For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சூப்பர் சி.எம்' கிரண் பேடியின் அத்துமீறல்களும், வேடிக்கை பார்க்கும் மோடி அரசும்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரான கிரண் பேடியின் நடவடிக்கைகள் அரசு நிர்வாகத்தைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு புதுச்சேரியில் இருக்கும் போதே கிரண் பேடி அரசு நிர்வாகத்தை கிட்டத் தட்ட தன்னுடைய கையில் மொத்தமாக எடுத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாகவே தெரிந்து கொண்டிருக்கிறது. 2016 ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற காலத்திலிருந்தே கிரண் பேடி தன்னுடை திருவிளையாடல்களைத் துவங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பதவியேற்பதற்கு முன்பே ஆளுநர் மாளிகையில் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், வி நாராயணசாமி முதலமைச்சராக பொறுப்பேற்க வில்லை.

துணை நிலை ஆளுநரான முதல் நாளே நேரடியாக களத்தில் போய் நின்று கொண்டு அதிகாரிகளை நாட்டாமை செய்யத் துவங்கி விட்டார் கிரண் பேடி. தெருக்களில் கிடக்கும் குப்பைகளை தானே வாரத்தில் ஒரு நாள் களத்தில் இறங்கி அள்ளுவேன் என்று சூளுரைத்தார். நேரடியாகவே அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற காரியங்களில் இறங்கினார். அதிகாரிகளுக்கு உத்திரவுகள் பிறப்பிப் பதற்காக நான்கு வாட்ஸ் ஆப் குரூப்புகளைத் தொடங்கினார்.

Kiran Bedi turns big headache of Pudhucheri

இந்தக் கட்டத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு உணவு வழங்கல் துறையில் பதிவாளராக இருந்த ஒருவர் கிரண் பேடியின் இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆபாச படம் ஒன்றினை பேடிக்கு அனுப்பிய சம்பவம் நடந்தேறியது. "நான் அந்த ஆபாச படத்தை நீக்க முயற்சித்த போது அது பதிவேற்றம் ஆகி விட்டது," என்கிறார் இந்த அதிகாரி. ஆனால் உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து விட்ட கிரண் பேடி அவர் மீது போலீஸ் நடவடிக்கைக்கும் உத்தரவிட்டுவிட்டார். காவல் நிலையத்தில் 15 மணி நேரம் உட்கார வைக்கப்பட்ட இந்த அதிகாரி பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அதிகாரியின் சஸ்பெண்ட் உத்திரவை தேர்தல் ஆணையும் தற்போது நிறுத்தி வைத்திருப்பதுதான். காரணம் தேர்தல் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதற்கான அதிகாரியாக ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர் இவர். ஆகவே அவரை சஸ்பெண்ட் செய்வதற்கு முன்பு தங்களது அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறது ஆணையம். ஏற்கனவே நாரயணசாமி இடைத் தேர்தலில் நின்ற போது பேடி மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக சாடியது தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றோர் காரியத்தையும் பேடி செய்து கொண்டிருக்கிறார். அதுதான் ஆளுநர் மாளிகையில் நேரடியாகவே ஒவ்வோர் அரசு துறையின் தலைமை அலுவலகர்களையும் அழைத்துப் பேசுவது. உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களில் இவ்வாறு பேடி உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். அதே சமயம் சம்மந்தப் பட்ட துறையின் செயலாளருக்கு இது தெரிவிக்கப்படுவதில்லை. துறையின் செயலாளரும், அமைச்சரும் செய்ய வேண்டிய காரியங்களை பேடி செய்து கொண்டிருப்பதால் ஏகப்பட்ட குழப்பங்கள் தற்போது புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன. இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை,'' என்கிறார் புதுச்சேரி அரசு ஊழியர் சங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர்.

பேடி துவக்கிய வாட்ஸ் ஆப் குரூப்பில் எந்த அதிகாரியும் அரசு சம்மந்தமான எந்த நிர்வாகத் தகவல்களையும் பதிவேற்றம் செய்யக் கூடாதென்றும், அதில் இணையக் கூடாதென்றும் முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்தார். உடனேயே இந்த அரசாணையை ரத்து செய்து பேடி புது உத்தரவு பிறப்பித்தார். நாராயணசாமியோ அரசு நிர்வாகம் சம்மந்தமான தகவல்களை பொது வெளியில் வைப்பது ரகசிய காப்பு சட்டங்கள் மற்றும் ஐடி சட்டங்களின் படி தண்டனைக்குரிய குற்றம் என்கிறார். மேலும் அரசு உத்தரவுகளை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிறப்பிப்பதற்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது. முறையான அரசாணைகள் மற்றும் அறிவிப்புகள் இல்லாமல் மேற்கொள்ளப் படும் இதன் தொடர்ச்சியான திட்டங்கள் நீதி மன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்படும் என்கிறார் முதலமைச்சார்.

"ஒரு துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் சம்மந்தப்பட்ட அமைச்சர்தான் பொறுப்பு. ஆனால் என்னுடைய துறையில் என்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன என்பது எனக்கே பேடியின் வாட்ஸ் ஆப் தகவல்களை பார்த்த பிறகுதான் தெரிகிறது. தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் அரசு நிர்வாகப் பணிகளுக்காக தேவைப்படும் நிதியை விடுவிப்பது போன்ற காரியங்களை வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலம் நிறைவேற்ற முடியாது. இதற்கெல்லாம் சட்ட அங்கீகாரங்களும் கிடையாது,'' என்று கூறுகிறார் புதுச்சேரி மூத்த அமைச்சர் ஒருவர். தற்போது அரசு அதிகாரிகள் இரு தலைக்கொள்ளி எறும்புகளாக தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

விரைவில் நாரயணசாமி அரசு சமர்பிக்க இருக்கும் பட்ஜெட்டில் எவை எவை இடம் பெற வேண்டும் என்று தானே இறுதி முடிவு எடுக்கப் போவதாக கூறுகிறார் பேடி. மக்களுக்கு எது நல்லது என்று முடிவு செய்யும் அதிகாரம் தன்னிடம்தான் உள்ளதாக பேடி கூறுகிறார். பேடியின் இந்த நடவடிக்கைகளை கண்டித்தும், இதிலிருந்து மாநில நிருவாகத்தை காப்பாற்ற வலியுறுத்தியும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிற்கு காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்எல்ஏ க்கள் கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் யாருக்கு அதிக அதிகாரம் என்பதை மத்திய அரசு விதிகள் தெளிவாகவே கூறுகின்றன. "தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் ஒரு விஷயத்தில் மோதல் ஏற்பட்டால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் இந்த இழிவான காரியத்தில் பேடி தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதில் பட்ஜெட்டில் எவை எவை இடம் பெற வேண்டும் என்பதைக் கூட தானே முடிவு செய்வேன் என்பதெல்லாம் அராஜகத்தின் உச்ச கட்டம் என்கிறார்," புதுச்சேரியின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர்.

பேடிக்கு 2019 மே மாதம் வரையில் பதவிக்காலம் இருக்கிறது. ஆனால்தான் மே 29, 2018 ம் தேதியே பதவி விலகப் போவதாக கூறுகிறார். காரணம் அன்றைய தினம் தன்னுடைய தாயின் நினைவு தினம் என்றும், இரண்டாண்டுகளில் தான் நினைத்ததை சாதித்து விட முடியும் என்றும் அவர் கூறுகிறார். இந்த தகவலை ஒரு கடிதம் வாயிலாக ஜனவரி 7 ம் தேதி வெளியிட்ட பேடி அதனை புதுச்சேரியின் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அன்றைய தினமே அனுப்பி வைத்தும்விட்டார். தான் சட்டத்துக்கு உட்பட்டே செயற்படுவதாகும், யாரையும் தண்டிப்பது தன்னுடைய நோக்கம் இல்லையென்றும், மாறாக செயற்படுவது, உத்வேகத்தை உருவாக்குவது மற்றும் ஆதரவு அளிப்பது ஆகியவையே தன்னுடைய கடமை என்றும் பேடி தன்னுடைய கடிதத்தில் கூறியிருக்கிறார். இனிமேல் மாதந்தோறும் ஒரு முறை மக்களுக்கு இவ்வாறு கடிதம் எழுதுவதாகவும் கூறுகிறார்.

டில்லி தேர்தலில் பேடியை பாஜக முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தது. ஆம் ஆத்மி கட்சியிடம் படு தோல்வியை அடைந்தது. தேர்தலில் செல்லாக் காசாகி, மக்கள் மன்றத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கிரண் பேடி தற்போது புதுச்சேரியில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசுக்கு இம்சை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் முன்னணியில் இருந்தபோது தான் எந்த அரசு பதவியையும் இனிமேல் வாழ்க்கையில் ஏற்கப் போவதில்லை என்றுதான் சொல்லி வந்தார் கிரண் பேடி. ஆனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவிக்கு வந்தார்.

கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சிகளும், பாஜக தவிர்த்து இன்று பேடியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் துவங்கி விட்டன. அஇஅதிமுக கிரண் பேடியை நீக்க வேண்டும் என்பதுடன், நாரயணசாமி அமைச்சரவையையும் ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வியாக்கியானம் பேசுகிறது.

1947 லிருந்து 1994 ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் எஸ் ஆர் பொம்மை தீர்ப்பு வரும் வரையில் இது போன்றுதான் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணற்ற மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி டிஸ்மிஸ் செய்தும், ஆளுநர்களை வைத்து அடாவடிகள் செய்தும் அரசியல் செய்து வந்தது. தற்போது இந்த அடாவடி அரசியலை, தனக்கு அரசு பதவியே வேண்டாம் என்று வீர வசனம் பேசிய 'உத்தம மாதரசி' கிரண் பேடியை வைத்து சின்னஞ் சிறு மாநிலமான புதுச்சேரியில் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது.

பேய் அரசு செய்தால் பிணந் திண்ணும் சாத்திரங்கள்!

English summary
Kiran Bedi, the lieutenant governor of Pudhucherry is disturbing the elected govt of the state through inappropriate orders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X