சென்னை வக்கீல் – டிரைவர் மோதல்… டிரைவரை அடித்த வக்கீல் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்தில் பஸ் ஊழியர்களுக்கும், வக்கீல்களுக்குமிடையே மோதல் எழுந்தது. இரு தரப்பினரும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்டிரைவரை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மகாகவி பாரதி நகரில்இருந்து நேற்று மாலை 5 மணியளவில் ‘2 ஏ' வழிதட எண் கொண்ட மாநகர பேருந்து சென்னை அண்ணாசதுக்கம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து சத்தியமூர்த்தி நகர், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி வழியாக 5.30 மணியளவில் வால்டாக்ஸ் ரோட்டை வந்தடைந்தது.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பேருந்துக்கு பின்னால் ஹாரன் அடித்தபடி வேகமாக வந்தார். ஆனால் டிரைவர் ஆனந்தபாபு அவருக்கு வழி விடவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பேருந்துக்கு முன்னால் சென்று திடீரென்று தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு டிரைவர் ஆனந்தபாபுவும் அந்த நபரை தாக்கியதாக தெரிகிறது.

நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் வால்டாக்ஸ் ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்த தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, டிரைவரிடமும், மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் சமாதானம் பேசினர். அதைத்தொடர்ந்து டிரைவர் ஆனந்தபாபு பேருந்தை அண்ணாசதுக்கம் நோக்கி ஓட்டி சென்றார். பேருந்து மாலை 5.50 மணியளவில் அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.

அப்போது வால்டாக்ஸ் ரோட்டில் டிரைவரிடம் கைகலப்பில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளில் வந்த நபர் 15-க்கும் மேற்பட்ட ஆட்களுடன் காரில் அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

டிரைவர் ஆனந்தபாபுவை அனைவரும் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் டிரைவர் ஆனந்தபாபு நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

தங்கள் கண் முன்பே டிரைவர் தாக்கப்படுவதை கண்ட சக ஊழியர்கள் அந்த கும்பலிடம் சென்று, டிரைவரை தாக்கிய நபர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது அந்த கும்பலுக்கும், பஸ் ஊழியர்களுமிடையே மோதல்

பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி சென்றுவிட்டது. பிரச்சினைக்கு காரணமான அந்த நபர் மட்டும் டிரைவர்களிடம் சிக்கிக் கொண்டார். அந்த நபரை டிரைவர்கள் பிடித்து அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அண்ணாசதுக்கம் டிரைவர்கள் பேருந்தை இயக்க மறுத்துவிட்டனர். பேருந்துக்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த உதவி போலீஸ் கமிஷனர் பீர் முகமது அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் அண்ணாசதுக்கம் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

டிரைவர் தாக்கப்பட்ட தகவலறிந்த சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ராஜேந்திரனும் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தார். தாக்கப்பட்ட டிரைவர் ஆனந்தபாபுவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

டிரைவரை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதவி போலீஸ் கமிஷனர் பீர் முகமதுவிடம் கேட்டுக் கொண்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜேந்திரனிடம், பீர் முகமது உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த பஸ் டிரைவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு, அண்ணாசதுக்கம் பேருந்துநிலையத்திலிருந்து பேருந்தை இயக்க தொடங்கினர்.

வக்கீல்களால் தாக்கப்பட்ட டிரைவர் ஆனந்தபாபு சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நடத்துனர் சேகர் அதிர்ச்சியில் சற்று பதற்றத்துடனேயே காணப்பட்டார்.

டிரைவரை தாக்கிய நபரிடம் போலீஸ் உதவி கமிஷனர் பீர் முகமது நடத்திய விசாரணையில், அவர் பெயர் பரிதி என்பதும், சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் என்பதும் தெரிய வந்தது. அவருடன் டிரைவரை தாக்குவதற்காக காரில் வந்த 15 பேரும் வழக்கறிஞர்கள் என்றும் தெரிய வந்தது.

டிரைவர் ஆனந்தபாபு கொடுத்த புகாரில், வழக்கறிஞர் பரிதியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் போலீசார் விசாரிக்காமல் வழக்கறிஞர் பரிதியை கைது செய்திருப்பதாக கூறியும், அவரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய வழக்கறிஞர்கள் சாலைமறியல் இரவு 10 மணி வரை நீடித்தது. சாலைமறியல் போராட்டம் காரணமாக சிந்தாதிரிப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்களும், பேருந்து பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A city advocate was arrested for allegedly assaulting an MTC bus driver and a staff in an incident of road rage on Friday.
Please Wait while comments are loading...