For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு "நீட்" தேர்வு தேவையில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு 'நீட்' தேர்வு தேவையில்லை என்பதற்கு நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேர்வை கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், அதற்கான சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்து நடப்பு கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு "நீட்" நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்" என்ற மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கை கிராமப் புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் விதத்திலும், தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் கடைப் பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதியை நசுக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

m.k.stalin opposes NEET exam in tamilnadu

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துப் படிப்புகளிலும், முதுநிலை மருத்துவ கல்வியிலும் சேருவதற்கு "அகில இந்திய அளவில்" நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் விதமாக இருக்கிறது.

2013 ஆம் ஆண்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் அவர்கள் தலைமையிலான அமர்வு "நீட் தேர்வை" ரத்து செய்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்த தீர்ப்பில் "ஏன் நீட் தேவையில்லை" என்று அந்த அமர்வு குறிப்பிட்ட வி‌ஷயங்கள் இன்றும் மாறிவிடவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் "நீட் தேர்வு" தேவையில்லை என்று கூறியவற்றுள் மிக முக்கியமாக, அகில இந்திய அளவில் இப்படியொரு நீட் தேர்வை அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பாட திட்டம் இருக்கிறது. தனித் தனி பயிற்று முறை இருக்கிறது. ஆகவே அனைத்து மாணவர்களுக்கும் "அகில இந்திய தேர்வு" என்பது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும்.

நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு நகர்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், கோச்சிங் மையங்கள் கிராமப் புறங்களில் இல்லை. ஆகவே நகர்புற மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் சரி சமமாக போட்டியிட்டு நுழைவுத் தேர்வை எழுத முடியாது. நகர்ப்புறத்திற்கு மருத்துவர்கள் தேவை என்பதைப் போல் கிராமப் புறங்களுக்கும் மருத்துவர்கள் தேவை.

ஏனென்றால் கிராமப்புற சுகாதாரம் மிக முக்கியம். கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வி பயின்றால்தான் கிராம மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் எளிதில் கிடைப்பார்கள். "நீட் தேர்வால்" கிராமப்புறத்தில் டாக்டர்கள் உருவாகும் நிலை தடுக்கப்படும்.

இப்படி சுட்டிக்காட்டித் தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி "கிராமப் புற மாணவர்களை" கடுமையாக பாதிக்கும் "நீட் தேர்வு" செல்லாது என்று தீர்ப்பளித்தார் என்பதை மத்திய அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டது. வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வின் முன்பு நிலுவையில் இருக்கும் போதே நீட் தேர்வை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்து விட்டது.

இந்த "நீட்" நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, கிராமப்புற ஏழை எளிய முதல் தலைமுறையினர் மருத்துவர்களாக படித்து முன்னேறவும் பெரும் தடையாக இருக்கிறது

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களும் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் தலைவர் கருணாநிதி "தொழிற் கல்விக்கான நுழைவுத் தேர்வை" 2007ல் கழக ஆட்சி நடைபெற்ற போது ரத்து செய்தார். அதன் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்பட்டு கிராமப்புற மாணவர்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் உருவானார்கள்.

ஆனால் தலைவர் கருணாநிதி அளித்த சமூக நீதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் "நீட் தேர்வு" வந்திருப்பதால் தான் 4.1.2017 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் "நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" என்ற தீர்மானமே நிறை வேற்றப்பட்டது. சென்ற 20 ஆம் தேதி கூட மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டு, தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக அது ஒத்திவைக்கப்பட்டது.

"கல்வி" ஏற்கனவே மாநிலங்கள் சட்டம் இயற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட பட்டியலில் தான் இருந்தது. ஆனால் 1976ல் கொண்டு வரப்பட்ட 42வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் மாநிலங்களின் பட்டியலில் இருந்து "கல்வி" பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, மாநிலங்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டது. ஆனாலும், மாநில அரசுக்கு நீட் தேர்வு வி‌ஷயத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது.

பொதுப்பட்டியலில் உள்ள "மிருகவதை தடுப்புச் சட்டத்தை" திருத்தி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழி வகுக்கும் "மாநில மிருக வதை தடுப்புத் திருத்தச் சட்டம்" கொண்டு வந்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு திமுக திறந்த மனதுடன் ஆதரவளித்தது. அதே அதிகாரத்தைப் பயன் படுத்தி "தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை" என்பதற்கு நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்ட தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த சட்டமுன்வடிவை நிறை வேற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அளித்து, துணை நிற்கும்.

கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாகவும், சமூகநீதி பாதுகாக்கப்படவும் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்து இந்த வருடமே நீட் தேர்வு எழுவதற்கு விலக்களிக்கும் வகையில், தேவைப்பட்டால் சட்டமன்ற கூட்டத் தொடரை நீட்டித்துக் கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK working president M.K.Stalin opposes NEET exam in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X