதராக அன்புமணி முன்னிறுத்தப் படுவதுதான் கவனிக்கத் தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி என்ற கட்சியின் அடையாளத்தை புறந்தள்ளி, கோடிக்கணக்கான ரூபாய் செலவிலான இந்த விளம்பரம் ஒரு தனி நபரை முன்னிறுத்துகிறது. இந்த இரண்டு பக்க விளம்பரத்தில் வலது பக்க மூலையில் சிறியளவில் அவர்களது கட்சியின் சின்னம் இருக்கிறது. அது மட்டும்தான். இடது பக்க கீழோரத்தில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணியுடன் சேர்ந்து என்று போடப்பட்டிருக்கிறது.
2013 ம் ஆண்டில் நரேந்திர தாமோதர தாஸ் மோடியிடம் துவங்கிய இந்த வியாதி இன்று பிராந்திய கட்சிகளிடமும் பரவத் துவங்கி விட்டது. பாஜக வைத் தவிர்த்து, பாஜக வை புறந்தள்ளி தன்னை ஒரு பிராண்டாக முன்னிறுத்திக் கொண்டார் மோடி.
இதனையே திமுக பொருளாளரும், ‘நமக்கு நாமே பயணத்தின்' கதாநாயகனுமான மு.க. ஸ்டாலினும் பின்பற்றினார். திமுக அடையாளங்கள் அவரது பயணத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டன. கலர், கலராக நவீன ஆடைகளுடன் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களுடன் அவர் வலம் வந்தார். ஆனால் திமுக சார்பில் மூன்று நாட்கள் கொடுக்கப் பட்ட முழு பக்க விளம்பரத்தில் கட்சியின் உதயசூரியன் சின்னம் இருந்தது. தனி நபர்களின் பெயர்கள் இல்லை.
அன்புமணி அனைவரையும் மிஞ்சிவிட்டார். தமிழக அரசியிலைப் பீடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த வியாதியின் மூல வேர் திமுக தலைவர் மு.கருணாநிதியிடமிருந்து துவங்குகிறது என்றே சொல்ல வேண்டும். ஆம். 1974 ல் அப்போதய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தன்னுடைய 50 வது பிறந்த நாளை சென்னையின் இருதயம் போன்ற பகுதியான அண்ணா சாலையில் ரதத்தில் அமர்ந்து வந்து கொண்டாடினார். அண்ணா சாலையில் நட்ட நடுத் தெருவில், தான் முதலமைச்சராக இருக்கும் போதே தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டார். அதன் பிறகு எம்ஜிஆர் வந்த பிறகு மன்னர் என்ற பெயர் இல்லையே தவிர நடைமுறையில் அவரும் அப்படியேதான் நடந்து கொண்டார். பிறகு வந்த ஜெயலலிதா வைப் பற்றி சொல்லவே வேண்டாம். எங்கும், எப்போதும் மஹாராணி யாகவே வழிபடப் படுகிறார். ஆகவே இது ‘வாழையடி வாழையென வந்த தமிழ்ப் பெருங்குலத்தின்' சாபக்கேடு என்றும் சொல்லலாம்தான்.
ஆனால் ஒரு சிறிய வேறுபாடு உண்டு.... இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் அவர்கள் ஓரளவுக்கு வளர்ந்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சில ஆண்டுகள் கழிந்த பின்னர் வந்த போக்கு இது. இப்போதும் கூட அதிகாரபூர்வமான விளம்பரங்களில் இரண்டு திராவிடக் கட்சிகளிலும் கட்சியின் பெயர், சின்னம் இவற்றோடு சேர்த்து கருணாநிதியின் பெயரும், ஜெயலலிதா வின் பெயரும் இருக்கும்.
ஆனால் பாமக வின் போக்கு வேறாக இருக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் நாங்களே உண்மையான மாற்று என்கிறார்கள் பெரியவர் டாக்டர் ராமதாஸூம், அவரது வாரிசும். இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ் நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக கெடுத்து, குட்டிச் சுவராக்கி விட்டார்கள், தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாங்கள் வந்தால் தேனும், பாலும் ஆறாய் ஓடும் என்று எல்லா விதமான வாக்குறுதிகளையும் அப்பாவும், மகனும் சகட்டுமேனிக்கு அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தனி மனிதனால் இன்றைய இந்திய அரசியிலில், அதுவும் ஒரு மாநில அரசில் என்ன பெரியதாக சாதித்துக் கிழித்து விட முடியும் என்ற அடிப்படை புரிதலுடன்தான் இவர்கள் பேசுகிறார்களா அல்லது தெரிந்தே மக்களை ஏமாற்றுகிறார்களை என்பது அவர்களது குடும்ப ரகசியமாகவே இருந்து விட்டு போகட்டும்.
திருவாளர் பொதுஜனம் கவலைப் பட வேண்டியது இதுதான். இரண்டு திராவிடக் கட்சிகளும் சாதித்ததும் அதிகம்... அவர்களால் வந்த கேடுகளும் அதிகம். வந்த கேட்டில் மிக முக்கியமானது தனி மனித துதி பாடல். இன்று ஆட்சிக் கட்டிலின் அருகில் வர அல்லாடிக் கொண்டிருக்கும் இந்த கட்டத்திலேயே இத்தகைய தனி மனித துதி பாடலில் இருக்கும் பாமக ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது சுவையான கற்பனை மட்டும்தானா. அல்லது அதையும் தாண்டியதா....?
பாமக வின் ஆரம்பக் கட்டங்களிலும், பாமக தோன்றுவதற்கு முன்பு வன்னியர் சங்கமாக இருந்த போதும் டாக்டர் ராமதாஸ் செய்த பல காரியங்கள் போற்றத் தக்கவைதான். தன்னுடைய அரசியல் வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் சமூக நல்லிணக்கத்திற்காக டாக்டர் ராமதாஸ் ஆற்றிய பணிகள், குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியவைதான். சந்தேகமேயில்லை. குறிப்பாக, 1980 களின் இறுதியில் தலித் மக்களுக்காக டாக்டர் ராமதாஸ் களத்தில் இறங்கி பணியாற்றியிருக்கிறார். ஒருமுறை தலித் ஒருவரின் சடலத்தை ஆதிக்க ஜாதியினரின் எதிர்ப்பை மீறி குறிப்பிட்ட பாதையில் கொண்டு சென்றதில் முன்னிலையில் நின்ற அற்புத மனிதர். இதற்காகவே அவருக்கு தமிழ் குடி தாங்கி போன்ற பட்டங்களும் கூட கொடுக்கப் பட்டதுண்டு. இவ்வாறு துவக்கத்தில், ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்வின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக சில காலம் தென் பட்ட ராமதாஸ் பின்னர் முழு அளவிலான ஜாதீய அரசியலை கையிலெடுத்தார். அதன் பலன்களையும் நுகர்ந்தார்.
ஆனால் இதனையெல்லாம் மீறி இன்று நடப்பது முழு அளவிலான குடும்ப அரசியல். இது எங்கே போய் நின்று கொண்டிருக்கிறதென்றால், ஒரு தனி மனிதரை மட்டுமே முன்னிலை படுத்தி மூர்த்தண்யமான, முழு அளவுப் பிரச்சாரத்தை நடத்துவதில் போய் நின்றிருக்கிறது.
‘என் குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அப்படி வந்தால் என்னை முச்சந்தயில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என்றார் ராமதாஸ். இந்த கருத்தையும் நியாயம் என்று ஏற்றுக் கொள்ள முடியாதுதான். காரணம் டாக்டர் ராமதாஸூக்கு மகனாக, மகளாக பிறந்து விட்ட காரணத்தாலேயே ஒருவருக்கு அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது. மறுக்கப் பட முடியாதுதான். அப்படி நடந்தால் அதுவும் ஜனநாயகத்திற்கு விரோதமானதே. ஆனால் எனது குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்தால் என்னை முச்சந்தியால் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்று சொன்ன ஒரு தலைவர் இன்று தனது மகனை மட்டுமே, கட்சியை அல்ல, முன்னித்துகிறார் என்றால், இதனை எவ்வாறு அவரோ அல்லது பாமக வோ நியாயப் படுத்தப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
ஒரு பக்கம் தான் கிங் மேக்கராக அல்ல, கிங் காக இருக்கவே விரும்புகிறேன் என்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நன்றாக கவனியுங்கள். கிங், மன்னர் என்ற பதம் இவர்கள் வாயிலிருந்து எப்படி வருகிறது? இதற்கு பதில் சொல்லும் தமிழுருவி மணியன் விஜயகாந்த் கிங் ஆவதற்கு ஜெயலலிதா குயினாக வே இருந்து விட்டுப் போகட்டும் என்கிறார். இங்கும் மன்னராட்சி தான் உதாரணம். திமுக வைப் பற்றியோ, அஇஅதிமுக வைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். திமுக வின் மன்னரும், அவர்களது பட்டத்து இளவரசரும், அஇஅதிமுக வின் பட்டத்து மஹாராணியும் தமிழ் நாட்டுக்கு வாராது வந்த மாமணிகள் மட்டுமல்ல, வரலாற்றுப் பொக்கிஷங்கள்தான்.
இடதுசாரிகளை, தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளிலும் இந்த தனி மனித துதிபாடல் வரம்பு மீறிப் போய்க் கொண்டிருப்பதன் விளைவுதான் தங்களை சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்களும், அரசியல் வாரிசுகளும் மன்னர்களாகவும், பட்டத்து இளவர்சர்களாகவும், பட்டத்து ராணிகளாகவும் பாவித்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பட்டாபிஷேகம் நடத்திக் கொள்ளுவது.
இரண்டு திராவிடக் கட்சிகளையும் தாண்டி இது தற்போது மற்ற பிராந்திய கட்சிகளையும் பீடிக்க ஆரம்பித்திருக்கிறது.
2004 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு பேட்டியில் சொன்னார். ‘காங்கிரஸை மட்டுமே ஏன் குடும்ப அரசியல் நடத்தும் கட்சி என்று சொல்லுகிறீர்கள். இந்திய அரசியலே இன்று குடும்ப அரசியலால்தான் நிரம்பி வழிகிறது' என்றார். ஜம்மு காஷ்மீரில் ஃபாரூக் அப்துல்லா, மறைந்து முஃப்தி முஹமது, பஞ்சாபில் பாதல்கள், உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் குடும்பம், பிஹாரில் லாலுவின் குடும்பம், தெலுங்கானாவில் சந்திரசேகராவ், கர்நாடகாவில் தேவேகவுடாக்கள், தமிழகத்தில் கருணாநிதியின் குடும்பம் என்ற இந்த பட்டியல் சோனியா காந்தி சொன்னது போல நீளமானது.
இது எதுவரையில் வளர்ந்திருக்கிறது என்றால், கட்சியின் அதிகாரபூர்வ முதலமைச்சர் வேட்பாளர் சம்மந்தமான அரசியல் விளம்பரத்தை அந்தக் கட்சியின் பெயரைக் கூட குறிப்பிடாமல் பிரசுரிப்பதில் போய் முடிந்திருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது என்று கூட கேட்கலாம். பெயரைப் போட்டாலும் போடா விட்டாலும் தனி மனித ஆளுமைகளில் மட்டுமே நம்பிக்கை கொண்டு இயங்கும் கட்சிகளுக்கு பெயர் ஒரு பொருட்டா என்ன? ஆனால் அதுவும் இல்லையென்றால் எந்தளவுக்கு நம்முடைய அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயக பண்புகள் பற்றிய கவலையும், கூச்ச நாச்சமும் இல்லாமல் போய் விட்டது என்று தானே பொருள் கொள்ள முடியும் ....?
புதிது புதிதாய் தமிழக அரசியலில் குறு நில மன்னர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். கு வரும் நாட்களில் நாம் முழு அளவிலான மன்னராட்சிக் காலத்துக்குப ஏதாவது ஒரு கட்டத்தில் வந்து சேரலாம். அந்த மன்னராட்சியின் வடிவம் வெளித்தோற்றத்தில் நாடாளுமன்ற ஜனநாயகமாகத் தான் இருக்கும். அங்கு நாம் போய்ச் சேருவதற்கான பயணம் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வோட்டிங் மெஷினில் பொத்தானை அழுத்துவதிலும் இருக்கும்!












Click it and Unblock the Notifications